Published:Updated:

சேதாரத்துக்கு தேவை ஆதாரம்!

சமஸ்

##~##

ங்க முதலீடு மீண்டும் முக்கியத்துவம் பெறும் நிலையில், இந்திய அரசு, நகை உற்பத்தியாளர்களின் அநீதியான போக்குகளை முடிவுக்குக் கொண்டுவர நடவடிக்கை எடுப்பது அவசியம்!

 இரண்டு உலகப் போர்கள் முடிந்திருந்தபோது, உலகத்தின் மொத்தக் கையிருப்பில் முக்கால்வாசிக்கும் மேலான தங்கம் அமெரிக்காவிடம் இருந்தது. நீண்ட காலம் தன்னிடம் இருந்த தங்கத்தின் மதிப்புக்கு இணையாக டாலர் மதிப்பு இருக்கும் வகையிலேயே டாலர்களை அச்சடித்தது அமெரிக்கா. உலக நாடுகள் தங்கள் சேமிப்பின் பெரும் பகுதியை டாலர்களாகச் சேமித்ததற்கும் அரை நூற்றாண்டுக்கும் மேல் டாலர் சர்வதேச நாணயமாக வளைய வந்ததற்கும் முக்கியமான பின்னணி இது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இப்போது, அதெல்லாம் கடந்த காலம். ''இனி உலக நாணயம் என்ற அந்தஸ்துக்கு டாலர் தகுதியானது இல்லை. புதிய சர்வதேச நாணயத்தை உலகம் கண்டுபிடிக்க வேண்டிய தேவை வந்துவிட்டது'' என்கிற சீனாவின் எச்சரிக்கையை உலகம் நம்பத் தொடங்கிவிட்டது. 1930-களில் 'உலகம் முழுவதுக்கும் ஒரே நாணயம்’ என்கிற கருத்தாக்கத்தைப் பேசிய கெய்ன்ஸின் கனவுக்கு இன்னும் தயாராகவில்லை

சேதாரத்துக்கு தேவை ஆதாரம்!

என்றாலும், உலகம் இப்போது தங்கத்தை அந்த இடத்தில் வைத்துப் பார்க்க ஆரம்பித்துவிட்டது. இனி வரும் காலங்களில் உலக நாடுகளின் சேமிப்பின் பெரும் பகுதி தங்கமாகவே இருக்கும்.

உலகின் பெரிய தங்க இறக்குமதியாளரும் நுகர்வோருமான இந்தியா இப்போது என்ன செய்ய வேண்டும்?

இந்தியர்களைப் பொறுத்த அளவில் தங்க முதலீடு என்பது மரபார்ந்த முதலீடு. இந்திய அரசின் தங்கக் கையிருப்பு 1,600 டன்கள்; இந்தியர்கள் வசம் நகைகளாக 28,000 டன் தங்கம் கையிருப்பில் இருக்கிறது என்கின்றன புள்ளிவிவரங்கள். ஆனால், உண்மையான கையிருப்பு இதுபோல இன்னும் பல மடங்கு இருக்கும்.

உலக அளவில் வாங்கப்படும் தங்கத்தில் 50% நகைகளாகவும் 40% முதலீடு நோக்கில் தங்கக் கட்டிகளாகவும் 10% தொழிலகத் தேவைகளுக்காகவும் வாங்கப்படுகின்றன. ஆனால், இந்தியாவில் 90% தங்கம் நகைகளாகவே வாங்கப்படுகிறது. முதலீடு நோக்கில் தங்கத்தை வாங்க விரும்புவோரும்கூட இங்கு நகைகளாகவே வாங்கும் நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். இந்நிலையில், தங்க நகை முதலீட்டை மேம்படுத்தவும் முதலீட்டாளர்களின் நலனைப் பாதுகாக்கவும் இந்திய அரசு மூன்று முக்கியமான நடவடிக்கைகளை எடுப்பது அவசியம்ஆகிறது.

சொக்கத் தங்கம் - ஒரு போலி மதிப்பீடு!

