Published:Updated:

இவர்கள் இயற்கையின் மக்கள்!

ரீ.சிவக்குமார், படம் : கே.கார்த்திகேயன்

பிரீமியம் ஸ்டோரி
##~##

ந்தியா முழுவதும் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் பழங்குடிகள் குறித்து ஆய்வு செய்பவர்கள் ரெங்கையா முருகனும் ஹரிசரவணனும். இவர்கள் இருவரும் நாட்டுப்புற ஆய்வு மாணவர்களோ, மானுடவியல் துறைப் பேராசியர்களோ அல்ல. ரெங்கையா முருகன், சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தில் (M.I.D.S) நூலகர். ஹரிசரவணன், ஆங்கில இலக்கியப் படிப்பைப் பாதியில் நிறுத்தியவர். பழங்குடிகள் குறித்து இவர்கள் எழுதியுள்ள 'அனுபவங்களின் நிழல்பாதை’ நூல் தொ.பரமசிவன், பக்தவச்சல பாரதி போன்ற ஆய்வாளர்களிடம் பெரும் வர வேற்பைப் பெற்றது.

 ''காட்டுப் பன்றி ஒன்று கிழங்கை அகழ்ந்து தின்ற பிறகு, மிச்சம் இருக்கும் கிழங்கைப் பழங் குடிகள் தின்பதாகப் பழந்தமிழ் இலக்கியத்தில் பதிவுகள் உள்ளன. அந்த வழக்கம் இன்றும்பழங்குடி களிடம் உள்ளது. நமது ஆதி வாழ்க்கையைத் தேடி அலையும் வேட்கைதான் எங்களைக் காடுகளை நோக்கிச் செலுத்தியது. ஆதிவாசிகள் என்றாலே நிர்வாணமாகத் திரிபவர்கள், நர மாமிசம் உண்பவர் கள், வரைமுறையற்ற பாலுறவுகொள்பவர்கள் என்ற தப்பான கற்பிதங்கள் நம்மிடம் உள்ளன. ஆனால், உண்மையில் நாகரிகச் சமுதாயம் என்று சொல்லிக்கொள்கிற நம்மைவிட, மேம்பட்ட கலா சாரம் கொண்டவர்கள் ஆதிவாசிகள். தேவைக்கு மேல் எதையும் பயன்படுத்தாத வாழ்க்கை, அடுத்த வர் உடைமைகளை ஆக்கிரமிக்காத பேராண்மை, எல்லா வளங்களையும் பகிர்ந்து வாழ்வதுஆகியவை இந்தியா முழுக்கப் பரவிக்கிடக்கும் ஆதிவாசிகளின் பொதுக் குணங்கள்!'' என்று சொல்லும் ஹரிசரவண னின் வார்த்தைகளில் அடர்ந்து செறிந்த காட்டின் வனப்பையும் அருவியின் குளிர்ச்சியையும் உணர முடிகிறது.

இவர்கள் இயற்கையின் மக்கள்!

''இயற்கை சார்ந்த வாழ்க்கை அவர்களுடையது. ஆனால், நாகரிகம், அறிவியல், வளர்ச்சி என்ற பெயரால் நம்மால் திணிக்கப்பட்டவை அவர்களின் வாழ்க்கையையும் இயற்கையின் ஆன்மாவையும் குலைத்து இருக்கின்றன. உதாரணத்துக்கு, மத்திய இந்தியாவில் வாழக்கூடிய பழங்குடிகள், ஊட்டியில் வசிக்கும் படுகர்கள், இருளர்கள் ஆகியோரிடம் ரத்த சோகை அதிகமாகக் காணப்படுகிறது.காரணம், அவர்களது மண்ணுக்கு ஏற்ற தானியங்களை விளைவிப்பதற்குப் பதிலாக, பிரிட்டிஷ்காரர்களால் திணிக்கப்பட்ட உருளைக் கிழங்கு, முட்டைக்கோஸ், பீட்ரூட், கேரட், காலிஃப்ளவர் போன்ற காய்களை அவர்கள் விளைவித்துக்கொண்டு இருக்கிறார்கள்!'' என்ற ரெங்கையா முருகனின் வார்த்தைகளில் அவ்வளவு வருத்தம்.  

