Published:Updated:

நாங்கள் சராசரியானவர்கள் அல்ல!

கவின் மலர்படம் : கே.ராஜசேகரன்

நாங்கள் சராசரியானவர்கள் அல்ல!

கவின் மலர்படம் : கே.ராஜசேகரன்

Published:Updated:
##~##

ளையராஜா, ராஜ்குமார் ஸ்தபதி, பாரதிராஜா, சிவபாலன், ஹாசிப்கான்... விகடனின் பக்கங்களைச் சமீபமாக அலங்கரிக்கும் இளம் தலை முறை ஓவியர்கள்! தூரிகைக் கலையில் தொழில்நுட்பம் புகுத்தி இயல்பும் அழகுமாக மிளிரவைக்கும் ரங்கோலி இளைஞர்கள். 'தூரிகை முகம் தாண்டி நிஜ முகம் காட்டலாமே!’ என்று ஓவியர்கள் ஐவரையும் 'தக்ஷின் சித்ரா’வில் ஒன்று சேர்த்தேன். அழகோவியமாகப் 'பெண்கள்’ படைக்கும் இளையராஜா 'செல்ஃப் இன்ட்ரோ’ படலத்தைத் துவக்கிவைத்தார்...      

''கும்பகோணத்துக்குப் பக்கமா, எனக்கு செம்பிய வரம்பல் கிராமம். கும்பகோணம் ஓவியக் கல்லூரியில் படிப்பு. ஓவியர் ரவிவர்மா... மாமா, மச்சான், அக்கா, அண்ணினு அரண்மனையில் அவரைச் சுத்தி இருந்தவங்களை வரைஞ்சு இருப்பார்.  ராஜ பரம்பரைக்கு ஏத்த பேக்ரவுண்ட். நாம எளிய பரம்பரைதானே! வீடு, திண்ணை, வாசல், முற்றங்களில் நான் பார்த்த, பழகிய பெண்களை நிறைய வரைகிறேன். எனக்கு அஞ்சு அக்கா, அஞ்சு அண்ணன். அஞ்சு அக்காக்கள் கல்யாணம் பண்ணிப் போனாலும் அஞ்சு அண்ணிகள் வீட்டுக்கு வந்தாங்க. பெண்கள் சூழ் உலகில் இருந்ததால், பெண்கள்தான் என் ஓவியங்களில் அதிகம் இடம் பிடிக்கிறார்கள்!''

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நாங்கள் சராசரியானவர்கள் அல்ல!

குவிந்துகிடக்கும் பாடப் புத்தகங்களின் மீது ஜெயலலிதா அடமாக அமர்ந்திருக்கும் ஓவியத்தின் மூலம் கவனம் கவர்ந்த ஹாசிப்கான் தொடர்கிறார். ''மார்த்தாண்டம் பக்கம் இரவிப்புதூர்க்கடைக்காரன் நான். சின்ன வயசுல இருந்தே ஓவியங்கள் மேல் ஆர்வம். ராஜசேகர்னு ஒருத்தர்தான் என் மானசீகக் குரு. சோமாலியா பஞ்சத்தை வெச்சு அவர் விகடன்ல வரைஞ்ச ஒரு குழந்தையின் படம்தான் என்னை முழுக்கவே ஓவியம் பக்கம் திருப்பியது. 2002-ல் விகடனின் மாணவப் பத்திரிகையாளர் திட்டத்தில் பயிற்சி எடுத்தேன். இப்போது மீண்டும் விகடனோடு தொடர்பு. கம்ப்யூட்டர் சயின்ஸ் படிச்சுட்டு, ஒரு கிராஃபிக்ஸ் கம்பெனியில் வேலை பார்க்கிறேன்!''

இடமும் இடம் சார்ந்த மனிதர்களும்தான் சிவபாலன் சாய்ஸ். ''சொந்த ஊர் கும்பகோணம். அங்கு ஓவியக் கல்லூரியில் படிச்ச நேரத்தைக் காட்டிலும், ஆறு, வயல், நதினு நான் ஊர் சுத்திட்டே இருந்தது தான் அதிகம். அதனாலேயே லேண்ட்ஸ் கேப் ஓவியங்கள்தான் என் விருப்பமாஇருந் தது. கிராமத்துத் திருவிழாக்கள், சுங்கிடிச் சேலை, கண்டாங்கிச் சேலைப் பெண்கள்னு நான் பார்த்து உணர்ந்தது எதுவுமே இன்னும் கொஞ்ச வருஷங்கள்ல இல்லாமப் போயிடுமோனு பயமா இருக்கு!'' என்கிறார் சிவபாலன்.

நாங்கள் சராசரியானவர்கள் அல்ல!

ஒவ்வொரு முகத்தின் பிரத் யேக ரேகை, உடல்மொழி களைத் தத்ரூபமாகப் பிரதிபலிப்பவை ராஜ்குமார் ஸ்தபதி யின் ஓவியங்கள். 'பொள்ளாச்சி யில் பிறந்து வளர்ந்தவன். படிச் சது கும்பகோணம் ஓவியக் கல்லூரியில். அப்பவே இளையராஜாவும் சிவபாலனும் எனக்கு நல்ல பழக்கம். எனக்கு உழைப்பு பிடிக்கும். உழைப்பவர்களை ரொம்பப் பிடிக்கும். குறிப்பா,  ரிக்ஷாக்காரர்கள்.  ரிக்‌ஷாவை அவங்க ஓட்டினாலும், அதுக்குப் பக்கத்துல நின்னாலும், உறுதியா, அழகா, கம்பீரமாத் தெரிவாங்க. அதான் அவங்க அடிக்கடி என் ஓவியத்தில் இடம் பிடிக்கிறாங்க!'' என்று நெகிழ்கிறார்.

