ரஜினியின் அரசியல் என்ட்ரி! - ஏ.ஆர்.ரஹ்மானின் கருத்து இதுதான்!

நடிகர் ரஜினிகாந்த் நேரடி அரசியலில் குதித்துவிட்டார். வரும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடப் போவதாக சொல்லியிருக்கும் அவர், கட்சியின் கொடி மற்றும் பெயர் போன்றவற்றை உருவாக்குவதில் மும்முரம் காட்டி வருகிறார். இந்நிலையில், ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து, பேசியுள்ளார் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான்.

ரஹ்மான்

சென்னை, கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா மண்டபத்தில் ரசிகர்கள் மத்தியில் கடந்த 31-ம் தேதி பேசிய நடிகர் ரஜினிகாந்த், ‘அரசியலுக்கு வருவது உறுதி. வரும் சட்டமன்றத் தேர்தலில் தனிக்கட்சி தொடங்கி 234 தொகுதிகளிலும் போட்டியிடுவோம். ஆன்மிக அரசியலை முன்னெடுப்போம்’ என்று அறிவித்தார். ரஜினியின் அரசியல் பிரவேசம் தேசிய அளவில் பேசுபொருளாக மாறியிருக்கிறது. சினிமா நட்சத்திரங்கள், அரசியல் பிரபலங்கள் எனப் பல்வேறு தரப்பினரும் ரஜினிக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனர். மறுபுறம் விமர்சனங்களும் குவிந்தன. 

இப்படிப்பட்ட சூழலில், `ஆன்மிக அரசியல் என்றால் என்ன?' என்ற கேள்விக்கு `உண்மையான, நேர்மையான, நாணயமான, ஜாதி, மதச் சார்பற்ற அரசியலே ஆன்மிக அரசியல்' என்று விளக்கம் தந்தார் ரஜினி. இதுகுறித்து ரஹ்மான், `மதசார்பற்ற ஆன்மிக அரசியலைப் பற்றிதான் ரஜினிகாந்த் பேசியுள்ளார். அவர், நல்ல விதமாகவே ஆன்மிக அரசியல் பற்றி கருத்து கூறியிருக்கிறார் என்று நம்புகிறேன். நல்ல தலைமை தேவைப்படுகிறது என்று நடிகர்கள் நினைப்பதால்தான், அரசியலுக்கு அவர்கள் வருகிறார்கள் என்று நினைக்கிறேன். அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம். ஆனால், மக்களின் தேவை என்ன என்பதை உணர்ந்து அதற்கு ஏற்றாற்போல செயல்பட வேண்டும். உள்கட்டமைப்பு, விவசாயிகளின் பிரச்னைகள் குறித்து உடனடி நடவடிக்கைத் தேவை' என்று கருத்து கூறியுள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!