’தெலுங்கு மெர்சல் விவகாரம் தேவையில்லாமல் பரபரப்பாக்கப்படுகிறது’ - சி.பி.எஃப்.சி விளக்கம் | Delay in 'Mersal's Telugu version 'unnecessarily sensationalised': Prasoon Joshi

வெளியிடப்பட்ட நேரம்: 17:40 (27/10/2017)

கடைசி தொடர்பு:17:40 (27/10/2017)

’தெலுங்கு மெர்சல் விவகாரம் தேவையில்லாமல் பரபரப்பாக்கப்படுகிறது’ - சி.பி.எஃப்.சி விளக்கம்

மெர்சல் படத்தின் தெலுங்குப் பதிப்பான அதிரிந்திக்குத் தணிக்கைச் சான்றிதழ் கிடைக்கத் தாமதமாகும் விவகாரம் தேவையில்லாமல் பரபரப்புக்குள்ளாக்கப்படுவதாக மத்திய தணிக்கை வாரியத்தின் தலைவர் பிரசூன் ஜோஷி தெரிவித்துள்ளார். 

அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து தீபாவளிக்கு வெளியான மெர்சல் படம் பல்வேறு சர்ச்சைகளுக்குள்ளானது. தலைப்பு முதல் தணிக்கைச் சான்று வரை பல்வேறு தடைகளைத் தாண்டி வெளியான படத்தில் ஜி.எஸ்.டி. மற்றும் டிஜிட்டல் இந்தியா உள்ளிட்ட திட்டங்களுக்கு எதிராகக் காட்சிகள் இடம்பெற்றுள்ளதாகவும், அரசியலுக்கு வருவதற்காக நடிகர் விஜய் தேவையில்லாத கருத்துகளைப் பேசிவருவதாகவும் தமிழக பா.ஜ.க.வினர் எதிர்ப்புத் தெரிவித்தனர். மேலும், அந்தக் குறிப்பிட்ட காட்சிகளை நீக்க வேண்டும் என்றும் பா.ஜ.கவினர் வலியுறுத்தினர். இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரிய விவாதத்தை ஏற்படுத்தியது. கருத்துச் சுதந்திரத்துக்கு எதிராக பா.ஜ.க.வினர் பேசிவருவதாகக் கூறி பல்வேறு தரப்பினரும் மெர்சல் படக்குழுவுக்கு ஆதரவு தெரிவித்தனர். 

இந்தநிலையில், மெர்சல் படத்தின் தெலுங்குப் பதிப்பான ’அதிரிந்தி’ படம் இன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கடைசி நேரத்தில் ரிலீஸ் தள்ளிவைக்கப்படுவதாகத் தயாரிப்பு நிறுவனமான தேனாண்டாள் பிலிம்ஸ் அறிவித்தது. தணிக்கைச் சான்றிதழ் கிடைக்காததால் ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டதாகக் கூறப்பட்டது. படத்துக்குத் தணிக்கைச் சான்றிதழ் வழங்க மத்திய தணிக்கை வாரியம் திட்டமிட்டே தாமதப்படுத்தி வருவதாகவும் புகார் எழுந்தது. 

இதுகுறித்து விளக்கமளித்துள்ள மத்திய தணிக்கை வாரியத்தின் தலைவர் பிரசூன் ஜோஷி,’ மெர்சல் தெலுங்கு பதிப்புக்குத் தணிக்கைச் சான்றிதழ் கிடைப்பது தாமதமாகும் விவகாரம் தேவையில்லாமல் பரபரப்புக்குள்ளாக்கப்படுகிறது. தமிழ்ப் பதிப்புக்குக் கிடைத்தது போலவே தெலுங்கு மெர்சல் பதிப்புக்கும் நியாயமான முறையில் விரைவில் தணிக்கைச் சான்றிதழ் கிடைக்கும். சான்றிதழ் வழங்குவதில் உள்ள வழக்கமான நடைமுறைகளே தற்போது பின்பற்றப்பட்டு வருகிறது. இந்தச் சூழலில், தெலுங்கு மெர்சல் படத்துக்குத் தணிக்கைச் சான்று வழங்க திட்டமிட்டே தணிக்கை வாரியம் தாமதிப்பதாகக் குற்றம்சாட்டுவது ஆச்சர்யமளிக்கிறது’ என்றார்.