வெளியிடப்பட்ட நேரம்: 00:50 (24/10/2017)

கடைசி தொடர்பு:07:59 (24/10/2017)

இறுதிக்கட்ட படப்பிடிப்பில் ஃபஹத் பாசில் நடிக்கும் `கார்பன்'

தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, பெங்காலி போன்ற மொழிகளில் பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர் வேணு. தமிழில் `குணா', `மின்சாரக் கனவு', `அன்பே ஆருயிரே' போன்ற படங்களுக்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார். பின்பு மலையாளத்தில் `தயா' படம் மூலம் இயக்குநராகவும் அறிமுகமானார். இவர் இரண்டாவதாக மம்மூட்டி, அபர்னா கோபிநாத் நடிப்பில் இயக்கிய `முன்னரியிப்பு' திரைப்படம் பல தரப்பிலிருந்தும் பாராட்டுகளைப் பெற்ற படம். மேலும், திரைவிழாக்களிலும் திரையிடப்பட்டது.

ஃபஹத் பாசில்

தற்போது இவர் இயக்கிவரும் `கார்பன்' படத்தில் ஃபஹத் பாசில், மம்தா மோகன்தாஸ், திலேஷ் போத்தன், நெடுமுடி வேணு, சௌபின் சாஹிர் ஆகியோர் நடித்துவருகிறார்கள். அட்வென்சர் திரைப்படமாக உருவாகிவரும் இதன் பெரும்பாலான படப்பிடிப்பு கட்டப்பனா, இடுக்கி, எரட்டுப்பட்டா, பலா போன்ற காட்டுப் பகுதிகளில் நடத்தப்பட்டது. தற்போது இந்தப் படத்தின் படப்பிடிப்பு நிறைவடையும் கட்டத்தை நெருங்கியுள்ளது. ஷாரூக்கான் நடித்த `ஜப் ஹரி மெட் சேஜல்' படத்துக்கு ஒளிப்பதிவுசெய்த கே.யு.மோகன் இப்படத்துக்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார். கூடவே பாலிவுட் இசையமைப்பாளரும் இயக்குநருமான விஷால் பரத்வாஜ் இப்படத்துக்கு இசையமைத்திருக்கிறார். `முன்னரியிப்பு' படம் மூலம் ரசிகர்களைக் கவர்ந்த வேணுவின் `கார்பன்' படத்துக்கான எதிர்பார்ப்பு சினிமா ரசிகர்களிடம் அதிகரித்திருக்கிறது. படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.