Published:Updated:

கொலைக்களம்... கூடங்குளம்?!

திமிறும் மக்கள்... திணறும் அரசுந.வினோத்குமார்படங்கள் : ரா. ராம்குமார்

பிரீமியம் ஸ்டோரி
##~##

னி, எவரை நம்பியும் பயன் இல்லை என்று தெரிந்த பின், இத்தனை நாட்களாகக் கட்டுக்குள்வைக்கப்பட்ட போர்க் குணம் பொத்துக்கொண்டு வர... செப்டம்பர் 11-ம் தேதி ஆரம்பித்தது அந்தப் பட்டினிப் போராட்டம். அது உலைகலனாகக் கொதிக்கத் தொடங்கிய இரண்டொரு நாட்களில், திருநெல்வேலியில் இருந்து கூடங்குளத்துக்குச் செல்லும் பேருந்துகள் நிறுத்தப்பட்டன. அங்கொன்றும் இங்கொன்றுமாகச் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஓடிக்கொண்டு இருந்த பேருந்துகளும் பரமக்குடி நிகழ்வுக்குப் பிறகு, முற்றிலுமாக நிறுத்தப்பட்டன. புகைப்படக்காரர் ராம்குமாரின் மோட்டார் சைக்கிளில்தான் 60 கி.மீ. பயணம். தாகம் எடுத்து வள்ளியூர் பேரூராட்சிக்குள் நுழைந்தோம். அங்கே இருந்து போராட்டம் நடைபெறும் இடிந்தகரை கிராமம் வரைக்கும் சுமார் 30 கி.மீ. தொலைவுக்கு எந்தக் கடையும் இல்லை. மளிகைக் கடையானாலும் சரி, டீக்கடையானாலும் சரி; அத்தனை யும் கடையடைப்புக்குத் தங்களை ஒப்புக்கொடுத்து இருந்தன. அரசு - தனியார் பள்ளிகளுக்குப் போராட்டம் தொடங்கிய நாளில் இருந்து அறிவிக்கப்படாத விடுமுறை. மீனவர்கள் கடலுக்குப் போகாமல் கரையில் இருந்தார்கள். பெண்களும் வீடுகளில் இருந்து வெளியேறி வீதிகளில் ஆர்ப்பாட் டத்தில் பங்கேற்று இருந்தார்கள். தமிழகத் தின் தென் பகுதியில் தோன்றிய அந்த நெருப்பு, அணு அழிவுக்கு எதிரான மக்களின் கொதிப்பு!

கொலைக்களம்... கூடங்குளம்?!

 127 பேர் பட்டினிப் போராட்டத்தில் அமர்ந்து இருக்கிறார்கள். அவர்களுக்கு ஆதரவாகச் சுமார் 1,076 கி.மீ. நீளம் கடற்கரையைக்கொண்ட தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் அனைத்தில் இருந்தும் லாரிகளிலும் டெம்போ டிராவலர்களிலும் வந்து இறங்குகிறார்கள் மீனவக் கிராம மக்கள்.

அணு உலைகள் செயல்படத் தொடங்குவதற்கு முன்னரே - செறிவூட்டப்பட்ட எரி பொருட்கள் இல்லாமலேயே - கொதித்துக் குமுறிக்கொண்டு இருக்கிறது... கூடங்குளம்!

இந்தப் போராட்டத்துக்கு மக்களை ஒருங்கிணைத்தவர்களில் முக்கியமானவரான சுப.உதயகுமாரனிடம் பிரச்னைபற்றிப் பேசினேன். ''11-ம் தேதியில் இருந்து உண்ணாவிரதம் இருக்கோம். ரெண்டு நாள் கழிச்சு சாவகாசமா ஆர்.டி.ஓ-வும், தாசில்தாரும், 'எஸ்.பி-யும், கலெக்டரும் கூடங்குளம் போலீஸ் ஸ்டேஷனில் காத்துட்டு இருக்காங்க. நீங்க உடனே வாங்க’னு கூப்பிட்டாங்க. நாங்க யாரும் போகலை. காரணம், இதுக்கு முன்னாடி இப்படித்தான் கூப்பிட்டு, ஏதாச்சும் கேஸ் போட்டு ஜெயில்ல தள்ளிடுவாங்க. அப்புறம் கிராம மக்கள், வழக்கறிஞர்கள்னு திரண்டு வந்த பிறகு விடுவிப்பாங்க. அதனால, 'நாங்க இங்கே 1,000 பேருக்கு மேல இருக்கோம். கலெக்டர் ஒருத்தர்தான் அங்கே இருக்கார். அவர் கிராமத்துக்கு வரலாமே’னு கேட்டோம். முடியாதுனு மறுத்துட்டாங்க.

