வெளியிடப்பட்ட நேரம்: 06:20 (29/01/2018)

கடைசி தொடர்பு:07:14 (29/01/2018)

ஏப்ரல் 2019-ல் அடுத்த சீசன்! ‘கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய நடிகை! #GOTS8

HBO தொலைக்காட்சியின் பிரமாண்டத் தயாரிப்பான ‘கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ உலகளவில் மாபெரும் ரசிகர் படையை சம்பாதித்து இருக்கிறது. ஏழு ஆண்டுகளுக்கு முன் ஆரம்பிக்கப்பட்ட இந்தத் தொடர், தற்போது அதன் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. விரைவில் வெளிவரவிருக்கும் சீசன் 8 தான் இறுதி சீசன், இதனுடன் நாடகம் முடிந்துவிடும் என்று அறிவிக்கப்பட்டதிலிருந்தே அதன் ரசிகர்கள் சோகக் கடலில்தான் மூழ்கியுள்ளனர். மேலும், ஓர் இடியாக, அதுவும் இந்த வருடம் வரப்போவதில்லை, 2019-தான் என்று வேறு ஒரு செய்தியையும் வெளியிட்டது HBO நிறுவனம். அடுத்த வருடம் என்றவுடன், எந்த மாதம் என்று அறிய அனைவரும் காத்திருந்தனர். வழக்கமாக புதிய சீசனுக்கு ஒரு புதிய போஸ்டர் வெளியிடப்பட்டு, அதில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும். அந்த போஸ்டருக்காக அனைவரும் காத்திருக்க, அதற்கு முன்பாகவே ரசிகர்களிடம் நற்செய்தியைப் பகிர்ந்திருக்கிறார் அந்தத் தொடரில் நடிக்கும் மைசி வில்லியம்ஸ் (Maisie Williams).

‘கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ - ஆர்யா ஸ்டார்க்

Photo Courtesy: HBO

ஆர்யா ஸ்டார்க் (Arya Stark) என்ற கதாபாத்திரத்தில் வீரமான, முற்போக்கு குணமுடைய பெண்ணாகத் தோன்றும் இவருக்கு என்று தனி ரசிகர் கூட்டமே உண்டு. 20 வயதான இவர், மெட்ரோ நியூஸ் ஊடகத்துக்கு அளித்துள்ள பேட்டியில், ``2018 டிசம்பர் இறுதியில் எட்டாவது மற்றும் இறுதி சீசனுக்கான ஷூட்டிங் முடிக்கப்படும். அதன் பிறகு நான்கு மாதங்கள் கழித்து ஏப்ரல் 2019ன்போது அது தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும்” என்று தெரிவித்துள்ளார்.

“நான்கு மாத இடைவெளியில் எப்படி எடிட்டிங் மற்றும் VFX செய்வார்கள் என்று யாரும் அஞ்ச வேண்டாம். சரியான திட்டமிடலுடன் அவசரமின்றிதான் எல்லாக் காரியங்களும் அரங்கேறுகின்றன” என்று உடனே எழுந்த சந்தேகங்களையும் தீர்த்துவைத்துள்ளார்.

இந்த நாடகம் ஆரம்பிக்கப்பட்ட 2011-ம் ஆண்டிலிருந்தே வருடா வருடம் புது எபிசோடுகளுடன் கூடிய புது சீசனை அதன் தயாரிப்பாளர்கள் வெளியிடத் தவறியதே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க