வெளியிடப்பட்ட நேரம்: 19:11 (08/01/2018)

கடைசி தொடர்பு:19:11 (08/01/2018)

`திரைப்பட அளவுக்கு எடுத்திருக்கிறார்கள்!’ - `பைரவா’ துணை இயக்குநர்

`3 மணிநேர திரைப்படங்கள் சொல்ல முடியாத கதையை  5 நிமிட  குறும்படங்கள் விளக்கிவிடும். பெரும்பாலான இயக்குநர்கள் குறும்படங்களில் இருந்தே தங்களின் திரைப் பயணத்தைத் தொடங்கியவர்கள். குறும்படங்கள் இயக்கம், நடிப்பு உள்ளிட்டவை பற்றி விழிப்பு உணர்வு ஏற்படுத்தும் வகையில் குறும்பட மீடியாவும் சத்திரியா பிலிம் டெக்னாலஜி கல்லூரியும் இணைந்து குறும்பட போட்டி மற்றும் வொர்க்‌ஷாப்பை வேலூரில் உள்ள ஊரீசு கல்லூரி வளாகத்தில் நடத்தி விருதுகள் வழங்கினர். இந்த நிகழ்ச்சியை சிறப்பிக்க `பைரவா’ படத்தின் துணை இயக்குநர் பாரதி செல்வன்,  `அலைபேசி’ படத்தின் இயக்குநர் முரளி பாரதி, விஜய் தொலைக்காட்சி கலக்கப்போவது  யாரிலிருந்து சரத், எம்.ஜி.ஆர் பேரன் ராமச்சந்திரன் ஆகியோர் வந்திருந்தனர். 

லக்‌ஷ்மி குறும்படம்

பைரவா படத்தின் துணை இயக்குநரிடம் மாணவர்கள் கேட்ட கேள்விகளும் அவரின் பதில்களும் பின் வருமாறு,

ஒரு காட்சியை நடிகர்கள் சரியாக நடிக்காதபோது அந்த சூழ்நிலையை  எப்படி கையாளுவீர்கள்?

``எல்லா துறைகளிலும் பாராட்டி வேலை வாங்குவதே சிறந்த வழி. நடிகரிடம் நமது கோபத்தைக் காட்டவே கூடாது. நன்றாக இருந்தது,  கொஞ்சம்கூட நன்றாகச் செய்திருக்கலாம் என  நடிகர்களை ரிலாக்ஸ் செய்தே நாம் வேலையை வாங்க வேண்டும்.'' 

நண்பர்களிடம் நீங்கள் எடுக்கப்போகும் கதையைச் சொல்லும்போது இதில் `Content’  சரியில்லை,  மாற்றிக்கொள்ளலாமே என்றால்  என்ன செய்வீர்கள்?

``சில இயக்குநர்கள் தங்கள் கருத்துகளில் தெளிவாக இருப்பார்கள்; அதனால் எந்த மாற்றமும் செய்ய மாட்டார்கள். சிலர் மற்றவர்களின் கருத்துகளைக் கேட்டு மாற்றம் செய்துவிடுவார்கள்.''

நமக்காகப் படம் பண்ணணுமா மக்களுக்காகப்  படம் பண்ணணுமா?

`அதிகப்படியான  படங்களை மக்களுக்காக எடுங்கள். உங்களுக்காகச் சில படங்கள் எடுங்கள்!''

`Logic’ இல்லாமலேயே நிறைய படங்கள் எடுக்கப்படுகிறது. இந்தத் தவறு எங்கே ஏற்படுகிறது?

 ``பழமொழியை அனுபவிக்க வேண்டுமே தவிர ஆராயக் கூடாது என்பதுபோலதான். 90 % மக்கள் திரைப்படத்தை சந்தோஷமாகப் பார்க்க வருகிறார்கள்.10% மக்கள்தான் லாஜிக் பார்ப்பவர்கள். அதே சமயம் ஒரு நகைச்சுவை படத்தில் பெரிய லாஜிக் ஒன்றும் தேவையில்லை.''

பைரவா படத்தில் தளபதி விஜய் பற்றி சில வார்த்தைகள்...

``நாணயத்தை விரல்களில் மாற்றும் ஒரு காட்சி வரும். அதைச் சொல்லும்போது இதுவேண்டாம் மாற்றிவிடுங்கள் என்று சொல்லி இருந்தால் இயக்குநரும் மாற்றி இருப்பார். ஆனால் அவர்  25 நாட்களுக்கு மேல் பயிற்சி செய்து அந்த காட்சியை செய்து முடித்தார். இந்த முயற்சியும் ஈடுபாடும் தான் 60 படங்களுக்கும் மேல் அவரை வெற்றி அடைய  செய்கிறது.  சரியான நேரத்துக்கு படப்பிடிப்புக்கு வருவது,  டெக்னீசியன்களை மதிப்பது ஆகியவை அவரின் சிறந்த குணங்கள்.'' 

சமீபத்தில் பார்த்த குறும்படங்களில் திரைப்பட அளவுக்கு படத்தை எடுத்திருக்கிறார்கள் என்று நீங்கள் நினைத்தது?

``விவாதத்துக்குள்ளான `லக்‌ஷ்மி' திரைப்படம்.''