சினிமா
Published:Updated:

நாட்ல என்ன நடக்குதுன்னே புரியலை மச்சான்!

கே.ராஜாதிருவேங்கடம்

##~##

''ஆஹா... மிஸ்டு கால் பார்த்துட்டுக் கூப்பிட் டது தப்பா? நானா வந்து சிக்கிட்டேனா!'' - நள்ளிரவு ஷூட்டிங் முடித்த களைப்புக் குரலுடன் ஜீவா.

''பொது அறிவுக் கேள்விகள்தானே... கேளுங்க... கேளுங்க...'' உள்ளாட்சித் தேர்தல் பிரசாரத்தில் கம்பீரமான குரலுடன் மா.சுப்பிரமணியன்.

''ஓ... ஆன் தி ஸ்பாட் ஆன்ஸரா..?  ஓ.கே. ஆனா, அரசியல் மட்டும் வேணாம்!'' - வழக்கமான உற்சாகக் குரலுடன் திவ்யா.

''என் அறிவைச் சோதிக்க இந்தப் பரீட்சையா? இதனால நாட்டுக்கு என்ன செய்தி சொல்லப்போறீங்க?'' - மிக மிக நிதானமான குரலில் பழ.நெடுமாறன்.

''உதவி கேட்கக்கூட பக்கத்துல யாரும் இல்லையே. சரி... நம்ம ஐ.க்யூ-வை (!) இப்படியாவது செக் பண்ணிக்கலாம்!'' - ஆர்வமும் பதற்றமும் கலந்த குரலில் மோனிகா.

''ரெண்டு நாளாக் காது வலி. அதனால கேள்வி புரியாம தப்பா பதில் சொன்னா கணக்குல எடுத்துக்கக் கூடாது!'' - ரொம்பவும் உஷார் கறார் குரலில் தேவதர்ஷினி.

நாட்ல என்ன நடக்குதுன்னே புரியலை மச்சான்!

நரகாசுரன் அழிந்து இது எத்தனையாவது தீபாவளி?

பதில்: யாருக்குத் தெரியும்!  

ஜீவா: ''2033 வருஷங்க. என்ன கணக்குனு கேட்காதீங்க! எனக்கு தெளிவாத் தெரியும்!''

மா.சுப்பிரமணியன்: ''வருஷம் சரியாத் தெரியலீங்களே!''

திவ்யா: (பின்னால் இருந்து யாரோ சொல்லிக் கொடுக்க...) ''2350 வருஷம் ஆகுது!''

பழ.நெடுமாறன்: ''நரகாசுரனே ஒரு கட்டுக்கதை. அப்புறம் எப்படி வருஷத்தைக் கணக்குப் போட முடியும்?''

மோனிகா: ''சுதந்திர தினம் மாதிரி இதையும் ஒவ்வொரு வருஷமும் சொல்லி இருந்தா மனப்பாடம் ஆகியிருக்கும். திடீர்னு கேட்டா எப்பூடி?''

தேவதர்ஷினி: நரகாசுரன் இறந்து... ம்ம்... பிரிட்டிஷ் இந்தியாவுக்கு வந்ததுக்கு முன்னாடியே தீபாவளி கொண்டாடி இருப்பாங்க. சீனாவுல வெடி கண்டுபிடிக்குறதுக்கு முன்னாடி... கொலம்பஸ் அமெரிக்கா கண்டுபிடிச்சதுக்கு முன்னாடி... ம்ம்ம்... (சட்டென அதிர்ச்சியாகி) ஏங்க நீங்க கேக்குறீங்கனு நானும் சீரியஸா யோசிச்சுட்டு இருக்கேன் பாருங்க! அதெல்லாம் நம்பிக்கைங்க. அதுக்குப் போய் கணக்கெல்லாம் கேட்டுக்கிட்டு!''

தமிழக உள்ளாட்சித் தேர்தலில் பி.ஜே.பி-யோடு கூட்டணி வைத்துள்ள ஒரே கட்சி எது?

பதில்: கொங்கு நாடு முன்னேற்றக் கழகம்!

ஜீவா: ''அரசியல்ல எனக்கு என்னங்க தெரியும்? தெரியலைன்னே போட்டுக்கோங்க!''

மா.சுப்பிரமணியன்: ''அவங்க கூட்டணிபத்தி எதுவும் அறிவிச்ச மாதிரி தெரியலையே! அறிவிச்சா லும், நாம எதுக்குங்க அதைக் கண்டுக்கணும்? நமக்கு வேற வேலை நிறைய இருக்கு!''

திவ்யா: ''பி.ஜே.பி-யா... அப்படின்னா? எனக்கு பாலிடிக்ஸ் சுத்தமா வராதுங்க. இப்படி ஏதாவது என்கிட்ட கேட்டு, அப்புறம் இந்த திவ்யா பொண்ணுக்கு எதுவுமே தெரியலைனு எனக்கு பல்பு கொடுக்குறதுதானே உங்க மோட்டிவ். உங்ககிட்ட உஷாரா இருக்கணும்!''

பழ.நெடுமாறன்: ''கொஞ்சம் இருங்க... (யோசிக்கிறார்) கொங்கு நாடு முன்னேற்றக் கழகம்... சரிதானே!''

மோனிகா: ''இதுக்கு நிச்சயம் கரெக்டா சொல்வேன் பாருங்க... கொங்கு நாடு முன்னேற்றக் கழகம். எப்படி?''