கொலைக்களம்... கூடங்குளம்?!

அப்புறம் 15-ம் தேதி கலெக்டர், எஸ்.பி., டி.ஐ.ஜி., ஆர்.டி.ஓ., மூணு அமைச்சர்கள், அ.தி.மு.க., தே.மு.தி.க. எம்.எல்.ஏ-க்கள் ரெண்டு பேர் வந்தாங்க. அவங்களோட ஆயர் திவான் அம்புரோஸும், சில போராட்டக்காரர்களும் ராதாபுரம் தாலுகா ஆபீஸில் பேச்சுவார்த்தை நடத்தினோம். 13,000 கோடி ரூபாய்க்கு மேல் இந்த அணு மின் நிலையத்தை அமைக்கச் செலவாகி இருக்குங்கிறது மட்டும்தான் அவர்களுடைய ஒரே வாதம். நாங்களோ 'தனி நபர்களால் மட்டுமே ஒரு லட்சம் கோடிக்கு மேல் ஊழல் செய்ய முடிகிற ஒரு நாட்டில், இது ஒரு பெரிய தொகை இல்லை. ஆனது ஆகட்டும். செஞ்ச செலவுக்கு ஏத்த மாதிரி வேறு ஏதாவது திட்டத்தைக் கொண்டுவர லாம். ஆனால், தயவுசெய்து இந்த அணு மின் திட்டம் மட்டும் வேண்டாம்’னு சொல்லி, அணு சக்தியின் தீமைகள், பின் விளைவுகள்பற்றி எடுத்துச் சொன்னோம். பிரயோஜனம் இல்லை.

ஏதோ எங்களை தி.மு.க. தூண்டிவிட்டது போலப் பார்க்கிறார்கள். ஆனால், ஜப்பானின் ஃபுகுஷிமா சம்பவம் மக்கள்கிட்ட அணு மின் நிலையங்கள்பத்தி பெரிய விழிப்பு உணர்வை ஏற்படுத்தி இருக்கு.

'உண்ணாவிரதத்தை முடிச்சுட்டு எங்க ளோடு வாங்க. நீங்க அம்மாவைச் சந்திக்க ஏற்பாடு செய்றோம்’னு சொன்னாங்க. இவர்கள் பேச்சை யார் நம்புவது? உண்ணா விரதத்தைக் கைவிட முடியாதுனு சொல் லிட்டோம். போய்ட்டாங்க!'' - ஒரு வாரப் பட்டினிக் களைப்பின் சோர்வுக்கு இடையே பேசுகிறார் உதயகுமாரன்.

''அணு உலை வந்துட்டா, எங்க நாமெல்லாம் ஊரைவிட்டு வெளியேற்றப்பட்டுவிடுவோமோ என்கிற அச்சத்தினால்தான் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு இருக்கிறார்கள்னு ஒரு டி.வி-யில் சொல்றாங்க. உண்மையிலேயே இந்த அணுஉலை களால் ஏற்படும் அபாயத்தை உணர்ந்துதான் மக்கள் இதில் ஈடுபட்டு இருக்காங்கன்னுகூட அவங்க கண்ணுக்குத் தெரியலை. வி.ஏ.ஓ-கூட இங்க என்ன நடக்குது, ஏது நடக்குதுனு வந்து பார்க்கலை. வேற என்ன சொல்ல?'' என்று ஆதங்கம் கொப்பளிக்கப் பேசினார் ஒரு போராட்டக்காரர்.

