வெளியிடப்பட்ட நேரம்: 20:38 (30/11/2017)

கடைசி தொடர்பு:21:36 (30/11/2017)

ராணுவ சீருடையில் கமல்! விஸ்வரூபம் - 2 அப்டேட்

விஸ்வரூபம் - 2 படத்தின் படப்பிடிப்பு சென்னையில் சமீபத்தில் தொடங்கி நடந்துவருகிறது. 


கமல்ஹாசன் இயக்கி, நடித்த 'விஸ்வரூபம்' திரைப்படம், பல்வேறு தடைகளுக்குப் பிறகு கடந்த 2013-ல் வெளியானது. இந்தப் படத்தின் முதல் பாகம் எடுக்கும்போதே, இரண்டாம் பாகத்துக்கான 40 சதவிகித படப்பிடிப்பும் முடிந்துவிட்டதாகக் கூறப்பட்டது. இதனால் விஸ்வரூபம் - 2 படம் விரைவில் வெளியாகும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துக்கொண்டிருந்தனர். இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியான நிலையில், பல்வேறு காரணங்களால் படத்துக்கான வேலைகள் பாதியில் நின்றன. 

இந்தநிலையில், விஸ்வரூபம் -2 படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பை நடிகர் கமல் சமீபத்தில் தொடங்கினார். சென்னையில் படப்பிடிப்புகள் நடைபெற்று வருவதாகக் கூறப்பட்டது. தற்போது விஸ்வரூபம் - 2 படப்பிடிப்பு குறித்த தகவலை நடிகர் கமல்ஹாசன் ட்விட்டரில் புகைப்படத்துடன் பகிர்ந்துள்ளார். அந்தப் புகைப்படத்தில் கமல், ஆண்ட்ரியா உள்ளிட்டோருடன் மேலும் சிலர் ராணுவ சீருடையில் இருக்கிறார்கள்.  

 

மேலும் இதுதொடர்பாக, `விஸ்வரூபம் - 2 தமிழ் மற்றும் இந்தி பதிப்புகளுக்கான இறுதிக்கட்ட படப்பிடிப்புகள் நடைபெற்று வருகின்றன. பெண் ராணுவ அதிகாரிகளுக்குப் பயிற்சியளிக்கும் நாட்டின் ஒரே பயிற்சி மையமான சென்னை ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தால் நானும் இந்த நாடும் பெருமையடைகிறோம். பெண்கள் அனைவருக்கும் நான் தலைவணங்குகிறேன், குறிப்பாக எனக்கு மிகவும் பிடித்த எனது பாரதத் தாய்க்கு. மா துஜே சலாம்’ என்று கமல் பதிவிட்டுள்ளார். படப்பிடிப்பு வேலைகள் தொடங்கி வேகம் பெற்றுள்ளதால் விஸ்வரூபம் - 2 படம் அடுத்தாண்டில் வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம்.