வெளியிடப்பட்ட நேரம்: 10:55 (06/11/2017)

கடைசி தொடர்பு:15:59 (13/11/2018)

இன்றும் நாளையும் கனமழை நீடிக்கும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

'தமிழகம் மற்றும் புதுச்சேரியில், இன்றும் நாளையும் கனமழை நீடிக்கும்' என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழகம் முழுவதும் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துவருகிறது. கடந்த ஒரு வாரமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்துவருகிறது. இதனால், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், நாகை, திருவாரூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் மக்களின் இயல்புவாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் புறநகர் குடியிருப்புப் பகுதிகளில் மழை நீர் சூழ்ந்துள்ளது. டெல்டா பகுதிகளில் பெய்துவரும் கனமழையால், பல்லாயிரம் ஏக்கரில் விளைந்த பயிர்கள் நீரில் மிதக்கின்றன. இதனால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். 

 

 

இந்த நிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியின் ஒருசில பகுதிகளில், அடுத்த 48 மணி நேரத்துக்கு கனமழை பெய்யலாம் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதேபோல, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அநேக இடங்களில் மழை நீடிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் இடி, மின்னலுடன்கூடிய மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில், இன்று காலை முதலே மழை பெய்த நிலையில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.