சினிமா
Published:Updated:

அரசாங்க ஆடு கிடைச்சா முனியப்பனுக்கு கெடா வெட்டு!

விகடன் டீம்படங்கள் : க.தனசேகரன், ரா.ராம்குமார், ஈ.ஜெ.நந்தகுமார்

##~##

''எங்க ஆதிதிராவிட காலனியில் ஆடு வாங்கி இருக்கிறவங்க எல்லா ருக்கும் நான்தான் கண்காணிப்பாளர். யாராவது ஆட்டை விக்க முயற்சி பண் ணாலோ, யாரோட ஆட்டுக்காவது சீக்கு வந்தாலோ மாட்டு டாக்டருக்கு நான்தான் போன் போடணும். இப்பக்கூட நீங்க வந்திருக்கிற விஷயத்தை டாக்டருக்கு போன் போட்டுச் சொல்லிட்டேன்'' என்கிறார் கற்பகவள்ளி கறாராக.

இடம்: மதுரையில் இருந்து சுமார் 40 கி.மீ. தொலைவில் உள்ள அரசம்பட்டி!  தமிழக அரசு வழங்கும் இலவச ஆடு, மாடுகள் கிராமங்கள்தோறும் கலகல களேபரங்களை ஏற்படுத்தி இருக்கின்றன. தமிழகம் முழுக்கப் பரவலாக ஓர் உலா வந்தோம்!

இந்த ஆடு, மாடுகளை இலவசமாக வாங்கும் பயனாளிகளுக்கு ஜெயலலிதா விதித்திருக்கும் நிபந்தனைகள் 'இப்பவே கண்ணைக் கட்டுதே’ ரகம்!

அரசாங்க ஆடு கிடைச்சா முனியப்பனுக்கு கெடா வெட்டு!

பெண்களைத் தலைவராகக்கொண்ட குடும்பங்களுக்குக் கறவை மாடுகள் வழங்குவதில் முன்னுரிமை வழங்கப்படும். அந்தப் பெண்ணுக்கும் 60 வயது ஆகியிருக்க வேண்டும். ஒரு ஏக்கருக்கு மேல் நிலம் இருக்கக் கூடாது. வேறு மாடுகள் சொந்தமாக இருக்கக் கூடாது. கிராமத்திலேயே நிரந்தரமாக வசிப்பவராக இருக்க வேண்டும். பயனாளியின் உறவினர்கள் மத்திய, மாநில அரசுப் பணிகளிலோ பொதுத்துறை நிறுவனங்கள், கூட்டுறவு அமைப்புகளில் பணியாற்றுபவராகவோ இருக்கக் கூடாது. ஆடுகள் கண்டிப்பாகப் பெண்களுக்கு மட்டும்தான். ஆனால், வீட்டில் ஆடு மேய்க்க வசதியாக 18 முதல் 60 வயதுக்கு உட்பட்டவர் யாராவது இருக்க வேண்டும். ஆடு, மாடு இவற்றில் ஏதாவது ஒன்றுதான் வழங்கப்படும். கண்டிஷன்கள் ஓவர். இனி களத்துக்குப் போவோம்.

'மதுரை மாவட்டத்தில் யாருக்கும் மாடு வழங்கப்போவது இல்லை’ என்று பயனாளி கள் வயிற்றில் புளியைக் கரைத்திருக்கிறார் கள் கால்நடைப் பராமரிப்புத் துறையினர். அதனால், இங்கு இலவச ம்மே...ம்மேதானே தவிர, இலவச ம்மா...ம்மா கிடையாது!

அரசாங்க ஆடு கிடைச்சா முனியப்பனுக்கு கெடா வெட்டு!

அரசம்பட்டியில் துள்ளிக் குதித்து ஓடிக் கொண்டிருந்த ஆடுகளின் காதில் கம்மல் போல பிளாஸ்டிக்கில் ஏதோ மினுங்கியது. அரசு வழங்கும் இலவச ஆடு, மாடுகளின் காதுகளில் டோக்கன் குத்தித் தருகிறார்கள்.

''மொத்தம் 10 ஆயிரம் ரூபா கவர்மென்ட் தருது. 'மூணு பொட்டை, ஒரு கிடானு நாலு ஆடுகளை நீங்களே வாங்கிக்கிடலாம். காசை நாங்க கொடுத்திடுவோம். பேரம் பேசி குறைஞ்ச விலைக்கு நாலு ஆடுகளையும் வாங்கிட்டீங்கன்னா, மிச்சக் காசு உங்களுக்குத்தான்’னு வெள்ளலூர் மாட்டு டாக்டர் சொன்னாரு. உடனே, மேலூர் சந்தையில பேரம் பேசி நாலு ஆடுகளை 7,700 ரூபாய்க்கு முடிச்சிட்டேன். ஆனா, அதிகாரிங்களைப் பார்த்த தும் யாவாரி திடீர்னு விலையைக் கூட்டிட்டாரு. ஆனா, விடாமப் போராடி, சொன்ன விலைக்கே ஆடுகளை வாங்கினேன். மிச்சப் பணம் 2,300 செக்கா கிடைச்சுடுச்சு'' என்கிறார் சுமதி உற்சாகமாக.

அரசாங்க ஆடு கிடைச்சா முனியப்பனுக்கு கெடா வெட்டு!

