அரசியலில் வெல்ல பெயர், புகழ் மட்டும் போதாது..! - ரஜினிகாந்த்

அரசியலில் வெல்ல பெயர், புகழ் போதாது என்பது கமல்ஹாசனுக்குத் தெரியும் என்று ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். 

rajinikanth

சென்னை அடையாற்றிலுள்ள நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மணிமண்டபம் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. அதில், துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். மேலும் சிவாஜி குடும்பத்தினரும் ரஜினி, கமல் உள்ளிட்ட திரைப் பிரபலங்களும் கலந்துகொண்டனர். அந்த விழாவில் கலந்துகொண்டு பேசிய நடிகர் ரஜினிகாந்த், 'துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ரொம்ப அதிர்ஷ்டசாலி. அது பலமுறை நிரூபணமாகியுள்ளது. காலகாலத்துக்கும் உயர்ந்து நிற்கப்போகும் இந்த மணிமண்டபத்தைத் திறக்கும் பாக்கியம் ஓ.பன்னீர்செல்வத்துக்குக் கிடைத்துள்ளது. சிவாஜி கணேசன், தமிழ்நாட்டு மக்களை மட்டும் ரசிக்க வைக்கவில்லை.

இந்தியாவிலுள்ள அனைத்து மாநிலங்களிலும் உள்ள ஒவ்வொரு கதாநாயகனையும், இந்த மாதிரி ஒரு நடிகனை இனிமேல் பார்க்க முடியாது, அவரைப்போல் நடிக்கவும் முடியாது என்று சொல்ல வைத்தவர். சிவாஜி கணேசன் அங்கீகரிக்கப்பட்ட ஒரு மகா நடிகன்  அதற்காகவா அவருக்கு இந்த மணிமண்டபம் எழுப்பினார்கள், சிலை வைத்தார்கள்? சிவாஜி கணேசன் ஒரு நடிகனாக மட்டும் இருந்திருந்தால் அவருக்கு சிலைவைத்திருக்கமாட்டார்கள். அவருக்கு எதுக்காகச் சிலையென்றால், நடிப்பாற்றலிலிருந்து வரலாறு படைத்த சுதந்திரப் போராட்ட வீரர்களையும் சுதந்திரத்துக்குப் பாடுபட்ட சரித்திர நாயகர்களையும் அவர்களுடையை வரலாற்றையும் படமாக்கி அவர்கள் கதையைத் தமிழ்நாட்டில் உள்ள கடைக்கோடி மக்கள் வரைக்கும் சொன்னார்.

நடிகர் சிவாஜி கணேசன் நடிப்பில் சக்கரவர்த்தி. நடிப்பில், பாவனையில், வசன உச்சரிப்பில், நடையில் ஒரு புரட்சியை ஏற்படுத்தியவர். கடவுள் மறுப்புக் கொள்கை உச்சத்தில் இருந்தபோது சிவாஜி ஆன்மிகப் படங்களில் நடித்து வெற்றிபெற்றவர். நாம் செத்த பிறகு மண்ணோடு மண்ணாகப் போகிறவர்களுடன் பழகுகிறோம். செத்த பிறகு சாம்பலாகப் போகிறவர்களுடன் பழகுகிறோம். ஆனால், செத்த பிறகு சிலையாகப் போகிறவருடன் பழகுறது ரொம்ப அபூர்வம். பல கோடியில் ஒருத்தர்தான் செத்த பிறகு சிலையாகப் போவார்கள். அவரவர் வீட்டில் சிலை வைத்துக்கொள்ளலாம். அது விஷயம் இல்லை. இந்தச் சிலை மக்களால் அங்கீகரிக்கப்பட்ட அரசாங்கத்தால் வைக்கப்பட்டது. சிவாஜி அரசியலுக்கு வந்து தனிக்கட்சி தொடங்கி அவருடைய தொகுதியிலேயே நின்று தோற்றுப்போனார்.

அது அவருக்கு நடந்த அவமானம் அல்ல. அந்தத் தொகுதி மக்களுக்கு நடந்த அவமானம். இதிலிருந்து ஒரு பாடத்தைக் கற்றுக்கொள்ள வேண்டும். அரசியலில் வெற்றிபெறுவதற்கு பெயர், சினிமா புகழ் மட்டும் போதாது. என்ன வேண்டும் என்பது எனக்கு நிச்சயமாகத் தெரியாது. அதற்கு மேல் என்ன வேண்டும் என்பது நடிகர் கமல்ஹாசனுக்குத் தெரியும். இரண்டு மாதங்களுக்கு முன்பு நான் கேட்டிருந்தால், அரசியல் வெற்றிபெறும் ரகசியத்தை எனக்கு சொல்லியிருப்பார். கமல், நீங்க சினிமாவில் மூத்த நடிகர். அரசியல் ஜெயிப்பது எப்படி என்பதைத் சொல்லுங்கள். நான் உங்கள் தம்பி என்றால், நீ என்கூட வா சொல்றேன் என்கிறார்' என்று தெரிவித்தார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!