வெளியிடப்பட்ட நேரம்: 19:05 (05/12/2017)

கடைசி தொடர்பு:19:05 (05/12/2017)

`உங்களுக்காக வருத்தப்படுகிறேன்!’ விஷாலுக்கு பதிலடி கொடுத்த சேரன்

தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால், ஆர்.கே.நகரில் போட்டியிடுவதற்கு எதிராகச் சங்க அலுவலகத்தில் சேரன் நடத்திவந்த உள்ளிருப்புப் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டது. 


`தயாரிப்பாளர் சங்கத் தலைவர் பதவியிலிருந்து விஷால் ராஜினாமா செய்ய வேண்டும்' என்று கூறி சேரன் உள்ளிட்ட தயாரிப்பாளர் சங்கத்தைச் சேர்ந்த ஒரு பிரிவினர் நேற்று மதியம் 3 மணி முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். விஷால் நேரில் வந்து பேச்சுவார்த்தை நடத்தாமல் போராட்டம் கைவிடப்படாது என்று கூறி, தயாரிப்பாளர் சங்க அலுவலகத்தில் அவர்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்த உள்ளிருப்புப் போராட்டத்தில், தயாரிப்பாளர்கள் சுரேஷ் காமாட்சி, பாபு கணேஷ், ராதாகிருஷ்ணன், ஜான் மேக்ஸ் உள்பட பலர் கலந்துகொண்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு நடிகர் ராதாரவி மற்றும் ராதிகா ஆகியோர் இன்று நேரில் சென்று ஆதரவு தெரிவித்தனர். 

சேரனின் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளித்த விஷால், ``தேர்தலில் போட்டியிடுவது எனது தனிப்பட்ட விருப்பம். சேரனின் வாதத்தை ஏற்றுக்கொள்ளவே முடியாது. நான் தேர்தலில் நிற்பதாலேயே, அரசாங்கம் தயாரிப்பாளர் சங்கத்தைப் பழிவாங்கும் என்பது ஜனநாயகத்துக்கே எதிரான குற்றச்சாட்டாகத்தான் பார்க்கிறேன். சேரனின் வாதம் இன்றைய மற்றும் முன்னாள் அரசுகளையும் முன்னாள் நிர்வாகிகளையும் கொச்சைப்படுத்தும் விதத்தில் உள்ளது. விளம்பரத்துக்காகச் சேரன் போராட்டம் நடத்துகிறார்’' என்றார். 
இந்தநிலையில், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் விஷால் தாக்கல் செய்த வேட்புமனுவைத் தேர்தல் ஆணையம் நிராகரித்தது. இதையடுத்து, விஷாலுக்கு எதிரான போராட்டத்தைக் கைவிடுவதாகச் சேரன் தெரிவித்தார்.

தயாரிப்பாளர் சங்க அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சேரன், `` நேற்று மாலை 3 மணி முதல் நடந்த இந்தப் போராட்டம், இன்று மாலை 6 மணிக்கு முடிவுக்கு வந்திருக்கிறது. தார்மீகரீதியான எங்களின் போராட்டத்துக்கு வெற்றி கிடைத்திருக்கிறது. விரைவில் நடக்கவுள்ள தயாரிப்பாளர் சங்க பொதுக்குழுவில் எங்கள் கேள்விகளை முன்வைத்து, விடைகளைப் பெறுவோம். நண்பர் விஷால் கடிதம் வாயிலாக எழுப்பிய கேள்விகள் அனைத்துக்கும் நான் பதில் சொல்லப்போவதில்லை.

இத்தனைக்கும் காரணம் உங்களது அனுபவமின்மை மற்றும் அவசரமே. ஒரு சினிமா சகோதரனாக, அவரை எதிர்த்துப் போட்டியிடும்போது ஒரு மகிழ்ச்சி இருந்தது. ஆனால், தற்போது, அவர் வீழ்ச்சியடைந்திருப்பதைப் பார்த்தால் பரிதாபமாக இருக்கிறது. நீங்கள், என்னை சங்கத்திலிருந்து விலக்குங்கள், தண்டியுங்கள் என்ன வேண்டுமானாலும் செய்துகொள்ளுங்கள். உங்களுக்கு ஒன்றை நினைவுபடுத்த விரும்புகிறேன். நீங்களும் நானும் தமிழக சாலையில் நடந்து சென்றால், யாரை அதிகம்பேர் அடையாளம் கண்டுகொள்கிறார்கள் என்று பார்ப்போம். யார் விளம்பரத்துக்கு ஆசைப்படுகிறார்கள் என்று மக்களுக்குத் தெரியும். விஷாலுக்காக நான் வருத்தப்படுகிறேன்'’ என்றார்.