ஆனால், ஊரின் பெரும்பான்மை மக்களுக்குப் பயனளிக்காத இந்தத்திட்டம் எரிச்சலை உண்டாக்கவும் தவறவில்லை. ''அ.தி.மு.க-காரங்க ஓட்டுக் கேட்கும்போது எல்லாத்துக்குமே ஆடு, மாடு இலவசம்னு சொன்னாங்க. ஆனா, இப்ப ஊருக்கு ரெண்டு சதவிகிதம் பேருக்கு... அதுவும் ஆடு மட்டும்தான் கொடுத்து இருக்காங்க. இது நியாயமா'' என்று உடன்பிறப்புக்கள் உள்ளாட்சித் தேர்தல் பிரசாரத்துக்கு இந்தப் பிரச்னை யைக் கையில் எடுத்திருக்கிறார்கள்.  

''எங்க வீட்டுக்காரர் மதுரைப் பக்கம்  எழுமலைக்குப் போய், ரெண்டு குட்டி போடுற நல்ல வர்க்கமா பாத்து வாங்கி வந்தார். அதுல ரெண்டு பொட்டை மூணு மாச சினையா இருக்கு'' என்றார் ஆத்தங்கரைப்பட்டியில் ஆடு வாங்கிய தமிழ்ச்செல்வி.

கன்னியாகுமரி மாவட்டத்திலோ ஆடு, மாடுகளைப் பற்றி விசாரிக்க வந்திருக்கிறோம் என்று கேள்விப்பட்டதுமே தெறித்து ஓடினார்கள்.  'அரசாங்கம் கொடுத்த ஆடு, மாட்டைப் பிடுங்கிட்டுப் போக வந்திருக் காங்க’ என்று யாரோ புண்ணியவான் கிளப்பிவிட்ட புரளிதான் காரணம்.

அரசாங்க ஆடு கிடைச்சா முனியப்பனுக்கு கெடா வெட்டு!

தங்கசாந்தம் என்ற பெண்மணி மட்டும் ''எனக்கு மூணு பெட்டையும் ஒரு கிடாவும் கொடுத்தாங்க. நாலு ஆட்டுல கிடா செத்துப்போச்சு. மேய்ச்சலுக்குப் போன இடத்துல ஏதோ பிளாஸ்டிக் கழிவைத் தின்னுடுச்சாம். வீட்ல ஆடு இருக்குறது  பேங்க்ல பணம் இருக்குறது மாதிரி. பேங்க்ல போட்ட பணம் வட்டி போடும்.ஆடு குட்டி போடும்'' என்று டைமிங் ரைமிங்காகத் தத்துவம் சொன்னார்.

''காதைக் கொடுங்க சார்! ஆடு மே....மேனு கத்துதா, எலெக்ஷனும் மே மாசம் வந்துச்சா?  மாடு அம்மானு கத்துதா? அது அந்தம்மாவை ஞாபகப்படுத்துதா, எல்லாம் பாலிடிக்ஸ்தான் சார்'' என்றார் கறுப்பு - சிவப்பு கரை வேட்டி ஒருவர். என்ன சிந்தனைடா சாமி?

நெல்லை மாவட்டத்தில் இலவச மாடுகள் வாங்கியவர்களுக்கு ஏக குஷி. காரணம், அரசு கொடுத்த மாட்டை அடமானம் வைத்து நிறையப் பேர் கடன் வாங்கி இருக்கிறார்கள். ஒரு சிலருக்கு மாட்டைக் கவனிப்பதில் சிரமம் இருப்பதால், வேறு நபர்களின் பாதுகாப்பில் மேய்ச்சலுக்கு அனுப்புகிறார்கள். இதற்காக மாதம்தோறும் 100 ரூபாய் சம்பளமும் தருகிறார்களாம்.

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி தாலுகாவை அடுத்த ஆதிராகவாபுரம் கிராமத்தைச் சேர்ந்த பூபதி அம்மாளுக்குக் கிடைத்த ஆடுகளை அவரது கணவர் முருகன் மேய்த்துக்கொண்டு இருந்தார். அவர் நம்மிடம் ''என் பெண்டாட்டி 100 நாள் திட்டத்துல வேலைக்குப் போறா. நான்தான் ஆடுகளைப் பார்த்துக்குறேன். காலையில எந்திரிச்சு இலை, தழையை ஒடிச்சு எடுத்துட்டு வருவேன். பொழுதுக்கும் நான்தான் மேய்ப்பேன். ஆடு கொடுத்த அரசாங்கத்துக்கு, மேய்க்கறவனுக்குக் கூலி தரணும்னு தெரியாதா? அதனால முதியோர் பென்ஷன் மாதிரி, ஆடு மேய்க் கிற எனக்கு மாசாமாசம் 1,000 ரூபாய் கூலி தரணும்'' என்கிறார் வெள்ளந்தியாக!

அரசாங்க ஆடு கிடைச்சா முனியப்பனுக்கு கெடா வெட்டு!

சேலம் மாவட்டம், ஆடையூர் கிராமத்தைச் சேர்ந்த வசந்தா, ''ஆடு கொடுக்கிறதுலாம் சரிதான். ஆனா, இப்ப ஆடு மேயறதுக்கு மேய்ச்சல் நிலம் எங்க இருக்கு? எல்லா நிலத்தையும் மனை போட்டுட்டாங்க. ஏதோ ரோட்டோரத்துலதான் மேய்ச்சுட்டு இருக்கோம். இதை நம்பி வேலை வெட்டிக்கும் போக முடியல.

ஆடு கிடைச்சா எல்லை முனியப்பனுக்கு ஒரு கிடா வெட்டறேன்னு வேற வேண்டிக் கிட்டேன். ஆனா, ரெண்டு வருஷத்துக்கு விக்கவும் கூடாது... வெட்டவும் கூடாதுனு கண்டிஷனா சொல்லிட்டாங்க. பொறவு என்ன பண்ணறது? குட்டிபோட்டாதான் முனியப்பன் நேர்த்திக்கடனைத் தீர்க் கணும்'' என்றார்.

அப்படிப் போடு!