அதுவரை அமைதியாக இருந்த பாரதிராஜா ஆரம்பித்தார். 'எனக்கு புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டைக்குப் பக்கத்தில் வலவம்பட்டிதான் சொந்த ஊர். போலீஸ் வேலைக்குப் போகத்தான் ஆசைப்பட்டேன். ஆனா, காக்கி உடுப்பைக் காட்டிலும் வண்ணங்கள் சிதறிக்கிடக்கும் கேன்வாஸ் என்னை ஈர்த்து இழுத்தது. சென்னை அரசு கவின் கலைக் கல்லூரி எனக்கான வானவில் வாசலைத் திறந்தது!''

நாங்கள் சராசரியானவர்கள் அல்ல!

அறிமுகத்துக்குப் பின் அரட்டைப் படலம்...

''வெளிப் பார்வைக்குப் பெண்கள் சிரிச்சுட்டு இருந்தாலும் அவங்களுக்குனு ஒரு உள்முகம் இருக்கு. அதை என் ஓவியங்கள் தத்ரூபமாப் பிரதிபலிக்கணும்னு ஆசை. பெண்களின் காத்திருப்புதான் என் கவனத்தை அதிகமாகக் கவர்ந்த அம்சம்!'' என்கிறார் இளையராஜா.

நாங்கள் சராசரியானவர்கள் அல்ல!

''வெளியே தெரியாத விஷயங்களைப் பூடகமாகப் பிரதிபலிப்பதுதான் ஒரு ஓவியத்தின் வெற்றி. வீதியில் பசங்களுக்கு விதவிதமா வாட்ச், செயின், ரயில்னு வேக வேகமா செஞ்சு கொடுப்பார் ஒரு பம்பாய் மிட்டாய்க்காரர். நொடிகளில் குழந்தைகள் மனசைக் கொள்ளைகொள்ளும் கிரியேட்டிவிட்டி. மழை, வெயில்ல வீதி வீதியா அலைஞ்சு திரிய வேண்டிய சோகத்தை உள்ளுக்குள் புதைச்சுக்கிட்டு குழந்தைகளுக்காகச்  சிரிச்சுக்கிட்டே மிட்டாய் கொடுப்பார். இப்படியேதான் தெருக்கூத்துக் கலைஞர் கள், பிளாட்ஃபாரவாசிகள்னு மனசுக்கு ஒரு வாழ்க்கையும் உலகத்துக்குனு ஒரு வேஷமும் போடும் மனிதர்களின் உணர்ச்சிகள் எனக்குத் தூண்டுகோலா இருக்கும்!'' - இது ஸ்தபதியின் வாக்குமூலம்.

''கலையும் கற்பனையும் உங்களை உற்சாகப்படுத்தும். ஆனால், அதன் மூலம் உங்களுக்கு போதுமான வருமானம் கிடைக்கிறதா?'' என்ற கேள்விக்கு, ''போதும் போதும் எனும் அளவுக்குக் கிடைக்கிறது!'' என்று ஐவர் சார்பாகப் பதில் அளிக்கும் பாரதிராஜா மேலும் தொடர்கிறார்.  

நாங்கள் சராசரியானவர்கள் அல்ல!

''ஆரம்பத்தில் நாங்களும் கஷ்டப்பட்டு இருக்கோம். கண்காட்சி நடத்தக்கூட காசு இல்லாமக் கஷ்டப்பட்டோம். ஆனா, இப்போ வெளிநாடுகளிலும் எங்க ஓவியங்களுக்கு நல்ல மார்க்கெட் இருக்கு. இந்த நிலைமைக்கு வர நாங்க நிறைய உழைச்சிருக்கோம். எத்தனையோ அவமானங்களைக் கடந்து வந்திருக்கோம்!'' என்கிறார் நிறைவாக.

''வரைவதில் ஓவியர்களுக்கு ஆத்ம திருப்தி கிடைக்கும். அதில் எந்தச் சந்தேகமும் இல்லை. ஆனால், எங்களால் சராசரி மனிதர்களாக இருக்க முடியலை. எதைப் பார்த்தாலும் அதை ஓவியக் கண்ணோட்டத்துடனேயே அணுக வேண்டியிருக்கு. ஒரு சாவு வீட்டில் பிணத்தைப் பார்த்தால்கூட, அதில் மாலை எந்தக் கோணத்தில் விழுந்திருக்கு, யார் எப்படி அழுவுறாங்க, அவங்க முகங்களில் என்னெல்லாம் பாவங்கள் வெளிப்படுதுனுதான் கவனம் போகுது. சில சமயம் நாம சாதாரணமாவே இருக்க முடியாதோனு சின்ன வருத்தமும் இருக்கு. ஆனா, எங்கள் படைப்புகளுக்கு அந்த உணர்வுதான் நியாயம் செய்யும்னு நினைக்கிறப்போ, காத்துல கலைஞ்சு மறையுற மெழுகுவத்தி புகை கணக்கா அதெல்லாம் மறைஞ்சிருது!''- மெல்லிய குரலில் சிவபாலன் சொல்ல, புன்னகையால் ஆமோதிக்கிறார்கள் மற்ற நால்வரும்!