தேவதர்ஷினி: ''அவங்க யார்கூடவும் கூட்டணி வெச்ச மாதிரி தெரியலையே... தனியாத்தானே போறாங்க!''

நாட்ல என்ன நடக்குதுன்னே புரியலை மச்சான்!

சமீபத்தில் 'ட்ராய்’ உத்தரவிட்டபடி, ஒரு சிம் கார்டில் இருந்து ஒரு நாளைக்கு அதிகபட்சமாக எத்தனை எஸ்.எம்.எஸ்-கள் அனுப்ப முடியும்?

பதில்: 100

ஜீவா: ''என்னது... ட்ராயா? அப்படின்னா... நான் ஒரு வாரமா பேப்பர் படிக்கவே இல்லை. எஸ்.எம்.எஸ். அனுப்புறதுல கட்டுப்பாடா? எஸ்.எம்.எஸ். படத்துல நடிச்சவன்கிற முறை யில இதை நான் வன்மையாக் கண்டிக் கிறேங்க. நாட்டுல என்ன நடக்குதுனே புரியலை மச்சான்!''

மா.சுப்பிரமணியன்: ''100... சரிதானே?''

திவ்யா: ''நேத்துதான் படிச்சேன்... 3,000.''

பழ.நெடுமாறன்: ''நல்லாத் தெரியுமே... 100.''

மோனிகா: ''100... கரெக்டா?''

தேவதர்ஷினி: ''100.''

சென்செக்ஸ் என்றால் என்ன?

பதில்: மும்பை பங்குச் சந்தையின் குறியீடு (சென்சிட்டிவ் இண்டெக்ஸ்)

ஜீவா: ''ஏதோ ஷேர் மார்க்கெட் கணக்கு... கரெக்டா என்னன்னு தெர்லபா!''

மா.சுப்பிரமணியன்: ''புரியலையே... அப்படின்னா..? நமக்கு அந்த அளவுக்கு நாலெட்ஜ் இல்லைங்க!''

திவ்யா: ''ஃபேஸ்புக் ஸ்டேட்டஸ் மாதிரி ஷேர் மார்க்கெட் ஸ்டேட்டஸ்னு நினைக்கிறேன்!''

பழ.நெடுமாறன்: ''சென்செக்ஸா? சரியா ஞாபகத்துல இல்லை!''

மோனிகா: ''வீட்ல எத்தனை பேரு இருக்காங்கனு அளவெடுக்க வருவாங்களே... ஸாரி, கணக்கெடுக்க வருவாங்களே... அதானே?''

தேவதர்ஷினி: ''ஷேர் மார்க்கெட்ல வர்ற புள்ளிவிவரம்!''

'மணிமேகலை’யை எழுதியவர் யார்?

  பதில்: சீத்தலைச்சாத்தனார்.

ஜீவா: ''சத்தியமாத் தெரியாதுங்க. என்னை அடிச்சுக் கேட்டாக்கூட சொல்லத் தெரியாதுங்க!''

மா.சுப்ரமணியன்: ''இளங்கோவடிகள்னு படிச்ச ஞாபகம்! இல்லையா?'' (குரல் கம்முகிறது)

திவ்யா: ''எனக்கு தமிழ் சுத்தமாத் தெரியாது. மலையாளத்துல எதாவது கேளுங்க!''

பழ.நெடுமாறன்: ''சீத்தலைச்சாத்தனார்!''

மோனிகா: ''அதை எழுதினவர்கிட்ட நான் நடிச்ச படங்களைப்பத்திக் கேட்டா தெரியுமா? என்கிட்ட கேட்டா, நான் என்னங்க சொல்லுவேன்!''

தேவதர்ஷினி: ''மணிமேகலையா... ஸாரி!''

''சென்னைக்கு 'சென்னை’ எனப் பெயரிட்டது யார்?''  

பதில்: சென்னப்பட்டணம் என்பது மருவி 'சென்னை’ என்னும் பெயர் காலங்காலமாக வழக்கத்தில் உள்ள பெயர். ஆனால், 'மெட்ராஸ்’ என்பதை சென்னை என்றுதான் அழைக்க வேண்டும் என்று 1996-ல் அதிகாரப்பூர்வமாக்கியது அப்போதைய முதல்வர் கருணாநிதி.

ஜீவா: ''சென்னைனு பேரு வெச்சது டி.எம்.கே-வோட சீஃப் மினிஸ்டர் கருணாநிதிதானே?''

மா.சுப்பிரமணியன்: ''சென்னப்பராயனா? இல்ல... இல்ல... நம்ம கலைஞர்!''

திவ்யா: ''ம்ம்ம்... கருணாநிதி!''

பழ.நெடுமாறன்: ''சென்னப்பராயரோட பசங்க கேட்டுக்கிட்டதால ஆங்கிலேயர்கள் பேரு வெச்சாங்க. அது இருக்கட்டும்... நீங்கவெச்ச பரீட்சையில நான் பாஸா... சொல்லுங்க?''

மோனிகா: ''நான்லாம் அப்போ பொறந்துஇருக்கவே மாட்டேன். அப்புறம் எப்படி எனக்குத் தெரியும். சின்னப் புள்ளையை இப்படிலாம் பயமுறுத்தாதீங்க!''

தேவதர்ஷினி: ''யாரா இருக்கும்... தெரியலீங்களே!''