ட்விட்டரில் மகிழ்ச்சியைப் பரிமாறிக்கொண்ட ரஜினி, கமல்!

ஆந்திர அரசின் என்.டி.ஆர். தேசிய விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளது தொடர்பாக நடிகர்கள் கமலும், ரஜினியும் ட்விட்டரில் மகிழ்ச்சியைப் பரிமாறிக்கொண்டனர். 

திரைப்படத் துறையில் சிறந்துவிளங்குபவர்களைத் தேர்வுசெய்து ஆந்திர அரசு நந்தி விருதுகளை ஆண்டுதோறும் வழங்கிவருகிறது. இதில், மறைந்த முன்னாள் முதலமைச்சரும், நடிகருமான என்.டி.ராமாராவ் பெயரில், என்.டி.ஆர். தேசிய விருது என்ற பெயரில் தெலுங்கு சினிமாவைக் கடந்தும் நாடுதழுவிய அளவில் விருது அளித்து கௌரவிக்கப்படுகின்றனர். கடந்த 2014-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டுக்கான  நந்தி விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டன. அதில், 2014-ம் ஆண்டுக்கான என்.டி.ஆர். தேசிய விருதுக்கு நடிகர் கமலும், 2016-ம் ஆண்டுக்கான விருதுக்கு நடிகர் ரஜினிகாந்தும் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

 

இதுகுறித்து மகிழ்ச்சி தெரிவித்து ட்விட்டரில் கருத்துப் பதிவிட்ட நடிகர் கமல், என்.டி.ஆர். தேசிய விருது பெற்ற சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு வாழ்த்துகள். எனது சினிமா வாழ்வின் தொடக்கம் முதலே ஆதரவு அளித்துவரும் ஆந்திர அரசுக்கும் நன்றி’ என்று பதிவிட்டிருந்தார். இந்தப் பதிவுக்கு நன்றி தெரிவித்துள்ள ரஜினிகாந்த், ’நன்றி கமல். உங்களுக்கும் வாழ்த்துகள்’ என்று பதிலளித்துள்ளார். ட்விட்டரில் லட்சக்கணக்கான ஃபாலோயர்ஸ்களுடன் கொடிகட்டிப் பறந்தாலும், இதுவரை ரஜினி - கமல் இடையே நேரடியாகக் கருத்துப் பரிமாற்றம் நடப்பது அநேகமாக இதுவே முதல்முறை என்று தெரிகிறது.   

Do you like the story?

Please Appreciate the Author by clapping!