வெளியிடப்பட்ட நேரம்: 17:15 (04/10/2017)

கடைசி தொடர்பு:17:15 (04/10/2017)

’மெர்சல்’ படத்தின் மீதான தடை தொடர்கிறது

மெர்சல் படத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஏற்கெனவே இடைக்காலத் தடை விதித்திருந்த நிலையில், அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. 

அட்லி இயக்கத்தில் விஜய், எஸ்.ஜே.சூர்யா, சமந்தா, நித்யா மேனன், காஜல் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் மெர்சல். இப்படத்தின் பாடல்கள் மற்றும் டீசர் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. படம் தீபாவளிக்கு வெளியாகும் என கூறப்பட்ட நிலையில் கடந்த செப்டம்பர் 22-ம் தேதி ராஜேந்திரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மெர்சல் படத்துக்கு எதிராக வழக்கு தொடர்ந்திருந்தார்.

அந்த வழக்கில், 2014 -ம் ஆண்டு ஏ.ஆர் ஃபிலிம்  ஃபேக்டரி  எனும் நிறுவனம் ’மெர்சல் ஆயிட்டேன்’ என்ற தலைப்பைப் பதிவு செய்ததால் ’மெர்சல்’ படத்தைத் தடை செய்ய வேண்டும் எனக் கூறப்பட்டது. அப்போது மெர்சல் படத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது. இதனால் தடை நீங்கும் வரை படம் குறித்து விளம்பரத்துக்குத் தடை விதிக்கப்பட்டது. 

இந்த வழக்கு விசாரணை இன்று மீண்டும் நடைபெற்றது. அப்போது இரு தரப்பு சார்பாகவும் விளக்கங்கள் அளிக்கப்பட்டன. விசாரணை முடிவடைந்த நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பை வரும்  6-ம் தேதிக்கு ஒத்திவைத்தது நீதிமன்றம். அதுவரை மெர்சல் படம் தொடர்பான விளம்பரமும் தடை செய்யப்பட்டுள்ளது. தடை தொடருமா படத்துக்கு மெர்சல் பெயர் கிடைக்குமா என வரும் வெள்ளி அன்று தெரிய வரும்.