`தயாரிப்பாளர் சங்கத் தலைவர் பதவியிலிருந்து விலகுங்கள்' - விஷாலுக்கு எதிராகச் சேரன் போர்க்கொடி

தயாரிப்பாளர் சங்கத் தலைவர் பதவியை விஷால் ராஜினாமா செய்ய வேண்டும் என்று சேரன் தலைமையில் தயாரிப்பாளர்கள் பலர் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 


சென்னை, அண்ணா சாலையிலுள்ள தயாரிப்பாளர் சங்க அலுவலகத்தில் சேரன் தலைமையில் தயாரிப்பாளர்கள் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய சேரன், 'தயாரிப்பாளர் சங்கம் அரசியலில் தொடர்பு இல்லாதது. அதே நேரத்தில் அரசாங்கத்தைச் சார்ந்து இயங்கக்கூடியது. படங்களுக்கான மானியங்கள், வரிச் சலுகைகள், டிக்கெட் விலை உள்ளிட்ட விவகாரங்களில் அரசாங்கத்தை எதிர்பார்த்து இருக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது.

இத்தகைய நிலையில், தயாரிப்பாளர் சங்கத் தலைவரான விஷால் தேர்தலில் நிற்பதால் தயாரிப்பாளர் சங்கம் ஆட்சியாளர்களின் கோபத்துக்கு உள்ளாக நேரிடும். அதனால், தயாரிப்பாளர் சங்கம் பாதிக்கப்படும். 1,230 உறுப்பினர்கள் கொண்ட 500 கோடி ரூபாய் முதலீடு செய்யும் துறையின் தலைவரான விஷால் அதன் பொறுப்பை உணர்ந்து செயல்படவேண்டும். தயாரிப்பாளர் சங்கத்தில் 10 லட்சம் பேரின் வாழ்வாதாரம் அடங்கியுள்ளது.

தயாரிப்பாளர் சங்கத் தலைவரானதிலிருந்து விஷால் எந்த நல்ல விஷயமும் செய்யவில்லை. 400 படங்களுக்கு மானியம் வழங்கப்படவில்லை அதுகுறித்து பைரஸி விவகாரத்திலும் விஷால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தேர்தலில் நிற்பதாக இருந்தால், தயாரிப்பாளர் சங்கத் தலைவர் பதவியிலிருந்து விஷால் பதவி விலக வேண்டும். இதற்கு முன்னர், ராம.நாராயணன் போன்றவர்கள் ஆட்சி மாறும்போது தங்களது தயாரிப்பாளர் சங்கத் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார்கள்' என்று தெரிவித்தார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!