வெளியிடப்பட்ட நேரம்: 22:06 (12/11/2017)

கடைசி தொடர்பு:15:39 (13/11/2018)

சென்னையில் மீண்டும் கனமழை! #Chennairains

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் பரவலாக கனமழை பெய்துவருகிறது. 


தமிழகத்தில் கடந்த மாதம் 27-ம் தேதி தொடங்கிய வடகிழக்குப் பருவமழை, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட வட மாவட்டங்களிலும், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களிலும் தொடர் மழை பெய்தது. இதனால், நாகை, திருவாரூர் மாவட்டங்களில் பல லட்சம் ஏக்கரிலான விவசாயப் பயிர்கள் நீரில் மூழ்கின. தலைநகர் சென்னையும், புறநகர்ப் பகுதிகளும் வெள்ளத்தில் மிதக்கும் சூழல் ஏற்பட்டது. குடியிருப்புப் பகுதிகளையும் வெள்ளம் சூழ்ந்ததால், மக்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகினர். கடந்தசில நாLkaளாக மழை குறைந்திருந்த நிலையில், சென்னை உள்ளிட்ட வடமாவட்டங்களில் மீண்டும் மழைபெய்யத் தொடங்கியிருக்கிறது. 

சென்னையைப் பொறுத்தவரை அம்பத்தூர், ஆவடி, பெரம்பூர், கொளத்தூர், அசோக் நகர், ஈக்காட்டுத்தாங்கல், தி.நகர், வடபழனி, ராயப்பேட்டை உள்ளிட்ட பல இடங்களில் கன மழை பெய்துவருகிறது. திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி, மீஞ்சூர், கும்மிடிப்பூண்டி, பெரியபாளையம், செங்குன்றம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கன மழை பெய்துவருகிறது. விடுமுறை தினம் என்பதால் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் அதிகம் இல்லை. ஏற்கெனவே பெய்த மழையால் வெள்ளக்காடான பகுதிகள் முழுமையாக அதிலிருந்து மீண்டுவராத நிலையில், தற்போது மீண்டும் கனமழை பெய்யத் தொடங்கியிருக்கிறது. சென்னை பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கும் திட்டம் இல்லை என்று தெரிவித்துள்ள ஆட்சியர் கலைச்செல்வன், அதுகுறித்து காலையில் முடிவு செய்யப்படும் என்றும் கூறினார்.