Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஆராரிராரோ... நான் இங்கு பாட..! #HBDYuvan

அவன் ஓர் இசைக் குடும்பத்தின் பிள்ளை. அந்தக் குடும்பத்தில் ஓடி ஆடி விளையாடிக்கொண்டிருந்த 13 வயது பையனோட கனவு, ஆசை எல்லாமே 'பைலட்' ஆகணுங்கறதுதான். அந்தப் பையனோட லட்சியமே அதுதான். ஆனா, தன் அம்மாவோட விருப்பத்துக்காக அந்தப் பையன் பியானோ கிளாஸுக்குப் போனான். கனவில்கூட நினைச்சிருக்க மாட்டான், 'தான் ஒரு பெரிய மியூசிக் டைரக்டர் ஆவேன்'னு. அந்தப் பையன் வேற யாரும் இல்லை, நம்ம யுவன் (யுவன் சங்கர் ராஜா) தான்.

தயாரிப்பாளர் டி.சிவா, யுவனோட சில பாடல்களைக் கேட்டுட்டு, 'நீயே இந்தப் படத்துக்கு பாடல், பின்னணி இசை எல்லாம் பண்ணிடு'னு சொல்லிட்டாரு. உடனே யுவன், தன் பெற்றோர்கிட்ட சொல்லிட்டு அந்த வாய்ப்பை வாங்கிட்டாரு. அதுதான், யுவனோட அறிமுகப் படமான 'அரவிந்தன்', 1997ல் ரிலீஸ் ஆச்சு.

இந்த படம் ரிலீஸ் ஆனபோது, யுவனுக்கு 16 வயசுதான்.  தமிழ்நாடு மட்டும் அல்ல இந்தியாவே இன்பஅதிர்ச்சி அடைஞ்சுது, இந்தியாவிலேயே இளம் வயது இசையமைப்பாளர் என்பதற்காக அடுத்து வந்த 'வேலை', 'கல்யாண கலாட்டா' சரி வர போகவில்லை.

இசைஞானி இளையராஜாவின் மகன் என்பதைத் தாண்டி, தன் திறமையின் மூலம் சினிமாவில் தடம் பதித்தார் யுவன்.
1999ல் வசந்த் இயக்கத்தில் வெளிவந்த 'பூவெல்லாம் கேட்டுப்பார்' யுவனுக்கு மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்தது. இசை விமர்சகர்களால் பெரிதும் பாராட்டப்பட்டார். இதில், 'இரவா பகலா', 'சுடிதார் அணிந்து' போன்ற பாடல்களால்  'ஆல் டைம் ஹிட்'களைக் கொடுத்தார்.

டைரக்டர் ஏ.ஆர்.முருகதாஸின் அறிமுக படமான 'தீனா' மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்தப் படத்தின் வெற்றிக்கு யுவனும் முக்கியக் காரணம். அடுத்து வந்த 'துள்ளுவதோ இளமை', 'காதல் கொண்டேன்', '7ஜி ரெயின்போ காலனி', 'தீபாவளி' என இளைஞர்களை வசீ்கரிக்கும்படி இசையமைத்து, இளம் தலைமுறையின் இதயத்தைக் கவர்ந்தார்.

'அறிந்தும் அறியாமலும்', 'புதுப்பேட்டை', 'பில்லா', 'மங்காத்தா' போன்ற படங்களின் பின்னணி இசை மிகவும் பேசப்பட்டது. வணிகரீதியான படங்கள் மட்டுமன்றி, கலை சார்ந்த படைப்புகளுக்கும் யுவனின் பங்கு போற்றுதலுக்குரியதாக அமைந்தது. தியாகராஜன் குமாரராஜாவின் இயக்கத்தில் உருவான 'ஆரண்ய காண்டம்' படத்துக்கு இசை அமைத்து, உலகப் புகழ் பெற்ற இசை அமைப்பாளர்களின் கவனத்தை ஈர்த்தார்.

'பருத்தி வீரன்' படத்தின் பாடல் மற்றும் பின்னணி இசை மிகவும் பாராட்டப்பட்டது. 'ஊரோரம் புளியமரம்' பாடல், அந்த வருடம் முழுவதும் உலகம் எங்கும் ஒலித்ததே இதற்கு சாட்சி.

