வெளியிடப்பட்ட நேரம்: 14:30 (05/01/2018)

கடைசி தொடர்பு:14:39 (05/01/2018)

`மக்கள்மீது அக்கறைகொள்ளுங்கள்' - முதல்வருக்கு விஷால் வேண்டுகோள்

'மக்கள் நலன்மீது அக்கறைகொண்டு, போக்குவரத்து ஊழியர்களுடன் தமிழக அரசு உடனே பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்' என்று நடிகர் விஷால் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். 

ஊதிய உயர்வு ஒப்பந்தம் தொடர்பாக தமிழக அரசுடன் உடன்பாடு ஏற்படாததால், போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதனால், தமிழகம் முழுவதும் பெரும்பாலான பேருந்துகள் இயக்கப்படாமல் உள்ளன. அதனால், பொதுமக்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகிவருகின்றனர். இந்த விவகாரம்குறித்து விஷாலின் ட்விட்டர் பதிவில், `அறிவிக்கப்படாத போக்குவரத்து ஊழியர்களின் திடீர் வேலை நிறுத்தத்தால், ஒட்டுமொத்த தமிழ்நாடே ஸ்தம்பித்துப்போயிருக்கிறது.

இந்த வேலைநிறுத்தத்தால், பாமர மக்கள்தான் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். விழாக்காலம் நெருங்கும் நேரத்தில், மக்களின் அவதி இன்னும் அதிகமாகுமோ என்ற அச்சம் ஏற்படுகிறது. மக்கள் நலன்மீது அக்கறைகொண்டு, தமிழக அரசு உடனே பேச்சுவார்த்தை நடத்தி போக்குவரத்து ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகளை ஏற்று, வேலை நிறுத்தத்தைக் கைவிடச் செய்ய வேண்டும்' என்று குறிப்பிட்டுள்ளார்.