வெளியிடப்பட்ட நேரம்: 19:30 (04/10/2017)

கடைசி தொடர்பு:08:51 (05/10/2017)

’தமிழ் சினிமாவுக்கு மணிமண்டபம் கட்டாதீர்கள்’: விஷால் வேண்டுகோள்

திரைப்படங்களுக்குக் கூடுதலாக 10 சதவிகிதம் கேளிக்கை வரி விதித்து தமிழ் சினிமாவுக்கு மணிமண்டபம் கட்டாதீர்கள் என்று அரசுக்குத் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் வேண்டுகோள் விடுத்தார். 


தமிழ்ப் படங்களுக்கு 10 சதவிகிதமும், மற்ற மொழிப் படங்களுக்கு 20 சதவிகிதமும் கேளிக்கை வரி விதித்த தமிழக அரசின் உத்தரவு கடந்த செப்டம்பர் 27-ம் தேதி முதல் அமலுக்கு வந்தது. ஏற்கெனவே ஜி.எஸ்.டி. வரி அமலில் இருக்கும்போது அரசின் இந்தப் புதிய வரிவிதிப்பு சினிமாத் துறையை நசுக்கும் செயல் என்று திரைப்படத்துறை சார்ந்த பல்வேறு அமைப்புகளும் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வந்தன. மேலும், இந்த வரி விதிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து சென்னையில் உள்ள சில தனியார் மல்டி ஃபிளக்ஸ் தியேட்டர்கள் நேற்று ஒருநாள் இயங்கவில்லை. இந்தநிலையில், அரசின் புதிய வரி விதிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து அக்டோபர் 6 முதல் புதிய திரைப்படங்களை வெளியிடப்போவதில்லை என்று திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் தெரிவித்திருந்தது. 

இதுதொடர்பாகத் தமிழ்த் திரைப்பட வர்த்தக சபை, தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம், திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகளின் கூட்டு ஆலோசனைக் கூட்டம் சென்னையில் நடந்தது. அண்ணாசாலையில் உள்ள ஃபிலிம் சேம்பர் வளாகத்தில் நடைபெற்றக் கூட்டத்துக்குப் பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த விஷால் உள்ளிட்ட திரைத்துறை அமைப்பைச் சேர்ந்த நிர்வாகிகள், ‘தமிழக அரசின் புதிய வரிவிதிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து, வரும் வெள்ளிக்கிழமை முதல் புதிய திரைப்படங்களை வெளியிடப்போவதில்லை என்று முடிவெடுத்துள்ளதாக அறிவித்தனர். விஷால் பேசுகையில், ‘இதுதொடர்பாக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. வட்டிக்குப் பணம் வாங்கி படத்தை முடித்து, அதற்காக விளம்பரம் செய்து திரையரங்கில் படம் வெளியாகும்போது, அதில் 40 சதவிகிதத் தொகையை அரசுக்கு வரியாகச் செலுத்த முடியாது. இதனால், வேறு வழியின்றி புதிய திரைப்படங்களை வரும் வெள்ளிக்கிழமை முதல் ரிலீஸ் செய்வதில்லை என்று வலியுடன் அறிவிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. 

நாட்டின் மற்ற மாநிலங்களில் ஜி.எஸ்.டி. வரி மட்டுமே செலுத்த வேண்டிய நிலை இருக்கும்போது, கூடுதலாக கேளிக்கை வரி விதிப்பு முறை தமிழகத்தில்தான் முதல்முறையாக அமலாகியிருக்கிறது. இந்தக் கேளிக்கை வரியை அரசு நிச்சயம் ரத்துசெய்யும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. சிவாஜிக்கு மணி மண்டபம் கட்டியதற்கு அரசுக்குத் திரைத்துறை நன்றி தெரிவித்தது. அதேபோல், கூடுதலாக 10 சதவிகிதம் கேளிக்கை வரி விதித்து திரைத்துறைக்கும் மணிமண்டபம் கட்டாதீர்கள் என்பதை தமிழக அரசுக்கு வேண்டுகோளாக வைக்கிறோம். பைரஸி உள்ளிட்ட விவகாரங்களால் கடுமையான பாதிப்பை திரைத்துறை சந்தித்துவரும் சூழலில் எங்களால் கூடுதலாக 10 சதவிகித வரி கட்ட முடியாது என்று தெரிவித்தார். இந்த முடிவைத் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம், விநியோகஸ்தர்கள் சங்கம் மற்றும் திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் ஆகியவை கூட்டாக எடுத்ததாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.