பட்டினிப் போராட்டத்தில் பங்கேற்று இருப்பவர்களில் 20 பெண்களும், நான்கு மாற்றுத் திறனாளிகளும் அடக்கம். மணிகண்டன் என்பவர் பட்டினிப் போராட்டக் களைப்பினால் மயங்கிச் சரிய, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார். போலியோவால் பாதிக்கப்பட்டவர் அவர். மாற்றுத் திறனாளிகளுக்குச் சுய வேலைவாய்ப்பு ஏற்படுத்திக் கொடுப்பதற்காக, 'அன்னை மாற்றுத் திறனாளிகள் மையம்’ என்ற ஓர் அமைப்பை நடத்திவருகிறார். மருத்துவமனையில் அவரிடம் பேசினேன்... ''பேப்பர், புத்தகம், டி.வி., கல்பாக்கத்தில் இருக்கும் பாதிக்கப்பட்ட நண்பர்கள்னு இப்படித்தான் எனக்கு அணு சக்தியோட தீமைகள், பின் விளைவுகள்பத்தித் தெரியவந்துச்சு. யாரோட தவறும் இல்லாம இப்படி ஒரு குறைபாட்டோட நான் இருக்கிறதை நினைச்சு இன்னிக்கு வரைக்கும் நான் அழுதுட்டு இருக்கேன். ஆனா, அணு உலைகளோட தீமைகளைப்பத்தித் தெரிஞ்சும் அதைக் கண்டுக்காமவிட்டா, நாளைக்குப் பிறக்கப்போற இளம் தலைமுறை ஊனமாகப் பிறக்குமே? அது நாம செய்யுற தப்பால்தானே? நாம செய்யும் தப்புக்கு அவங்க தண்டனையை அனுபவிக்கணுமா? இன்னும் ஒருத்தர் என்னை மாதிரி பிறந்துடக் கூடாதுங்கிற நோக்கத்துல தான் நான் இந்த உண்ணாவிரதத்துல கலந்துக்கிட்டேன். ஏங்க நம்ம அரசாங்கம் இப்படி இருக்குது?''

''கல்லைக்கொண்டு அவங்க மேல சவட்டுங்க'' என்று வன்முறையைக் கையில் எடுக்கச் சொல்கிறார் ஒருவர். ''காந்தி மாதிரி நாமும் ஒத்துழையாமை செய்வோம்'' என்கிறார் இன்னொருவர். ''அரசியல் கட்சிகளிடம் மடிப்பிச்சை ஏந்துவோம்'' என் கிறார் அடுத்து ஒருவர். ''அணு சக்தித் துறை அலுவலர்களோடு அப்படி, இப்படி அனுசரித்துச் செல்வோம்'' என்கிறார் இன்னும் ஒருவர். ஆனால், யாருக்கும் அடுத்த கட்ட நடவடிக்கையை எப்படித் தீர்மானிப்பது என்பது தெரியவில்லை!

கொலைக்களம்... கூடங்குளம்?!

மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து வந்தார் வைகோ. யாரும் அழைக்காமலேயே வந்தார் சீமான். திடீர் ஆவேசம் கொண்டு வந்தார் விஜயகாந்த். சுவாமி அக்னிவேஷ் ஆதரவு தெரிவித்திருக்கிறார். சுற்றுச்சூழல் போராளி மேதா பட்கரும் நேரில் வந்து போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துச்  சென்றிருக்கிறார்.

இந்நிலையில் திடீர் திருப்பமாக 'கூடங் குளம் அணுமின் நிலையப் பணிகளை நிறுத்துக’ என்று  பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம் எழுதியிருப்பதாகவும் தகவல். (திங்கட்கிழமை நிலவரம்!)

அனுதாபப்பட்டாலும் சரி, ஆத்திரம் கொண்டாலும் சரி... கூடங்குள மக்களின்  பாதிப்பில் நமக்கும் பங்கு இருக்கிறது என்பதையாவது நினைவில் நிறுத்திக்கொள்ள கடமைப்பட்டவர்களாக இருக்கிறோம் நாம்!

பேச்சுவார்த்தையில் என்ன நடந்தது?

கொலைக்களம்... கூடங்குளம்?!

