வெளியிடப்பட்ட நேரம்: 22:02 (16/11/2017)

கடைசி தொடர்பு:22:02 (16/11/2017)

தீபிகா படுகோனேவுக்கு எச்சரிக்கை விடுத்த `பத்மாவதி' போராட்டக்காரர்கள்!

தீபிகா படுகோனேவின் மூக்கை அறுத்துவிடுவோம் என்று பத்மாவதி திரைப்படத்துக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கார்னி சேனா அமைப்பின் தலைவர் பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளார். 


சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் உருவாகியுள்ள வரலாற்றுப் படம் 'பத்மாவதி'. இந்தப் படத்தில் பத்மாவதியாக தீபிகா படுகோனேவும், ராணா ரத்தன் சிங்காக ஷாகித் கபூரும், அலாவுதின் கில்ஜியாக ரன்வீர் சிங்கும் நடித்துள்ளனர். வரலாற்றுப் பின்னணியைக் கொண்டு இந்தப் படம் மிகப் பிரமாண்டமாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் படம் அறிவிக்கப்பட்டதிலிருந்தே ராஜஸ்தானைச் சேர்ந்த ஒரு பிரிவு மக்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர். தற்போது, படம் டிசம்பர் 1-ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், படத்துக்கு எதிராக நாடு தழுவிய அளவில் மிகப் பெரிய போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து பேசிய கார்னி சேனா அமைப்பின் தலைவர், 'பொதுவாக எங்கள் இனத்தில் நாங்கள் பெண்களை அடிக்கமாட்டோம். ஆனால், தேவைப்பட்டால், தீபிகா படுகோனேவின் மூக்கை அறுக்கவும் தயங்கமாட்டோம்' என்று தெரிவித்துள்ளனர். மற்றொரு தலைவர், 'நாங்கள் லட்சக்கணக்கான மக்கள் திரண்டுள்ளோம். எங்கள் முன்னோர்கள் ரத்தத்தைக் கொண்டு வரலாற்றை எழுதியுள்ளார்கள். அதன் மீது கரி பூச நாங்கள் அனுமதிக்கமாட்டோம். டிசம்பர் 1-ம் தேதி நாடு தழுவிய அளவில் பந்த் நடத்தவுள்ளோம்' என்று தெரிவித்துள்ளார்.