30 கிலோ லெஹங்கா முதல் கடின நடனம் வரை...பத்மாவத்தாக மாறிய தீபிகா!

பத்மாவத்

ல்வேறு  எதிர்ப்புகளைத் தாண்டி, தீபிகா  படுகோனே நடித்த  ’பத்மாவத்’ திரைப்படம் வெளியாகியிருக்கிறது ‘ஒரு  வரலாற்றுத் திரைப்படத்துக்குக் கொலை மிரட்டல்களும்  கலவரங்களும்  தொடர்ந்துகொண்டிருக்கும்  நிலையில், திரைப்படம்  குறித்து பலதரப்பட்ட விமர்சனங்களும் வந்துகொண்டிருக்கிறது. ஒரு திரைப்படம் உருவாகுவதற்கு ஒரு குழுவே பல வருடங்கள் சேர்ந்து கடுமையாக உழைக்கிறது. அப்படி  200 கோடி  ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்ட இந்தப் பிரமாண்ட திரைப்படத்தில், அதிகம் பேசப்படாதது,  பத்மாவத்தாக மாறிய தீபிகா படுகோன் பற்றிய சுவாரஸ்யமான விஷயங்கள் உண்டு. அவற்றில் சில...

தீபிகா படுகோனுக்கு நடனம்  கைவந்த கலை. தான் அறிமுகமான ‘ஒம் சாந்தி ஒம்’ திரைப்படத்தில் வெஸ்டர்ன் நடனத்தில் சாந்தி ப்ரியாவாக கலக்கியதில் தொடங்கி,  ’ராம் லீலா’ படத்தில்  கர்பா நடனம் கற்றுக்கொண்டது, ‘ஹேப்பி நியூ இயர்’ படத்துக்காக ‘போல்’ டான்ஸ் (pole dance) ஆடியது என ஒவ்வொரு படத்திலும்  நடனத்தில் தனி கவனம் செலுத்துவார். ’பத்மாவத்’ திரைப்படத்தில், யூடியூப்பில் பல மில்லியன் பேர் பார்த்து ரசித்த ‘கோமர்’ பாடலுக்கு , ராஜஸ்தானி நடனமான  கோமரை (Ghomar),  ஜோதி டி டோம்மார்  என்ற ராஜஸ்தானி கோமர்  கலைஞரிடம்  கற்றுக்கொண்டார் தீபிகா.  இந்தப் பாடலுக்கு  க்ருதி மகேஷ் மித்யா  என்பவர்  நடனம் அமைத்திருக்கிறார்.  

இந்தப் பாடல் எடுக்கப்பட்ட விதம் பற்றி தீபிகா கூறுகையில், “என் சினிமா வாழ்க்கையில் மிகவும் கடினமான பாடல் இது.  அந்த நாளை நான் மறக்கவே மாட்டேன். அந்தப் பாடலின் ஷூட்டிங்  ஆரம்பித்தபோது, பத்மாவத் ஆன்மாவே என்னுள் புகுந்ததுபோல உணர்வு ஏற்பட்டது. பல ஆண்டுகளுக்கு இந்த உணர்வு எனக்குள் இருக்கும்”  என்றார்.

அந்தக் குறிப்பிட்ட  கோமர்  நடனம், சுழன்று சுழன்று  ஆடுவதுபோல அமைக்கப்பட்டிருக்கும். இந்தப் பாடலுக்காக 66 முறை  சுழன்று  சுழன்று நடனமாடியிருக்கிறார் தீபிகா. அதிலும், 30 கிலோ எடையுள்ள லெஹங்காவையும்,  அதிக எடை தங்க நகைகளையும் அணிந்து அவர் நடனமாடியிருப்பது  தீபிகாவின் அபார உழைப்புக்கு எடுத்துக்காட்டு. 30 கிலோ  லெஹங்காவை வடிவமைத்தது,  புதுடெல்லியைச் சேர்ந்த   ரிம்பிள், ஹர்பீத் நாரூலா என்ற ஆடை வடிவமைப்பாளர்கள். இந்த லெஹங்காவின் விலை 30 லட்சம்.


தீபிகா  படுகோன் அணிந்திருந்த நகைகளை வடிவமைத்தது, தனிஷ்  ஜூவல்லர்ஸ்.  இந்தத் திரைப்படம் முழுவதும் தீபிகா அணிந்துவரும் தங்க நகைகள் கிட்டதட்ட 400 கிலோ எடை. 200 நகை வடிவமைப்பாளர்கள், 600 நாட்கள் இந்த  நகைகளை வடிவமைத்ததாக தனிஷ் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

தீபிகா

இந்தத்  திரைப்படத்துக்காக, தீபிகா படுகோன்  சிறப்பு ஃபிட்னஸ் பயிற்சிகள் மேற்கொண்டார். பிரபல ஃபிட்னஸ் பயிற்சியாளர்  யாஸ்மின் காரச்சிவாலா,  தீபிகாவுக்கும் ரன்வீர் சிங்குக்கும் உடற்பயிற்சிகளுக்கு வழிகாட்டியிருக்கிறார். இதுபற்றி யாஸ்மின் கூறுகையில், “தீபிகாவுக்கு 20-20-20  என்ற முறையில் பயிற்சி அளிக்கப்பட்டது. அதாவது, 20 நிமிடங்களுக்கு ஒருமுறை மூன்றுவிதமான மிஷின்களில் பயிற்சி அளித்தோம். அவருக்கு இயல்பாகவே தன் உடலை எப்படி  உறுதியாக வைத்துக்கொள்ளவது என்பது தெரியும். அதனால், இரண்டே வாரங்களில் பத்மாவத்தாக மாறுவதற்கான உடலை பெற்றுவிட்டார்” என்கிறார்.


தீபிகாவுக்கு உடல் பலம் மட்டுமின்றி, மனவலிமையும் இருக்கிறது என்பதற்கு ‘பத்மாவத்’ திரைப்படம் ஒரு சான்று!   

Do you like the story?

Please Appreciate the Author by clapping!