ந்தப் பிரச்னை தொடர்பாக ராதாபுரத்தின் தாலுகா அலுவலகத்தில் அரசுத் தரப்பினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்தது. பேச்சுவார்த்தை முடிந்து அமைச்சர் செந்தூர்பாண்டியன் வெளியே வந்தபோது, ''இதுபற்றி எதுவும் என்னிடம் கேட்காதீர்கள்'' என்று ஊடகங்களுக்கு எந்த ஒரு பதிலையும் அளிக்காமல் நழுவினார். நயினார் நாகேந்திரனிடம், ''என்ன முடிவுக்கு வந்தீர்கள்?'' என்று கேட்டதற்கு, ''தம்பி... இது மக்கள் பிரச்னை. சென்ஸிட்டிவான விஷயம். இதை எல்லாம் கையில எடுக்காதீங்க!'' என்று பொத்தாம்பொதுவாகச் சொல்லிச் சென்றார். தே.மு.தி.க. எம்.எல்.ஏ. மைக்கேல் ராயப்பன், ''இதைப்பற்றி சட்டமன்றத்தில் பேசுவதற்கு நான் சபாநாயகரிடம் இரண்டு முறை அனுமதி கேட்டபோதும் மறுக்கப்பட்டது. மற்றபடி கட்சியில் ஆதரவு இருக்கிறது. அதைவிட இது என்னுடைய தொகுதி. அதனால் நான்தானே முன் நிற்க வேண்டும்!'' என்றார். சொன்னது மட்டும் இல்லாமல், ஒரு நாள் பட்டினி இருந்திருக்கிறாராம்!

பாதுகாப்புக்கு எதிரியா மீனவன்?

போராட்டம் ஒரு பக்கம் நடந்துகொண்டு இருக்க, கூடங் குளம் அணு உலையைச் சுற்றி மூன்று அடுக்குப் பாதுகாப்பு போடப்பட்டு இருக்கிறது. தரையில் மட்டும் அல்ல... கடலிலும் பாதுகாப்புதான். முதல் அடுக்கு, மாநிலக் கடலோரக் காவல் படை. இரண்டாவது அடுக்கு, மத்தியக் கடலோரப் படை. மூன்றாவது அடுக்கு, கப்பல் படை. ஆனால், இந்த மூவருக்குள்ளேயே 'நீதான் பாதுகாக்க வேண்டும், நீதான் ரோந்து வர வேண்டும்’ என்று குடுமிப்பிடிச் சண்டை. இது இப்படி இருக்க, இந்த வருடத்தில் மட்டும் கடலோரப் படைகள் நடத்திய இரண்டு பாதுகாப்பு ஒத்திகைகளும் தோல்வியில் முடிந்து இருக்கின்றன. மேலும், சில மாதங்களுக்கு முன் ஒரு வெளிநாட்டுக் கப்பல் இங்கு வந்து நின்றது. அதுவே, மீனவர்கள் சொல்லித்தான் பாதுகாப்புப் படைகளுக்குத் தெரிய வந்திருக்கிறது. ஆனால், மீனவர்களைத்தான் அணு சக்தித் துறையினர் முதல் எதிரியாகப் பார்க்கிறார்கள். கடலில் நடக்கும் எந்த விஷயமும் முதலில் மீனவர்களுக்குத் தான் தெரிகிறது. கடலோரக் காவல் படையினர் இதுபோன்ற விஷயங்களில் மீனவர்களின் அறிவை, புரிதலைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அப்போதுதான் கடலைப் பாதுகாக்க முடியும்!

அணு உலைகளும் அண்ணா ஹஜாரேவும்!

ஜைதாப்பூரில் தொடங்கவிருக்கும் அணு உலைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, நாடு எங்கும் ஒலிக்கும் குரல்களுக்குத் தன்னுடைய ஆதரவைத் தெரிவித்து இருக்கிறார் அண்ணா ஹஜாரே. அதன் விளைவு... இந்தத் திட்டம் தொடர்பான 'மக்கள் தீர்ப்பாய’த்தில் ஒருவராகக் களம் இறக்கப்பட்டு இருக்கிறார் அண்ணா. அண்ணாவுடன் கைகோக்க சாந்தி பூஷன், மருத்து வர் புகழேந்தி, சுப.உதயகுமாரன் ஆகியோரும் தயார். தீர்ப்பாயத்தின் முதல் சந்திப்பு இந்த மாதம் நடக்கிறது!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு