சென்னையில் சாரல் மழை; கேரளாவை முடக்கிய கனமழை! - வானிலை மையம் எச்சரிக்கை #RainUpdates

தமிழக கடலோரப் பகுதிகளில் இன்று மற்றும் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மழை
 

சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையில், `மத்திய மேற்கு வங்கக் கடல் மற்றும் தெற்கு ஆந்திரக் கடல் பகுதியில் மேலடுக்கு சுழற்சி உருவாகியுள்ளது. மேலடுக்கு சுழற்சி காரணமாகவும், வெப்பச் சலனம் காரணமாகவும் அடுத்த 24 மணிநேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. 

மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளான குமரி, நெல்லை, திண்டுக்கல், நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. குமரி மற்றும் அதையொட்டியுள்ள பகுதிகளில் கடல் காற்று மணிக்கு 35 கி.மீ முதல் 55 கி.மீ வரை வீசும். எனவே, மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

சென்னையில் கடந்த ஒரு வாரமாகவே மாலை நேரங்களில் மழை பெய்து வந்த நிலையில், இன்று காலை முதல் தொடர்ந்து லேசான மழை பெய்து வருகிறது. இதே போன்று குமரி மாவட்டத்திலும் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. இன்னும் 48 மணி நேரத்துக்கு மழை தொடரும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. சென்னை முழுவதும் குளிர்ந்த காற்று வீசி வருவதால், வார இறுதி நாள்களை மழையுடன் கொண்டாடி வருகின்றனர்.

மழை

இந்திய வானிலை மையம் அறிவிப்பு...

தென்மேற்குப் பருவமழை தென்னிந்தியாவில் தீவிரமடைந்துள்ளது. அதன் தொடர்ச்சியாகதான் தமிழகம், கேரளம் மற்றும் கர்நாடகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. முக்கியமாக கேரளாவில் பெய்து வரும் கனமழையால், இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு, வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 29 பேர் பலியாகியுள்ளனர். கேரளாவில் மழை நீடிக்கும் என்றும் தமிழகத்தில் கனமழை பெய்யும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!