’பத்மாவதி’-க்கு ஆதரவு: நாடு முழுவதும் படப்பிடிப்பு நிறுத்தம் | Film industry's support to 'Padmavati'

வெளியிடப்பட்ட நேரம்: 19:20 (26/11/2017)

கடைசி தொடர்பு:19:20 (26/11/2017)

’பத்மாவதி’-க்கு ஆதரவு: நாடு முழுவதும் படப்பிடிப்பு நிறுத்தம்

’பத்மாவதி’ திரைப்படத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் இன்று நாடு முழுவதும் 15 நிமிடங்கள் அனைத்துப் படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டன.

பத்மாவதி

சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் உருவாகியுள்ள வரலாற்றுப் படம், 'பத்மாவதி'. இந்தப் படத்தில், பத்மாவதியாக தீபிகா படுகோனும், ராணா ரத்தன் சிங்காக ஷாகித் கபூரும், அலாவுதீன் கில்ஜியாக ரன்வீர் சிங்கும் நடித்துள்ளனர். வரலாற்றுப் பின்னணியைக்கொண்டு இந்தப் படம் மிகப் பிரமாண்டமாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் படம் அறிவிக்கப்பட்டதிலிருந்தே, ராஜஸ்தானைச் சேர்ந்த ராஜபுத்திர சமூக மக்கள் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்துவருகின்றனர்.

அதனால், டிசம்பர் 1-ம் தேதி வெளியாகவிருந்த படம் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் படம் வெளியாவதற்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. மேலும், பிரிட்டன் சென்சார் போர்டு ‘12-ஏ’ சான்றிதழுடன் பிரிட்டனில் வெளியாவதற்கு அனுமதி அளித்தது. ஆனால், லண்டன் ராஜ்புத் சமாஜ் சார்பில், 'பத்மாவதி' படத்துக்கு அளிக்கப்பட்டுள்ள தணிக்கைச் சான்றிதழைத் திரும்பப் பெறவேண்டும் என்று பிரிட்டிஷ் திரைப்படங்கள் தணிக்கை அமைப்புக்கு கோரிக்கை விடுத்ததையடுத்து பிரிட்டனிலும் இப்படத்துக்குத் தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் ‘பத்மாவதி’ திரைப்படத்துக்கு திரை உலகினர் ஆதரவு தெரிவிக்கும் வகையில் இன்று நாடு முழுவதும் 15 நிமிடங்களுக்குப் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.