வெளியிடப்பட்ட நேரம்: 15:05 (23/11/2017)

கடைசி தொடர்பு:15:05 (23/11/2017)

பிரிட்டனில் வெளிவருகிறாள் ‘பத்மாவதி’!

இந்தியாவில், ‘பத்மாவதி’ திரைப்படம் வெளியாவதில் சிக்கல் நீடித்திருக்கும் நிலையில், இத்திரைப்படம் பிரிட்டனில் வெளியாவதற்கு அனுமதி கிடைத்துள்ளது.

பத்மாவதி

14-ம் நூற்றாண்டில் வாழ்ந்த ராணி பத்மினியின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக்கொண்டு உருவாகியிருக்கிறது, 'பத்மாவதி' திரைப்படம். தீபிகா படுகோன், சாகித் கபூர், ரன்வீர் சிங், அதிதி ராவ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இப்படத்தை, சஞ்சய் லீலா பன்சாலி இயக்கியிருக்கிறார். இப்படத்தில் ராணி பத்மினியாக, தீபிகா படுகோனும் அலாவுதீன் கில்ஜியாக ரன்வீரும் நடித்திருக்கிறார்கள். 'பாகுபலி'போல பிரமாண்ட வரலாற்றுத் திரைப்படமாக உருவாகியிருக்கும் 'பத்மாவதி' திரைப்படத்தின் ட்ரெய்லர், சில நாள்களுக்கு முன்னர் வெளியாகியிருந்தது. பாலிவுட் மட்டுமன்றி, ஒட்டுமொத்த இந்தியத் திரையுலகமே பாலிவுட் நடிகை தீபிகா படுகோனின் நடிப்பில் வெளிவர உள்ள ‘பத்மாவதி’ திரைப்படத்துக்காகக் காத்துக்கொண்டிருந்தது. ஆனால், தொடர்ந்து பல்வேறு தரப்பினரிடமிருந்து எதிர்ப்பு கிளம்புவதால், படத்துக்கு தற்காலிகமாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், பிரிட்டன் சென்சார் போர்டு ‘12-ஏ’ சான்றிதழுடன் பிரிட்டனில் வெளியாவதற்கு அனுமதி அளித்துள்ளது. அதாவது, படத்தில் மிதமான வன்முறைக் காட்சிகள் இடம்பெற்றிருப்பதால், 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள், தங்கள் பெற்றோருடன் வந்து மட்டுமே பார்க்க வேண்டும். இதனால் எந்தவொரு காட்சியும் நீக்கப்படாமல், ‘பத்மாவதி’ திரைப்படம் பிரிட்டனில் விரைவில் வெளியாக உள்ளது.