இவர்கள் இயற்கையின் மக்கள்!

'' 'போட்டிகள் நிறைந்த உலகமயச் சூழல்’ என்ற பெயரில் யாரும் யாரையும் ஏமாற்றலாம், யாரும் எந்தப் பகுதியையும் ஆக்கிரமிக்கலாம் என்கிற தப்பான உணர்வு நம்மிடையே விதைக்கப்பட்டு உள்ளது. ஆனால், இதற்கு முற்றிலும் நேர்மாறானது ஆதிவாசிகளின் வாழ்க்கை. ஒடிஷா மாநிலத்தில் வசிக்கும் பூஞ்சியா பழங் குடி மக்கள், தங்கள் வாழ்க்கையைத் தங்கள் எல்லைக்குள்ளேயே அமைத்துக்கொள்கின்ற னர். இத்தனைக்கும் வரையறுக்கப்பட்ட எல்லைக் கோடுகள் என எதுவும் கிடையாது. எல்லாமே மனக் கணக்குதான். ஒரு பூஞ்சியா ஆதிவாசி தங்களது எல்லைப் பகுதியைத் தாண்டி வேறு ஒரு பகுதியில் ஒரு சுள்ளி பொறுக்கி வந்தால்கூட, அந்த பூஞ்சியா இனமே ஒன்று சேர்ந்து அவரின் வீட்டை எரித்துவிடுவார் கள். ஒருவர் வீடு கட்ட வேண்டும் என்றால், எல்லோரும் அவருக்கு உதவுவார்கள். விளைச் சல் அவர்களுக்குத் தனித்தனியாக இருந்தா லும் கூட்டு அறுவடைதான். 20 மூட்டை நெல் விளைவித்தவருக்கும் இரண்டு மூட்டை நெல் விளைவித்தவருக்கும் சமமாகத்தான் விளைச்சல் பகிர்ந்து அளிக்கப்படும். குஜராத் தின் டாங்கு பகுதியில் வசித்து வரும் குக்ணா பழங்குடிகளிடம் ஒரு தனியான ராமாயணம் நிலவி வருகிறது. அந்த ராமாயணத்தில் அயோத்தி, இலங்கை எல்லாமே அவர்கள் வசிக்கும் நிலப்பரப்பில் தான் அமைந்து இருக்கிறது. அந்தக் கதையில் சீதை சுள்ளி பொறுக்குபவள், விருந்தினர்களுக்குத் தேநீர் தயாரித்து உபசரிப்பவள். ராஜராஜ சோழன் காலம் தொடங்கி இன்றைய முதல்வர் வரை நமக்கு எழுதப்பட்ட வரலாறுகள் உண்டு. ஆனால், ஆதிவாசிகளுக்கோ ஆயிரக் கணக்கான ஆண்டு வரலாறும் வாய்மொழி வரலாறே. அவற்றைக் கதைப் பாடல்களாகப் பாடி பல தலைமுறைகளாகக் கடத்திச் சேகரித்து வருகின்றனர். வாய்மொழி வரலாறு, அழகான கை வினைகள், காடுகளின் ஒவ்வோர் அங்குலத்தையும் அறிந்து வைத்து இருக்கிற அறிவுநுட்பம், விலங்கு களையும் பறவைகளையும் பாது காத்து இயற்கையின் சமநிலை குலையாமல் வாழ்கிற வாழ்க்கை என்று ஒவ்வோர் அம்சத்திலும் அவர்கள் நம்மை விஞ்சியே இருக் கிறார்கள்!'' என்று ஆச்சர்யத் தகவல் சொல்கிறார் ஹரி.

இவர்கள் இயற்கையின் மக்கள்!

