Published:Updated:

மந்திரி தந்திரி கேபினெட் கேமரா

மந்திரி தந்திரி கேபினெட் கேமரா

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

மந்திரி தந்திரி கேபினெட் கேமரா
##~##
''எ
திரின்னு தெரிஞ்சா, தானாகப் போய் மோதுவார். அதனால்தான் அவருக்கு இனிஷியலே தா.மோ!'' - துணை முதல்வர் ஸ்டாலின் தா.மோ.அன்பரசனைத் தட்டிக் கொடுத்துச் சொன்ன வார்த்தைகள் இவை. வைணவக் கடவுள்களை சைவர்கள் புறக்கணிப்பதுபோல... ஸ்டாலின் தவிர, தா.மோ.அன்பரசனுக்கு வேறு கடவுள் தி.மு.க-வில் இல்லை!

சென்னையின் புறநகர்ப் பகுதியான குன்றத்தூர் முருகன் கோயில் அனைவரும் அறிந்தது. குன்றத்தூர் தா.மோகனலிங்கத்தைத் திராவிட இயக்கத்தவர்கள் அனைவரும் அறிவார்கள். நெசவைத் தனது குலத் தொழிலாகவும் குடும்ப வாழ்க்கைக்கு அடித்தளமாகவும் வைத்திருந்த மோகனலிங்கம்... தரமான வேட்டிகளைத் தேர்ந்தெடுத்து, பேராசிரியர் அன்பழகனுக்குத் தானம் பண்ணுவதன் மூலமாக கட்சித் தலைவர்கள் மத்தியில் அறிமுகம் ஆனார். அதன் பிறகு வேட்டிகள் கருணாநிதி கைக்கும் இடம் மாறின. இதனால் செல்வாக்கை வளர்த்துக்கொண்ட மோகனலிங்கத்தின் மகன்தான் இந்த அன்பரசன்!

மந்திரி தந்திரி கேபினெட் கேமரா

இன்று காஞ்சிபுரம், திருவள்ளூர் என இரண்டாகப் பிரிக்கப்பட்ட அன்றைய செங்கல்பட்டு மாவட்டத்தின் அசைக்க முடியாத மாவட்டச் செயலாளராக இருந்தவர் மதுராந்தகம் ஆறுமுகம். 'ஐ யம் எ மெக்கானிக்’ என்று மேடைதோறும் சொல்லி, செங்கல்பட்டு மாவட்டத் தி.மு.க-வைச் செம்மைப் படுத்திக்கொண்டு இருந்தவர் மதுராந்தகத்தார். நாஞ்சிலார் 'கருவின் குற்றம்’ கவிதை எழுதிப் பிரச்னை ஆனபோது, 'காலத்தின் குற்றம்’ என்ற கவிதையைப் படைத்து மோதியவர் மதுராந்தகம். (அவரது மனைவி கோதை - தமிழ்ப் புலவர்!) அப்படிப்பட்ட மதுராந்தகம் ஆறுமுகத்தின் கண்ணில் பட்டார் இளைஞராக இருந்த அன்பரசன். நெசவு மக்களுக்கும் ஒப்புக்கு ஒரு பதவியைக் கொடுக்க வேண்டும் அல்லவா?

அன்பரசனுக்கு, தி.மு.க. இளைஞர் அணி துணை அமைப்பாளர் பதவி தேடிப் பிடித்துத் தரப்பட்டது. அவரது அடக்கமான சிஷ்யராகத் தொடர்ந்தார். இதன் மூலம் ஸ்டாலினுக்கு அன்பரசனின் பெயரும் முகமும் அறிமுகம் ஆனது. வைகோ தனிக் கட்சி ஆரம்பித்தபோது, மதுராந்தகம் ஆறுமுகம் ம.தி.மு.க. பக்கம் தாவினார். ஆனால், அன்பரசன் இங்கேயே தங்கினார். மதுராந்தகத்தார் இடத்துக்கு 'கண்டோன்மென்ட்’ சண்முகம் வந்தார். அவருக்கும் அடங்கியபடி ரொம்பவே உதவி கரமாக இருந்தார். முதலில் பேரூர் அமைப் பாளராகவும், பின் ஒன்றிய அமைப்பாள ராகவும், 10 ஆண்டுகள் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளராகவும் பணியாற்றிய அன்பரசனுக்குக் கடந்த 2003-ம் ஆண்டு காஞ்சி புரம் மாவட்டச் செயலாளர் பதவியே கையில் வந்து விழுந்தது. அப்புறம் என்ன... அரசியல் ஆட்டம்தான். தன் வளர்ச்சிக்குக் காரணமாக இருந்த சண்முகம் உள்ளிட்ட ஜாம்பவான்களை ஓரங்கட்டி, 'அமைதிப் படை’ சத்யராஜாக பவனி வரத் தொடங்கினார். மூத்த நிர்வாகிகளான ஆலந்தூர் ஆர்.எஸ்.பாரதி, சங்கரி நாராயணன் உள்ளிட்டவர்களையும் கார்னர் செய்து, கட்சிக்குள் தன்னை முன்னிறுத்திக் கொண்டார்.

