வெளியிடப்பட்ட நேரம்: 13:08 (01/11/2017)

கடைசி தொடர்பு:13:14 (01/11/2017)

பிரபல இயக்குநரிடம் உதவி இயக்குநராகச் சேர்ந்த சாய் பல்லவியின் தங்கை..!

சாய் பல்லவி

இயக்குநர் விஜய்க்கு ஒரு தனிச்சிறப்பு உண்டு. ‘மதராசப்பட்டினம்’ படம்மூலம் ஏமி ஜாக்சனை தமிழ் சினிமாவுக்கு அழைத்துவந்தவர். அடுத்து, தன் ‘தெய்வத்திருமகள்’ மூலம் குழந்தை நட்சத்திரம் சாராவையும்  ‘இது என்ன மாயம்’ படத்தின்மூலம் கீர்த்தி சுரேஷையும் ‘வனமகன்’ படம்மூலம் சாயிஷா சைகலையும் தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்தினார். தற்போது, இவர்கள் அனைவரும் அடுத்தடுத்து நிறையப் படங்களுடனும் நல்ல மரியாதையுடனும் வலம் வந்துகொண்டிருக்கின்றனர். அந்த வரிசையில், விஜய் தன் ‘கரு’ படத்தின் மூலம் சாய் பல்லவியை தமிழுக்கு அழைத்துவருகிறார். சாய் பல்லவி, ஏற்கெனவே மலையாளத்தில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற ‘பிரேமம்’ படத்தில் நடித்ததன்மூலம் தென்னிந்தியா அறிந்த  பிரபல நடிகையாகப் பெயர்பெற்றார். 

சாய் பல்லவி

இது மட்டுமன்றி, இயக்குநர் விஜய்க்கு வேறொரு சிறப்பும் உண்டு. ‘இயக்குநராக வேண்டும்’ என நினைக்கும் பிரபலங்களின் வாரிசுகள் முதலில் நாடுவது இவரைத்தான். தன் உதவி இயக்குநர்களை மிகுந்த மரியாதையாக நடத்துவது, நல்ல சம்பளம் தருவது என்பதுதான் இதற்குக் காரணம். அப்படி, இயக்குநர்கள் சந்தானபாரதி, வசந்த் ஆகியோரின் மகன்கள் இவரிடம் உதவி இயக்குநர்களாக இருந்துவிட்டு, தற்போது தனியாகப் படம் பண்ணும் முயற்சியில் இருக்கிறார்கள். ‘சைவம்’ படத்தில் நடித்த நடிகர் நாசரின் மகன் லுத்ஃபுதின், தற்போது விஜய்யின் உதவி இயக்குநர். இந்த வரிசையில், லேட்டஸ்ட் வரவுதான் சர்ப்ரைஸ்.

சாய் பல்லவி, பூஜா

அடுத்து தான் இயக்கிக்கொண்டு இருக்கும் ‘கரு’ படத்தில் சாய் பல்லவியின் தங்கை பூஜாவை தன் உதவி இயக்குநராகச் சேர்த்திருக்கிறார். பூஜாவுக்கு நடிப்பிலும் ஆர்வம் இருப்பதால் குறும்படங்களும் நடித்திருக்கிறார். ஹீரோயினை மையப்படுத்திய இந்தக் கதையில் சாய் பல்லவிதான் ஹீரோயின் என்பதும் குறிப்பிடத்தக்கது.