’ஜிஎஸ்டி தொடர்பான வசனத்தில் தவறு ஏதும் இல்லை’-தணிக்கைக்குழு மண்டல அதிகாரி விளக்கம்

தீபாவளி தினத்தன்று உலகம் முழுவதும் வெளியான மெர்சல் படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மெர்சல் படம் வெளியாவதற்கு முன்னர் பல சிக்கல்களைச் சந்தித்துப் பின்னர் கடைசி நேரத்தில் வெளியானது. 

படம் வெளியான பின்னரும் படத்துக்குச் சிக்கல் குறைந்தபாடில்லை. படத்தில் மத்திய அரசின் ஜிஎஸ்டி வரி மற்றும் டிஜிட்டல் இந்தியா குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகள் இடம் பெற்றிருப்பதாக தமிழக பா.ஜ.க-வினர் கடுமையாகச் குற்றம்சாட்டி வந்தனர். தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன், “படத்தில் குறிப்பிட்ட காட்சிகளை நீக்காவிட்டால் வழக்குத் தொடரப்படும்” என எச்சரித்தார். மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணனும் மெர்சல் படத்துக்கான தனது எதிர்ப்பை பதிவுசெய்தார். 

குறிப்பிட்ட காட்சியை நீக்க வேண்டும் எனவும், காட்சியை நீக்கக் கூடாது எனவும் பல்வேறு பிரபலங்கள் தங்களின் கருத்துகளைப் பதிவு செய்துவந்தனர். இந்நிலையில், தணிக்கைக் குழுவின் மண்டல அதிகாரி மதியழகன் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், “மெர்சல் படத்தின் காட்சிகளில் யாரையும் பாதிக்கும் வகையில் வசனங்கள் இல்லை. ஜிஎஸ்டி தொடர்பான வசனத்தில் தவறு ஏதும் இல்லை. கருத்துரிமை அடிப்படையிலேயே வசனங்கள் உள்ளன. படத்திலிருந்து காட்சிகளை நீக்க வேண்டும் என்றால் தணிக்கை குழுவிடம் மீண்டும் அனுமதி பெற வேண்டும்” எனத் தெரிவித்தார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!