காலத்தின் ஓட்டம் ம.தி.மு.க-வில் இருந்து விலகிய மதுராந்தகம் ஆறுமுகம் மீண்டும் தி.மு.க-வுக்கே வந்து சேர்ந்தார். 'நம்ம அன்பரசுதானே’ என்று அவர் தப்பாகக் கணக்குப் போட்டுவிட்டார், பாவம்!

மதுராந்தகம் பெயரையே எந்த அழைப்பிலும் போடக் கூடாது என்று அன்பரசன் கட்டளை போட்டதாக கட்சிக்காரர்கள் சொல்கிறார்கள். 'நான் வளர்த்த பையன் என்னையே எட்டி உதைக்கிறானே’ என்று எல்லோரிடமும் சொல்லி அழுதார். அதன் பிறகு, கருணாநிதிக்குக் கடிதம் எழுதிவிட்டு அ.தி.மு.க. மாறினார். சொந்தக் கட்சித் துரோகம் அவரது உடல்நிலையைக் கெடுத்து மரணத்தைச் சீக்கிரமே கொண்டுவந்து சேர்த்தது. 10 ஆண்டுகள் இருந்த ம.தி.மு.க-வும், 10 மாதங்கள் இருந்த அ.தி.மு.க-வும் இறுதி அஞ்சலியில் கலந்துகொள்ள... 30 ஆண்டுகள் உழைத்த தி.மு.க-வில் இருந்து ஒருவரும் வரவில்லை. அவரால் அடையாளம் காட்டப்பட்ட அன்பரசன்கூட வரவே இல்லை. அரசியல்தான் எத்தனை கொடுமை ஆனது!

மந்திரி தந்திரி கேபினெட் கேமரா

2003-ல் தேர்தலுக்காக முன்கூட்டியே நிதியளிப்புக் கூட்டங்களை மாநிலம் முழுக்க நடத்தச் சொல்லி 'முரசொலி’யில் அறிவிப்பு வெளியிட்ட கருணாநிதி, 'காஞ்சி வழி நடப்போம்!’ எனக் கொட்டை எழுத்தில் குறிப்பிட்டு இருந்தார். அதாவது, 'அண்ணா வழியில் நடப்போம்’ என்று மட்டும் அதற்குப் பொருள் அல்ல; கருணா நிதியின் அறிவிப்புக்கு முன்னரே, காஞ்சி புரத்தில் தேர்தல் நிதியளிப்புக் கூட்டத்தைப் பிரமாண்டமாக நடத்தி,

மந்திரி தந்திரி கேபினெட் கேமரா

1 கோடியை கருணாநிதியிடம் கொடுத்து அசத்தினார் அன்பரசன். அதனால், 'காஞ்சி அன்பரசன் வழியில் கேட்காமலேயே கெட்டிக்காரர் களாகப் பணத்தைத் திரட்டிக் கொடுங்கள்’ என்பதைத்தான் சூசகமான வார்த்தைகளாக கருணாநிதி சொல்லி இருந்தார். அந்த அள வுக்கு, 'வெட்டிக்கொண்டு வா... என்றால், கட்டிக்கொண்டு வருகிற ஆளா’கத் தன்னைத் தி.மு.க-வில் அடையாளப்படுத்திக்கொண்டார் அன்பரசன். அதனால்தான், முதல் தடவை தேர்தலில் நின்று ஜெயித்து, அப்போதே அவரால் அமைச்சராகவும் முடிந்தது!

