வெளியிடப்பட்ட நேரம்: 11:45 (20/11/2012)

கடைசி தொடர்பு:11:19 (20/11/2012)

மணிரத்னத்துக்கு வாய்ப்பு கொடுத்ததே தவறு: கோவைத் தம்பி

சென்னை: 'இதயக்கோவில்’படத்தில் மணிரத்னத்துக்கு டைரக்டர் வாய்ப்பு கொடுத்ததே  தவறு என்று மைக் மோகனின் வெள்ளி விழா படங்களை தயாரித்த மதர்லேண்ட் பிக்சர்ஸ்  நிறுவனத்தின் அதிபர் கோவைத்தம்பி காட்டமாக கூறியுள்ளார்.

பென்குவின் பதிப்பகம்,மணிரத்னத்திடம் எடுத்திருக்கும் நீண்ட பேட்டியை தொகுத்து  'கான்வெர்சேஷன்ஸ் வித் மணிரத்னம்’ என்ற தலைப்பில் புத்தகமாக வெளியிட்டுள்ளது.

இந்த புத்தகத்தின் சில அம்சங்களை ஆனந்த விகடன் வார இதழ்,மொழி பெயர்த்து  வெளியிட்டுள்ளது.

அதில்,'முதல் தோல்வி?’ என்ற கேள்விக்கு," தயாரிப்பாளர் கோவைத் தம்பி அப்போது  உச்சத்தில் இருந்த ராதா, அம்பிகா இருவர் கால்ஷீட்டையும் வைத்திருந்தார். என்னுடன்  படம் செய்ய ஆசைப்பட்டு, படத்துக்கான கதையை ஒரு கேசட்டில் பதிவுசெய்து எனக்கு  அனுப்பி இருந்தார். 'இது என் டைப் படம் இல்லை. இப்போது என்னால் உங்களுக்குப்  படம் செய்ய முடியாது’ என்று அவரிடம் நேரில் சொல்லச் சென்றேன்.

நான் சொன்னதைக் கேட்ட அடுத்த கணமே போனில் ராதா, அம்பிகா இருவரின்  கால்ஷீட்டுகளையும் கேன்சல் செய்துவிட்டு, எனக்காகக் காத்திருப்பதாகச் சொன்னார்.  வேண்டாம் என்று சொல்லச் சென்ற நான், என்னை அறியாமல் 'இதய கோயில்’  படத்தில் சிக்கிக்கொண்ட கதை இது. இளையராஜாவின் இசை படத்தை ஓரளவு  காப்பாற்றியது.

குறிப்பாக, 'நான் பாடும் மௌன ராகம்...’ பாடலைக் காட்சிப்படுத்தியபோது  'பியாஷா’ குருதத்துக்கு அஞ்சலி செலுத்துவதாக உணர்ந்தேன். அந்தப் பாடல்தான்  'மௌன ராகம்’ என்ற என் அடுத்த மெகா ஹிட் படத்துக்கான டைட்டிலைத் தந்தது.  மற்றபடி என்னுடைய மிக மோசமான படம் 'இதய கோயில்’!” என்று மணி ரத்னம்  குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் மணி ரத்னத்தின் இந்த கருத்துக்கு கண்டனம் தெரிவித்து கோவைத் தம்பி  வெளியிட்டுள்ள அறிக்கையில்,"அந்த காலகட்டத்தில், தமிழ்நாட்டில் மணிரத்னத்தை  யார் என்றே தெரியாது. அவர் என்னை நேரில் பார்த்தது போலவும், இந்த கதைக்குள்  அவரை அறியாமல் சிக்கிக்கொண்டது போலவும், மிகவும் மோசமான படம்  ‘இதயக்கோவில்’ என்றும் 28 ஆண்டுகளுக்கு பின்பு கூறியிருக்கிறார்.

கொடிகட்டி பறந்த மதர்லேண்ட் பிக்சர்ஸ் வைர விழா, தங்க விழா, வெள்ளி விழா  படங்களை தந்தது தமிழக மக்களுக்கு தெரியும். எத்தனையோ இளைஞர்கள் இருக்க,  தவறான வழிகாட்டுதலால் மணிரத்னத்தை ‘இதயக்கோவில்’ டைரக்டர் ஆக்கியது என்  தவறுதான். அன்று முதல் மதர்லேண்ட் பிக்சர்சுக்கு இறங்குமுகமாக மாறியது  உண்மைதான்.

எனக்கும், இசையமைப்பாளர் இளையராஜாவுக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டது ஏன்  என்பது மணிரத்னத்தின் மனசாட்சிக்கு தெரியும்.அந்த படத்தில் எனக்கு மூன்று பட  செலவு ஏற்பட்டது. விவரம் தெரியாமல்,காட்சிகளை சுட்டுத்தள்ளியது என்  பொருளாதாரத்தை சுட்டு பொசுக்கியது.என்னைப் பொறுத்தவரை, ‘இதயக்கோவில்’  வெற்றி படம்தான்.

திராவிட இயக்கத்தில் பற்றுடையவன் என்ற முறையில், அவர் இயக்கிய ‘இருவர்’  படத்தை நண்பர்களிடம் நான் கடுமையாக விமர்சனம் செய்ததுதான், என்னையும், என்  நிறுவனத்தையும் அவர் தாக்குவதற்கு காரணம் என்று என் மனசாட்சி சொல்கிறது” என்று  கூறியுள்ளார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க