மெளன உலகின் காதல் மன்னன் மறைந்த நாள் இன்று!

1920 காலகட்டங்களில் ஹாலிவுட் உலகின் அன்றைய காதல் மன்னனாகத் திகழ்ந்த ருடால்ஃப் வாலண்டினோவின் நினைவு நாள் இன்று. மெளனத் திரைப்படங்கள் மட்டுமே அறிமுகமாகியிருந்த அந்தக் காலகட்டத்தில், தன் மெளனத்தாலேயே பல்லாயிரக்கணக்கான ரசிகர்களைத் தன் வட்டத்துக்குள் இழுத்த காதல் மன்னனின் 91-ம் நினைவு நாள் இன்று.

ருடால்ஃப் வாலண்டினோ

ஹாலிவுட்டின் தவிர்க்க முடியாத நடிகர்களுள் மிக முக்கியமானவர், ருடால்ஃப் வாலண்டினோ. 1895-ம் ஆண்டில் இத்தாலியில் பிறந்தவர் ருடால்ஃப். தன்னுடைய 18-ம் வயதில், வேலை தேடி அமெரிக்காவின் நியூயார்க் நகரம் வந்தவரின் வாழ்க்கையில் அடுத்தடுத்து புயல்கள் வீசின. ஒரு நடனப் பயிற்றுனராக பணியில் சேர்ந்த ருடால்ஃபின் முதல் காதல் தந்த கசப்பான அனுபவங்களால், அவர் நியூயார்க்கை விட்டு வெளியேறி, லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் குடியேறவேண்டிய நிலை உருவானது. 

அங்கும் நடனப் பயிற்றுனராகப் பணியாற்றி வந்தவருக்கு, அடுக்கடுக்காகப் பல தோல்விகள். நடிப்புலகின்மீது ஆர்வம்கொண்டு சென்றவரை உடலமைப்பு, முக லட்சணம் எனக் காரணம்காட்டி நிராகரிக்கப்பட்டார். ஒரு நாள் எதிர்பாராத விதமாக ஜூன் மாத்யூஸ் என்ற திரைக்கதை எழுத்தாளரின் பார்வையில் விழுந்த ருடால்ஃபின் வாழ்க்கையில், ஏற்றங்கள் மட்டுமே நிறைந்து காணப்பட்டது. ஜூன் மாத்யூஸ் எழுத்தில், ‘தி ஃபோர் ஹார்ஸ்மென் ஆஃப் தி ஆப்போகாலிப்ஸ்’ என்ற முதல் படமே சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. அடுத்தடுத்து வெற்றிப்படங்கள் கொடுத்துவந்த ருடால்ஃபின் வாழ்க்கையை ஒரு மோதிரம் புரட்டிப்போட்டது. சான் ஃப்ரான்சிஸ்கோ நகரில் அவர் வாங்கிய ஒரு மோதிரம், ‘சாபம்’ நிறைந்ததாகக் கூறப்படுகிறது. அந்த மோதிரத்தால்தான் ருடால்ஃப் தோல்விகளைச் சந்தித்ததாகக் கூறப்படுகிறது. அதே மோதிரத்தால்தான் அவர் அல்சர் நோயால் பாதிக்கப்பட்டு, தனது 31-வது வயதிலேயே காலமானார்.

இன்று, அடிவயிற்றில் ஏற்படும் அல்சர் நோய்க்கு, ‘வாலண்டினோ சிண்ட்ரோம்’ என இவரது பெயராலேயே இந்நோய் குறிப்பிடப்படுகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!