தங்க நகைகளில் சொக்கத் தங்கம் என்று ஒன்று கிடையவே கிடையாது. மென்மையான உலோகமான தங்கத்தில் பிற உலோகங்களைக் குறிப்பிட்ட விகிதங்களில் சேர்க்கும்போதுதான் உறுதியான நகைகள்  கிடைக்கின்றன. உலக அளவில் இந்தக் கலப்பு பல விதங்களில் நடக்கின்றன. உதாரணமாக, 22 காரட் நகை என்பது, அதில் 91.6 சதம் தங்கமும் 8.4 சதம் பிற உலோகங்கள் கலக்கப்பட்டு இருப்பதையும் குறிக்கிறது. இதுபோலவே 18 காரட் நகை என்பது 75 சதம் தங்கத்தையும், 14 காரட் நகை என்பது 58.5 சதம் தங்கத்தையும், 9 காரட் நகை என்பது 37.5 சதம் தங்கத்தையும் குறிக்கிறது. வெளிநாடுகளில் 9 காரட் முதல் 22 காரட் வரை தங்க நகைகள் செய்யப்படுகின்றன. அவற்றுக்கு உரிய மதிப்பும் கிடைக்கிறது. ஆனால், இந்தியாவில் அப்படி இல்லை. 22 காரட் நகைகளே முன்னிறுத்தப்படுகின்றன. ஏன்? 22 காரட் நகைகள் எளிதில் சேதம் அடையக்கூடியவை. மீண்டும் மீண்டும் நகைகளை மாற்றும் தேவையை அவை உருவாக்கும் என்பதே இதன் பின்னணியில் உள்ள வியாபார சூட்சுமம்.

தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் 22 காரட் முதல் 9 காரட் வரையிலான எல்லா நகைகளுக்கும் அவற்றில் உள்ள தங்கத்தின் மதிப்புக்கு ஏற்பக் கடன் வழங்கும் என்று அறிவிப்பதன் மூலம், அரசு இந்தச் சூட்சுமத்தை எளிதாக உடைக்க முடியும்.

அதேபோல, நகைகளுக்கு மட்டுமே கடன் வழங்கும் முறையைக் கைவிட்டு, 24 காரட் தங்கக் கட்டிகள், நாணயங்களுக்கும் கடன் வழங்கும் முறையை வங்கிகள் கொண்டுவர வேண்டும்!

சேதாரம் - யாருக்கு?

இன்றைய நவீன முறை நகைத் தயாரிப்பில், கிட்டத்தட்ட ஒரு சதவிகிதத்துக்கும் கீழ் சேதாரத்தைக் கொண்டுவரும் தொழில்நுட்பங்கள் வந்துவிட்டன. நகைத் தயாரிப்பில், தங்கத் தூள்களைக்கூடச் சேகரிக்கும் இயந்திரங்களை நகைத் தயாரிப்பு நிறுவனங்கள் வைத்து இருக்கின்றன. ஆனால், ஒரு

சேதாரத்துக்கு தேவை ஆதாரம்!

நகைக்கு 9 முதல் 45 சதம் வரை தங்கள் விருப்பம்போல சேதாரம் வசூலிக்கின்றன நகைக் கடைகள். இது முறையற்ற வணிகம். நகைகளுக்கான சேதார மதிப்பை அரசு நிர்ணயிக்க வேண்டும்.

தங்கம்தான் - எங்கே விற்பது?

தங்க நகைகளை நியாயமான விலைக்கு வாங்கும் அமைப்புகள் இங்கு இல்லை. நீங்கள் 'ஹால்மார்க்’ முத்திரை குத்தப்பட்ட நகைகளை வைத்து இருக்கலாம். ஆனால், அவற்றை இன்றைய மதிப்புக்கு அப்படியே விற்பது சாத்தியமே இல்லாதது. அதேபோல, 'ஹால்மார்க்’ முத்திரை குத்தப்பட்ட நகைகளாகவே இருப்பினும், ஒரு கடையில் வாங்கப்பட்ட நகையை இன்னொரு கடையில் மாற்றும் போது, 3 முதல் 8 சதவிகிதம் வரை சேதாரம் கழிக்கும் அடாவடியான போக்கு இங்கு இருக்கிறது. இதற்குத் தடை விதிக்க வேண்டும். வங்கிகள் தங்க நகைகளை வாங்கும் சேவையை அறிமுகப்படுத்த வேண்டும்.

இந்தியாவின் சேமிப்பிலும் தங்க முதலீட்டிலும் இந்த நடவடிக்கைகள் நிச்சயம் மகத்தான மாற்றங்களை உருவாக்கும்!