வெளியிடப்பட்ட நேரம்: 09:45 (23/11/2017)

கடைசி தொடர்பு:10:42 (23/11/2017)

’அசோக் குமாரின் அகாலமரணம் போல இனி நிகழவிடக்கூடாது’: கமல் வேதனை

'அசோக் குமாரின் அகாலமரணம் போல இனி நிகழவிடக்கூடாது' என்று நடிகர் கமல் ஹாசன் வேதனை தெரிவித்துள்ளார். 

நடிகரும் இயக்குநருமான சசிக்குமாரின் கம்பெனி புரொடக்‌ஷன்ஸ் நிறுவனத்தைக் கவனித்துக்கொண்ட அவரது உறவினர் அசோக் குமார், கடந்த 21-ல் தற்கொலைசெய்துகொண்டார். கந்துவட்டிக் கொடுமை காரணமாகவே அவர் தற்கொலை செய்துகொண்டதாகவும், இதற்குக் காரணம் சினிமா ஃபைனான்ஸியர் அன்புச் செழியனே என்றும் கூறப்பட்டது. இதுதொடர்பாக அவர் எழுதிவைத்த கடிதம் ஒன்றையும் போலீஸார் கைப்பற்றி விசாரணை நடத்திவருகின்றனர். இந்த விவகாரம் தொடர்பாகத் தலைமறைவான அன்புச் செழியனை வளசரவாக்கம் போலீஸார் தனிப்படை அமைத்துத் தேடிவருகின்றனர். இந்த விவகாரம், தமிழ்த் திரைப்படத் துறையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. அன்புச் செழியனுக்கு உரிய தண்டனையைப் பெற்றுத் தர வேண்டும் என்று சினிமா பிரபலங்கள் பலரும் கருத்து தெரிவித்துவரும் நிலையில், அவருக்கு ஆதரவாக இயக்குநர் சீனு ராமசாமி கருத்து தெரிவித்திருந்தார்.  

 

இந்த நிலையில், 'கந்துவட்டிக் கொடுமையை சட்டமும் சினிமாத்துறையும் தடுத்தாக வேண்டும்' என்று நடிகர் கமல்ஹாசன் கருத்துத் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், ‘ கந்துவட்டிக் கொடுமை, ஏழை விவசாயி முதல் பணக்காரர்கள் என நம்பப்படும் சினிமாக்காரர் வரை ஆட்டிப்படைப்பதை சட்டமும் சினிமாத்துறையும் தடுத்தாக வேண்டும். அசோக் குமாரின் அகாலமரணம் போல இனி நிகழ்ந்துவிடக்கூடாது. குடும்பத்தார்க்கும் நட்புக்கும் கலைத்துறையின் அனுதாபங்கள்’ என்று பதிவிட்டுள்ளார்.