முதலில் ஸ்டாலினின் ஆதரவாளர்... அதன் பின்னரே தொழிலாளர் நலத் துறைக்கு அமைச்சர் எனச் சொல்லக்கூடிய அளவுக்குத் துறையை மறந்துவிட்டு, ஸ்டாலினின் பின்னால் அலைவதில் அலாதி இன்பம். அழகிரி, கனிமொழி உள்ளிட்ட யாரிடமும் மறந்தும் பேசுவது கிடையாது. ராஜாத்தி அம்மாளுக்கு மிக நெருக்கமான பெண் எம்.எல்.ஏ. ஒருவரைப் பலருக்கும் மத்தியில்வைத்து, 'நீ கமிஷன் வாங்குற ஆளாமே...’ எனப் பகிரங்கமாக அவமானப்படுத்தியவர். 'பார்க்கத்தான் பவ்யம்... செய்வது எல்லாம் படா படா!’ என்கிறார்கள் கட்சிக்காரர்கள்.

காஞ்சிபுரம் தி.மு.க. தொண்டர் ஒருவரின் குழந்தைகள் ஏரியில் மூழ்கி இறந்துபோயின. அதற்கு இழப்பீடாக அரசாங்கத்திடம் பணம் கேட்டு அந்தத் தொண்டர் மனு கொடுத்தார். மாவட்டச் செயலாளர் மற்றும் மந்திரி என்பதால், சுமார் ஆறு முறை அன்பரச னிடம் மனுக்கள் தரப்பட்டதாகச் சொல்கிறார்கள். உதவி கிடைக்கவில்லை. துணை முதல்வர் ஸ்டாலின் கைக்கும் இந்தத் தொண்டரின் மனு போயும், பிரயோஜனம் இல்லை. நொந்து போன தொண்டர், அண்ணா நூற்றாண்டு விழாவில் கலந்துகொள்ள காஞ்சி புரம் வந்த மு.க.அழகிரியைப் பார்த்து மனு கொடுத்தார். உடனே, அவர் அருகில் இருந்த முதல்வர் கருணாநிதியிடம் கொடுக்க... அவர் கையெழுத்து போட்டார். இரண்டே நாட்களில் அவருக்கு நிதி கிடைத்தது. கலெக்டர் சந்தோஷ் மிஸ்ரா, அரசு விடுதியில் வைத்து அந்த நிதியைக் கொடுக்க நாள் குறித்து, அன்பரசனையும் அழைத்தார். செக் கொடுத்தவர் அமைதியாக இருந்து இருக்கலாம். 'நீ அந்த அளவுக்குப் பெரிய ஆளா ஆயிட்டியா? என் கையில மனு தர மாட்டியா?’ என்று கேட்டதாகவும், தன்னுடைய சோகத்தை அந்தத் தொண்டர் பத்திரிகையாளர்கள் முன்னிலையில் கொட்டியதாகவும், அதனால் அமைச்சர் வெலவெலத்துப்போனதாகவும் தகவல் பரவியது. செக் வாங்கிய அந்த தொண்டர், ஸ்வீட் வாங்கிக்கொண்டு... மதுரைக்கு போன் அடித்து, நேரே போய் அழகிரி முன்னால் ஆஜராகி, அந்தச் செக்கை அவரது கையால் வாங்கியது தனிக் கதை.

மந்திரி தந்திரி கேபினெட் கேமரா

இதை நீங்கள் ஸ்டாலின் விசுவாசமாகவும் பார்க்கலாம்! அதனால்தான் திடீரென்று அன்பரசனுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு, பல மாதங்கள் தலைமைச் செயலகத்துக்கு வர முடியாத நிலைமை ஏற்பட்டபோதும், அவரது துறை மாறாமல் இருந்தது. ஆற்காட்டார், கோ.சி.மணி ஆகிய இருவரின் வீட்டுக்குப் போய், அமைச்சர் பதவியில் இருந்து விலகி இருக்கலாமே என்று கெஞ்சிய கருணாநிதியால், அன்பரசன் விஷயத்தில் எதுவும் செய்ய முடியவில்லை. இந்த விஷயத்தில் ஆச்சர்யமான அதிர்ச்சி என்னவென்றால், அமைச்சருக்கு உடல் நலம் இல்லாமல் அப்போலோவில் அட்மிட் ஆன அதே தினத்தில்தான் அவரது தனிச் செயலாளருக்கும் உடல் நலம் இல்லாமல் போனது. இரண்டு பேராலும் பல மாதங்கள் செயல்பட முடியவில்லை. இதைவைத்து சில வதந்திகளும் கிளம்பின. அதில் இருந்து மீண்டு, மறுபடியும் வந்தார்.

