பெங்களூரில் விஜய் ரசிகர்கள் - கன்னட அமைப்பினர் மோதல்! 'மெர்சல்' படக்காட்சிகள் ரத்து

பெங்களூரு மற்றும் மைசூரில், விஜய் ரசிகர்களுக்கும் கன்னட அமைப்பினருக்குமிடையே நடந்த மோதலால், 'மெர்சல்' படக் காட்சிகள் ரத்துசெய்யப்பட்டன. 

அட்லி இயக்கத்தில், நடிகர் விஜய் 3 வேடங்களில் நடித்துள்ள 'மெர்சல்' படம் தீபாவளி அன்று திரைக்கு வந்தது. தலைப்பு முதல் தகுதிச் சான்றிதழ் வரை பல்வேறு தடைகளைத் தாண்டி  திரைக்கு வந்த 'மெர்சல்' படம்,  தமிழகம் மட்டுமன்றி உலகம் முழுவதும் வெளியிடப்பட்டது.   

 

இந்த நிலையில், கர்நாடக மாநிலம் பெங்களூரு மற்றும் மைசூரிலும் படம் திரையிடப்பட்டது. இதையொட்டி, மாநில விஜய் ரசிகர்கள் பேனர்கள் மற்றும் கட் -அவுட்கள் வைத்திருந்தனர்.  படம் திரையிடப்பட்டபோது, பெங்களூரு கங்கா நகரிலுள்ள ஸ்ரீ ராதாகிருஷ்ணா திரையரங்கை முற்றுகையிட்ட கன்னட அமைப்பினர், 'தமிழ்ப் படங்களை இங்கு திரையிடக்கூடாது' என்ற கோஷத்துடன் பேனர்கள் மற்றும் கட்-அவுட்களைக் கிழித்தனர். இதனால், விஜய் ரசிகர்களுக்கும் கன்னட அமைப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், இரு தரப்பையும் சமாதானப்படுத்தினர். இந்த மோதல் சம்பவத்தால், 'மெர்சல்' படத்தின் காட்சிகள் ரத்துசெய்யப்பட்டன. இதேபோல மைசூர் பகுதியிலும் கன்னட அமைப்பினரின் எதிர்ப்பால்' மெர்சல்' படக்காட்சிகள் ரத்துசெய்யப்பட்டன. இதனால், அந்தப் பகுதியில் பரபரப்பு நிலவியது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!