வெளியிடப்பட்ட நேரம்: 16:39 (22/11/2017)

கடைசி தொடர்பு:15:21 (23/11/2017)

அஜித்தை வைத்து விளம்பரம் தேட முயற்சி செய்கிறேனா..! இயக்குநர் சுசீந்திரன் விளக்கம்

கந்துவட்டிக் கொடுமையால் சினிமா தயாரிப்பாளர் அசோக்குமார் தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில், நடிகர் அஜித்குமாரின் பெயரைக் குறிப்பிட்டு நான் புகழ் தேட விரும்புவதாகச் சொல்வது தவறு என்று இயக்குநர் சுசீந்திரன் விளக்கம் அளித்துள்ளார்.

சுசீந்திரன்

 

இயக்குநர் மற்றும் நடிகர் சசிகுமாரின் உறவினர் அசோக்குமார் கந்து வட்டிக் கொடுமையால் நேற்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது சம்பந்தமாக சினிமா ஃபைனான்சியர் அன்புச்செழியனை போலீஸார் தேடி வருகிறார்கள். இந்தச் சம்பவம் தமிழ்த் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், 'வெண்ணிலா கபடிக்குழு', 'பாண்டிய நாடு' உள்ளிட்ட படங்களின் இயக்குநர் சுசீந்திரன் இன்று காலை அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். 

அந்த அறிக்கையில், “அசோக் அண்ணனின் மரணம், தமிழ் சினிமாவில் கடைசி மரணமாக இருக்க வேண்டும். அஜித் ரசிகர்களுக்கு ஓர் அதிர்ச்சித் தகவலைத் தெரிவித்துக்கொள்கிறேன். 'நான் கடவுள்' நேரத்தில் இந்த அன்புச்செழியனால், நடிகர் அஜித்தும் அசோக் அண்ணனின் மனநிலைக்கு ஆளானார் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். தமிழ் சினிமாவின் பிரபல இயக்குநர்கள் லிங்குசாமி, கௌதம் மேனன், பல தயாரிப்பாளர்கள், நடிகர்கள் இந்த அன்புச்செழியனால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏன் இசையமைப்பாளர் இமானிடம்கூட எந்தப் படத்துக்கு இசையமைக்க வேண்டும் என்று மறைமுகமாக சிரித்துக்கொண்டே கூறியுள்ளார். தமிழ் சினிமாவின் இந்த அவல நிலைக்குக் காரணமான அன்புச்செழியன் தண்டிக்கப்பட வேண்டும். மத்திய அரசுக்கும் வருவாய்த்துறைக்கும் ஒரு வேண்டுகோள். தமிழ்நாட்டின் பாதி பணம் அன்புவிடம் இருக்கும். தயவு செய்து அவர் வீட்டிலும் ரெய்டு செல்லவும்” என்று சுசீந்திரன் கூறியிருந்தார்.

இந்த அறிக்கை விவாதத்துக்கு உள்ளானது. அஜித் பெயரை வைத்து சுசீந்திரன் விளம்பரம் தேடிக்கொள்கிறார் என்று விமர்சனங்கள் எழுந்தன. இதையடுத்து அது பற்றி விளக்கம் அளித்த இயக்குநர் சுசீந்திரன், “நடிகர் அஜித்தை வைத்து விளம்பரம் தேட வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. அன்புச்செழியன் மட்டுமல்ல யாரிடமும் நான் ஒரு ரூபாய்கூட கடன் வாங்கியது இல்லை. அன்புச்செழியன் பற்றி எல்லோருக்கும் தெரிய வேண்டும் என்பதே என் நோக்கம். அதற்காகவே அந்த அறிக்கையை வெளியிட்டேன்” என்றார்.