தா.மோ.அன்பரசன் செயல்படவில்லை என்ற விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், மெள்ள மெள்ள விழாக்களில் பங்கேற்க ஆரம்பித்தார். அன்பரசன் மட்டுமல்ல; 'வேலை கொடு... வேலை கொடு... வேலை கொடுக்க முடியாவிட்டால், வேளா வேளைக்குச் சோறு கொடு’ என்று கோஷம் போடும் கம்யூனிஸ்ட்டுகள் ஆட்சிக்கு வந்தாலும், வேலை இல்லாத் திண்டாட்டத்தை ஒழிக்க முடியாது. புதிதாக உருவான பன்னாட்டு கம்பெனிகள் மூலமாக ஏராளமான வேலைவாய்ப்புப் பெருகியதால் அன்பரசனுக்குத் தலைவலி குறைந்தது. தொழிலாளர்களுக்கும் முதலாளிகளுக்கும் ஏற்படும் பிரச்னைகளைச் சரிசெய்து, இரண்டு தரப்புகளுக்கும் சமமான கொள்கை முடிவுகளை எடுக்க வேண்டியது இந்தத் துறையின் முக்கியமான வேலை. இன்றைக்குப் புதிதாக உருவாகும் பல்வேறு கம்பெனிகளில் தொழிற்சங்க உரிமையே கிடையாது. அப்படியே சங்கம் இருந்தாலும், ஒரு சங்கத்துக்கு மட்டுமே அதிகாரபூர்வ அனுமதி கிடைக்கும். இதுவும் அன்பரசனுக்கு வசதியான விஷயம்தான். எனவே, பெரிய அளவில் தொழிற்சங்கப் பிரச்னைகள் வெளியில் தெரியாமல் அமுக்கப்படுகின்றன. தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்குக் குறைந்தபட்சக் கூலி நிர்ணயம் செய்ததும், பஞ்சாலைத் தொழிலாளர்களுக்கு நிர்ணயம் செய்ய கமிட்டி போட்டதும் அமைச்சரின்

மந்திரி தந்திரி கேபினெட் கேமரா

சாதனையாகச் சொல்லப்படுகின்றன. அமைப்பு சாரா தொழிலாளர்களுக்காக அமைக்கப்பட்ட நல வாரியங்கள் இந்த ஆட்சியின் முக்கிய சாதனையாகவும் இருக்கின்றன. வேலைவாய்ப்பு கிடைக்கிறதோ இல்லையோ, வேலைவாய்ப்பு பதிவு சுலபமாக்கப்பட்டு இருப்பதைத் தனது சாதனையாக அன்பரசன் சொல்லலாம். தலைநகர் சென்னையிலேயே திரும்பிய பக்கம் எல்லாம் குழந்தைத் தொழிலாளர்கள் கண்ணில்படுகிறார்கள். அந்த அவலத்தை ஒழிக்க வேண்டிய கடமையும் அவருக்குத் தான் இருக்கிறது.

ஆனால், அமைச்சரால் ஒழித்து ஓரங்கட்டப்பட்டவர்களின் பட்டியல், குன்றத் தூர் மலை அளவுக்கு இருக்கிறது. கண் டோன்மென்ட் சண்முகம், கூடுவாஞ்சேரி எம்.வி.ராமு, காஞ்சிபுரம் சி.வி.எம்.ஏ. பொய்யாமொழி, பாலவாக்கம் மனோகரன், பல்லாவரம் சிங்காரம், தாம்பரம் ராஜா என அது மிக நீளம்!

ஒவியம் : அரஸ்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு