வெளியிடப்பட்ட நேரம்: 20:00 (28/11/2017)

கடைசி தொடர்பு:08:59 (29/11/2017)

முன்ஜாமீன் கோரி அன்புச் செழியன் மனுத்தாக்கல்!

அசோக் குமார் தற்கொலை விவகாரத்தில் தேடப்பட்டு வரும் சினிமா ஃபைனான்ஸியர் அன்புச் செழியன், முன் ஜாமீன் கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். 


இயக்குநரும், நடிகருமான சசிகுமாரின் உறவினர் அசோக் குமார், சென்னை வளசரவாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். அன்புச் செழியன் என்பவரிடம் வாங்கிய கடனுக்காக தொல்லை அதிகரிக்கவே, அசோக் குமார் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது. இந்த விவகாரம் தொடர்பாக அசோக் குமார் எழுதிவைத்த கடிதத்தின் அடிப்படையில், அன்புச்செழியன் மீது வளசரவாக்கம் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், தலைமறைவாக உள்ள அவரை, தனிப்படை அமைத்து காவல்துறையினர் தேடிவருகின்றனர். அன்புச் செழியனுக்கு ஆதரவாகவும், எதிராகவும் தமிழ்த் திரையுலகைச் சேர்ந்த பலரும் கருத்துத் தெரிவித்துள்ளனர். இந்தநிலையில், தேடப்பட்டு வரும் அன்புச் செழியன் முன்ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வர வாய்ப்பிருப்பதாகத் தெரிகிறது.