வெளியிடப்பட்ட நேரம்: 08:34 (06/11/2017)

கடைசி தொடர்பு:16:21 (13/11/2018)

கனமழை எதிரொலி: எந்தெந்த மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை தெரியுமா?

கனமழையால், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 11 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்குப் பருவமழை தொடங்கி தீவிரமடைந்து வருகிறது. அதிலும் குறிப்பாக கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கனமழை பெய்துவருகிறது. தலைநகர் சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களுடன், திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களிலும் கனமழை தொடர்ச்சியாகப் பெய்து வருகிறது. குறிப்பாக சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் பெய்துவரும் மழையால் குடியிருப்புப் பகுதிகளில் வெள்ளம் சூழந்துள்ளதால், மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். சாலைகளிலும் மழைநீர் தேங்கியுள்ளதால் வாகனங்கள் ஊர்ந்துசெல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. 

மழைகாரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த ஒருவார காலமாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது. இன்றும் கனமழை தொடர்வதால், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவாரூர், நாகப்பட்டினம், விழுப்புரம், கடலூர் மற்றும்  புதுச்சேரி,காரைக்கால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கனமழை எதிரொலியாக அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். அதேநேரம், அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் சென்னைப் பல்கலைக்கழகத் தேர்வுகள் இன்று திட்டமிட்டபடி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.