''ஆதிவாசிகள் நிர்வாணமாக இருப்பார்கள் என்பதும் தவறான புரிதலே! அந்தமானில் வசிக்கும் சென்டினல் பழங்குடிகள் மட்டுமே நிர்வாணமாக இருப்பார்கள். மத்திய இந்தியாவில் வசிக்கும் பழங்குடிப் பெண்கள் தங்கள் மார்புகளை வெறும் ஆபரணங்களால் மறைப்பதை அங்கு யாரும் வக்கிரமாகப் பார்ப்பது இல்லை. அங்கு பெண்களுக்குத் தங்கள் துணையைத் தேர்ந்தெடுத்துக்கொள்வதற்கும் மண விலக்கு செய்வதற்கும் முழு உரிமை உண்டு.முக்கிய மாகப் பழங்குடிகளிடத்தில் குடும்ப வன்முறை இல்லை. அவர்கள் தாங்கள் வளர்க்கும் நாயைக்கூட அடிப்பது இல்லை. விபசாரமும் இல்லை, பாலியல் பலாத்காரமும் இல்லை. அவ்வளவு ஏன், ஒரே ஒரு பிச்சைக்காரர்கூடப் பழங்குடிகளிடத்தில் இல்லை. மன நோயாளிகளை அவர்கள் தெய்வமாகக் கருதி, வீட்டுக்கு அழைத்து உணவும் மதுவும் கொடுத்து உபசரிக்கிறார்கள். ஆனால், நாமோ மெள்ள மெள்ள அவர்கள் பராமரிக்கும் காட்டு வளத்தைச் சுரண்டி, அவர்களின் வேர்களைப் பிடுங்கி வேறு ஒரு இடத்தில் நட முயற்சிக்கிறோம். பழங்குடிகளைக் கையாள்வதில் பிரிட்டிஷ்காரர்களுக்கும் இன்றைய ஆட்சியாளர்களுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. குஜராத்தில் வசிக்கும் ரத்வா என்னும் பழங்குடிகள், பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் குற்றப் பரம்பரையின ராக அறிவிக்கப்பட்டனர். இன்றும் அங்கு ஏதாவது திருட்டு என்றால், முதலில் போலீஸ் பிடித்துச்செல்வது அவர்களையே. ரத்வாக்களின் சுவரோவியங்களில் போலீஸ் ஜீப் இடம் பெறும் அளவுக்கு மோசமான வன்முறையை நாம் நிகழ்த்தியிருக்கிறோம்!'' என்று  ஆவேசமாகிறார் ரெங்கையா முருகன்.

''பிரிட்டிஷ்காரர்களுக்கு எதிராக சிப்பாய் புரட்சிக்கு முன்பு போராடியவர்கள் பழங்குடிகளே. கேரளாவில் பழசிராஜாவுக்கு உதவிய வயநாடு பழங்குடிகளான குரிசேரியான், முண்டாக்கள், குந்தா த்ர்வாபோல ஏராளமான பழங்குடி மக்களின் விடுதலைப் போராட்டங்கள் ஆவணப்படுத்தப்படவே இல்லை.

உலகமயமாக்கல், வளர்ச்சி, தாராளமயமாக்கல் என்ற பெயர்களில் கொஞ்சம் கொஞ்சமாக அவர்கள் வாழ்க்கையில் இருந்தே அவர்களை விரட்டிக் கொண்டு இருக்கிறோம். இன்று சென்னையில் வசிக்கும் வட இந்திய இளைஞர்களில் கணிச மானவர்கள் சட்டீஸ்கர், ஜார்க்கண்ட், மணிப் பூரைச் சேர்ந்த பழங்குடிகள். டெல்லியிலும் மும்பை யிலும் இருப்பதைவிட, அவர்கள் சென்னையில் பாதுகாப்பாக உணர்கிறார்கள். ஆனால், விரிந்து பரந்த மலையைத் தங்கள் வீடாக நினைக்கும் அந்தப் பழங்குடி இளைஞன் இப்போது வசிப்பதோ வெந்து கருகும் ஆஸ்பெஸ்டாஸ் கூரையின் கீழேதான். பிரம்ம புத்ரா நதியிலும் மலையின் தாடியென வளர்ந்து நீண்ட அருவியிலும் நீந்திக் குளித்துக் களித்த மலைமகனுக்கு இன்று குளிக்கக் கிடைப்பதோ முக்கால் பக்கெட் தண்ணீர்!'' - முடிக்கும்போது வேட்டையாடப்பட்ட ஒரு மிருகத்தின் வலியைப் போல இருவரின் வார்த்தைகளிலும் சோகம் சூழ்ந்து நிற்கிறது!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு