எங்கள் நோக்கம் கஜானா அல்ல, மக்கள்தான்! - கமல் சூளுரை

நாங்கள் கஜானாவை நோக்கிச் செல்லவில்லை. மக்களை நோக்கிச் செல்கிறோம் என்று நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். 

நடிகர் கமல்ஹாசன், இரண்டாவது நாளாக அவரது ஆழ்வார்பேட்டை இல்லத்தில் அவரின் ரசிகர்களைச் சந்தித்து வருகிறார். சந்திப்புக்கு இடையே ரசிகர்களிடம் பேசிய கமல்ஹாசன், 'நாம், இதேபோல் கூடுவது முதல்முறை அல்ல. ஆனால், தற்போது லட்சியம் மாறியிருக்கிறது. நாம், இந்தப் பயணத்தைத் தொடங்கி நீண்ட நாள்களாகியுள்ளது. 33 வருடங்களாக இந்தப் பயணம் தொடர்கிறது. இதுவரை நாம் பலனை எதிர்பார்த்து நற்பணிகள் செய்யவில்லை.

இனியும் அப்படிதான் இருக்கும். நாம் வெற்றியை நோக்கி போய்க்கொண்டிருக்கிறோம். நாம் கஜானாவை நோக்கிச் செல்லவில்லை. நாம் நோக்கிச் செல்வது, மக்களின் முன்னேற்றத்தை. எனவே, வெற்றி நிச்சயம். சாதி, மதம் குறித்து இதற்கு முன்னர் நான் உங்களிடம் கேள்வி கேட்டது கிடையாது. இனிமேலும் கேட்க மாட்டேன். இதுவரையில் நீங்கள் எந்தக் கட்சி என்று கேட்டது இல்லை. ஆனால், இனிமேல் அதைக் கேட்பேன். புதிதாக நம் கட்சியில் இணைய உள்ளவர்களுக்கு நீங்கள் மூத்த அண்ணன்கள். எனவே, அந்தக் கண்ணியத்துடன் செயல்பட வேண்டும். நாம், ஏற்கெனவே நல்லது செய்தபோது கவனிக்கப்பட்டோம்.

தற்போது, நீங்கள் செய்யும் ஒவ்வொன்றும் கவனிக்கப்படும். நீங்கள் செய்வது கண்ணியமான முறையில் இருக்க வேண்டும். போஸ்டர்கள் ஒட்டுவதில் கவனமாக இருக்க வேண்டும். தேவையற்ற வாசகங்கள் இடம் பெற வேண்டாம். நமக்கு விரோதிகள், சமூகத்துக்கு விரோதிகள்தான். நாம் மக்களை நோக்கிச் செல்லும் பயணம் விரைவாக இருக்க வேண்டும். இது நம்முடைய குடும்பவிழா. அனைத்து ஊர்களுக்கும் வருவேன்' என்று தெரிவித்தார். 
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!