தடைகளைத் தாண்டி வெளியான 'மெர்சல்'! | Mersal released in TN

வெளியிடப்பட்ட நேரம்: 09:10 (18/10/2017)

கடைசி தொடர்பு:15:19 (18/10/2017)

தடைகளைத் தாண்டி வெளியான 'மெர்சல்'!

நடிகர் விஜய் நடித்துள்ள 'மெர்சல்' திரைப்படம், பல்வேறு தடைகளைத் தாண்டி, அறிவித்தபடி தீபாவளியான இன்று வெளியானது. 


'தெறி' படத்துக்குப் பின்னர் இயக்குநர் அட்லியுடன் நடிகர் விஜய் இரண்டாவது முறையாக கைகோத்தார். தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் 100-வது படமான இது, படத்தின் தலைப்பு முதல் தணிக்கைக் குழு சான்றிதழ் வரை பல்வேறு தடைகளைச் சந்தித்தது. 'மெர்சல்' தலைப்புக்கு உரிமை கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் வெற்றிபெற்ற பின்னர், 'படத்தில் விலங்குகள் பயன்படுத்தப்பட்டுள்ளதால், விலங்குகள் நல வாரியத்தின் தடையில்லாச் சான்று பெற வேண்டும்' என்று தணிக்கைக் குழு கூறியது. இதனால் திட்டமிட்டபடி 'மெர்சல்' படம் தீபாவளிக்கு திரைக்கு வருமா என்ற சந்தேகம் எழுந்தது. இருப்பினும், படத்தை தீபாவளியன்று திரைக்குக் கொண்டுவர வேண்டும் என்பதில் நடிகர் விஜய்யும், தயாரிப்பு நிறுவனமும் உறுதியாக இருந்தனர். 

விலங்குகள் நலவாரியத்தின் தடையில்லாச் சான்று கிடைத்தவுடன், படத்துக்கு ’யு/ஏ’ சான்றிதழை, தணிக்கைக் குழுவினர் நேற்றுதான் வழங்கினார்கள். இதையடுத்து, அறிவித்தபடி தமிழகம் முழுவதும் 'மெர்சல்' திரைப்படம் இன்று திரைக்கு வந்தது. சென்னையில் காலை 4 மணி முதலே திரையரங்குகளில் 'மெர்சல்' படம் திரையிடப்பட்டுவருகிறது. இதனால், உற்சாகமடைந்துள்ள விஜய் ரசிகர்கள், படம் திரையிடப்படும் தியேட்டர்கள் முன் பட்டாசுகளை வெடித்துக் கொண்டாடிவருகிறார்கள். 'மெர்சல்' படம்  வெளியாக உதவியதற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை, நடிகர் விஜய் நேற்று சந்தித்து நன்றி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.