(சிவா மனசுல சக்தி) 'ஒரு கல் ஒரு கண்ணாடி' , போகாதே (தீபாவளி), நினைத்து நினைத்து (7ஜி ரெயின்போ காலனி), இதுவரை (கோவா) என பல பாடல்களினால் இளசுகளின் மனதைக் கொள்ளையடித்தார். தன் இசையில் மட்டுமல்லாமல், பிற இசையமைப்பாளர்களுடனும் பணியாற்றியுள்ளார். ஏ.ஆர்.ரஹ்மானுடன்  'கடல் ராசா நான்', ஜி.வி-யுடன் 'முத்தம் கொடுத்த மாயக்காரி', குறளரசனுடன் 'கண்ணே உன் காதல்', இளையராஜாவுடன் 'சாய்ந்து சாய்ந்து' எனப் பல ஹிட் பாடல்களைப்  பாடியுள்ளார்.

தனது 100-வது படமான 'பிரியாணி'யில், 'எதிர்த்து நில்' என்ற ஒரு பாடலுக்கு இமான், ஜி.வி. பிரகாஷ், விஜய் ஆண்டனி, தமன் ஆகியோரை ஒன்றிணைத்துப் பாடினார். 2009ல் வெளியான 'பையா', யுவனின் கெரியரில் மைல் ஸ்டோன் வெற்றியாகக் கருதப்படுகிறது. அப்போது, எடுக்கப்பட்ட ஒரு கணக்கெடுப்பின்படி, இந்திய அளவில் சிறந்த 20 பாடல்களில் முதல் பாடலாக 'துளித்துளி' (பையா) இடம் பெற்றது. அதிக முறை இந்திய வானொலியில் ஒளிபரப்பப்பட்ட பாடல் என்ற சாதனை படைத்தது.

தன் தாய் ஜீவாவின் மறைவு, யுவனிடையே பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. அதிலிருந்து மீண்டு(ம்) வர சில காலம் ஆனது. சிறு வயதிலிருந்தே தன் தாயின் மேல் அதிக அளவு அன்புகொண்ட யுவன், தான் இசையமைத்த 'ராம்' படத்தில் இடம்பெற்ற 'ஆராரிராரோ' பாடலைத் தன் தாய்க்குச் சமர்ப்பணம் செய்வதாகக் கூறி, தன் பாசத்தை வெளிப்படுத்தினார்.

'தன் தாயின் பிறந்த நாளான ஏப்ரல் 7 அன்று, தனக்குப் பெண் குழந்தை பிறந்ததால் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்' என்று கூறினார். ஹிப் ஹாப் இசை மற்றும் ரீமிக்ஸ் போன்றவற்றை தமிழுக்குக் கொண்டுவந்து ட்ரெண்ட் செட்டராக விளங்கினார். 20 வருடங்களில் 100-க்கும் மேற்பட்ட படங்களில் இசையமைத்த யுவன், இரண்டு ஃபிலிம்ஃபேர் விருதுகள்,  இரண்டு மாநிலத் திரைப்பட விருதுகள் போன்றவற்றைப் பெற்றுள்ளார்.

2006-ம் ஆண்டு வெளியான 'ராம்' திரைப்படத்துக்காக, சைப்ரஸ் சர்வதேச திரைப்பட விழா விருதைப் பெற்றுள்ளார். இந்த விருதைப் பெற்ற ஒரே இந்திய இசையமைப்பாளர் என்ற சிறப்பைப் பெற்றார்.

பிக் பட்ஜெட் படங்களுக்கு மட்டுமல்லாமல், சிறிய பட்ஜெட் படங்களுக்கும்கூட இசையமைத்து, பல புதுமுக இயக்குநர்களுக்குத் தோள் கொடுத்துவருகிறார். வூல்ஃபெல் (woolfell)  என்ற ஹாலிவுட் படத்துக்கும் இசையமைத்து வருகிறார். இசையமைப்பாளர், பாடகர் மட்டுமன்றி "u1 records" என்ற இசை நிறுவனத்தைத் தொடங்கி, சிறந்த பாடல்களை வெளியிட்டுவருகிறார். அது மட்டுமல்லாமல், தயாரிப்பாளர் அவதாரத்தையும் விரைவில் எடுக்க உள்ளார்.

’நெஞ்சம் மறப்பதில்லை’, ’செம போத ஆகாத’, 'பலூன்' எனப் பல படங்கள் யுவனின் இசையில் விரைவில் வர இருக்கின்றன. யுவனின் இசை, நம்மை இளம் பருவத்திலேயே மிதக்கவைப்பவை!

வாழ்த்துகள் ப்ரோ!

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement