Published:Updated:

உதிர்ந்த ஆப்பிள்!

ந.வினோத்குமார்

உதிர்ந்த ஆப்பிள்!
##~##

ரு சகாப்தம் தன் மூச்சை நிறுத்திக் கொண்டது!

ஆப்பிள் நிறுவனத்தின் 'மாஸ்டர் பிரைன்’ ஸ்டீவ் ஜாப்ஸ் புற்றுநோயால் இறந்து விட்டார். 'உள்ளங்கைக்குள் உலகத்தைக் கொண்டுவந்துவிட்டோம்’ என்று மைக்ரோசாஃப்ட், கூகுள் போன்றவை எல்லாம் இறுமாந்திருந்த காலம். 'உங்கள் விரல் நுனியில் உலகத்தைக் கொண்டுவந்து இருக்கிறோம்’ என்று பறைசாற்றினார், ஆப்பிள் நிறுவனத் தின் ஸ்டீவ் ஜாப்ஸ்!  

1976... பிற்காலத்தில் தகவல் தொழில்நுட்பத்தில் பெரும் புரட்சியை ஏற்படுத்திய 'ஆப்பிள்’ நிறுவனம், ஸ்டீவ் ஜாப்ஸின் வீட்டு கார் ஷெட்டில் இருந்து உதயமானதே ஒரு கலர்ஃபுல் கதைதான். அமெரிக்காவின் ஓரிகன் மாகாணத்தில் இருந்த ரீட் கல்லூரியில் பட்டப் படிப்பு படிக்கச் சேர்ந்தார். வறுமை காரணமாக ஒரே ஒரு செமஸ்டரோடு காலேஜில் இருந்து வெளியே வந்துவிட்டார். நண்பர்களின் அறைகளில் தரையில் உறங்கி, காலி கோக் பாட்டில்களை விற்று சாப்பிட்டுக்கொண்டு இருந்தார். அவர் திருப்தியாகச் சாப்பிடு வதே வார இறுதியில் உள்ளூரில் இருந்த 'ஹரே கிருஷ்ணா’ கோயிலில் போடப்படும் அன்னதானத்தின்போதுதான்!

உதிர்ந்த ஆப்பிள்!

தொடர் தோல்வியாலோ என்னவோ கொஞ்சம் பணம் சேர்த்து, இந்தியா வந்து புத்த மதத்தைத் தழுவி மொட்டை அடித் துக்கொண்டார். பின்னர், இந்து மதத்துக்கு மாறினார். எல்லாம் துறந்து வீடியோ கேம்ஸ் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்தார்.  பேசிய சம்பளத்தை முதலாளி கொடுக்காததால் வெளியேறி... இறுதியாக 'ஆப்பிள்’ நிறுவனத்தைத் தன் நண்பர் ஸ்டீவ் வோஸ்னியாக்குடன் சேர்ந்து தொடங்கினார். அப்போது அவருக்கு 21 வயது. 25 வயதில் 200 மில்லியன் டாலர்களுக்கு அதிபதி ஆகிவிட்டார். 'டைம்’ இதழின் அட்டைப் படத்தில் இடம் பிடித்தபோது, அவரது வயது 26. 'உன் மீதி வாழ்க்கையை சர்க்கரைத் தண்ணீரை விற்பதிலேயே கழிக்கப்போகிறாயா அல்லது என்னுடன் வந்து இந்த உலகத்தை மாற்றப்போகிறாயா?’ என்று கேட்டு, பெப்ஸி நிறுவனத்தில் இருந்த ஜான் ஸ்கல்லியைத் தன் நிறுவனத்துக்கு சி.இ.ஓ. ஆக்கினார். அதே ஜான் ஸ்கல்லியால் ஆப்பிள் நிறுவனத்தைவிட்டுத் துரத்தப்படும்போது ஸ்டீவுக்கு வயது 30.

''மீண்டும் முதலில் இருந்து ஆரம்பிப் பதன் மூலம்தான் வெற்றி, தோல்வி இரண்டில் இருந்தும் விலகி நிற்க முடியும்’ என்று 'நெக்ஸ்ட் கம்ப்யூட்டர்’ என்ற ஒரு நிறுவனத்தை ஆரம்பித்தார் ஸ்டீவ் ஜாப்ஸ். அதே காலத்தில், வேறு ஒருவரிடம் இருந்து வாங்கிய கிராஃபிக்ஸ் நிறுவனத்தை 'பிக்சர்’ என்று பெயர் மாற்றி நடத்த ஆரம்பித்தார். 'டாய் ஸ்டோரி’, 'தி இன்க்ரெடிபிள்ஸ்’, 'வால்-இ’ போன்ற பாக்ஸ் ஆபீஸ் ஹிட் அனிமேஷன் திரைப்படங்களைத் தயாரித்து, அனிமேஷன் படங்களுக்கான ஆஸ்கர் விருதுகளை வென்றார்.

'நெக்ஸ்ட் கம்ப்யூட்டர்’ வளர்வதைக் கண்ட ஆப்பிள் நிறுவனம் 'நெக்ஸ்ட்’டை வாங்கிக்கொள்வதாக அறிவித்தது. இதன் மூலம் மீண்டும் ஆப்பிள் நிறுவனத்துக்கு சி.இ.ஓ-வாக அமர்ந்தார். அதன் பிறகு நடந்தது எல்லாம் வரலாறு!

ஐ-பாட், ஐ-டியூன், ஐ-போன் எல்லாவற்றுக்கும் பிதாமகன்... ஸ்டீவ் ஜாப்ஸ்தான்!  எல்லாவற்றையும் தாண்டி, அவரை வியந்து பார்ப்பதற்கான முக்கியக் காரணம், அவரின் மேனேஜ்மென்ட் ஸ்டைல்.

'எதையும் எப்போதும் யார் மாதிரியும் செய்யாமல் புது மாதிரியாகச் செய்ய வேண்டும்!’ இதுவே அவரின் பிசினஸ் தத்துவமாக இறுதி வரை இருந்தது. இந்த விதி பல வெற்றிகளைக் கொண்டுவந்தாலும், பங்குச் சந்தை சரிவு, ஊழியர்கள் இழப்பு எனக் கூடவே தோல்விகளையும் துயரங் களையும் கொடுத்தது.

ஆப்பிள் நிறுவன அலுவலகத்தில் இருக்கிற கார் பார்க்கிங்கில் யாரெல்லாம் குறித்த நேரத்துக்குள் வருகிறார்களோ, அவர்களுக்கே பார்க்கிங்கில் நிறுத்த இடம் கிடைக்கும். எவ்வளவு உயர் அதிகாரியாக இருந்தாலும் லேட் என்றால், பார்க் செய்ய இடம் கிடைக்காது. ஆனால், ஸ்டீவ் ஜாப்ஸ் லேட்டாக வந்தால், மாற்றுத் திறனாளிகளின் பார்க்கிங் ஏரியாவில் கருணையே இல்லாமல் காரை பார்க் செய்வார். இப்படி ஒரு குணாதிசயத்தோடு இருந்தவர் ஸ்டீவ்!  

ஆப்பிள் தயாரிக்கும் ஒரு ஐ-போனில் பொருத்தப்பட்டு இருக்கும் ஆணிகள் கண்களுக்கே தெரியக் கூடாது; அந்த அளவு நுண்ணியதாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்த்தார். அப்படி வராதபோது, ஊழியர்களை அழும் அளவுக்குத் திட்டித் தீர்த்தார்.  'ஆனால், அத்தனைக்குப் பிறகும் சந்தையில் பொருள் வெற்றியடையும்போது, 'ஸ்டீவ் செய்தது சரிதான்’ என்று நாங்கள் உணர்ந்துகொள்வோம்!’ என்கிறார்கள் ஆப்பிள் ஊழியர்கள்.

ஸ்டீவைக் கோபித்துக்கொண்டு நிறைய பேர் ஆப்பிளைவிட்டு வெளியேறி இருக்கிறார்கள். ஆனால், அவர்கள் யாரும் இன்று சொல்லிக்கொள்ளும்படி வளரவில்லை. எல்லாம் நல்லபடியாக போய்க்கொண்டு இருந்த சமயத்தில்... ஸ்டீவுக்கு வந்த புற்றுநோய் உயிரைக் குடித்து அடங்கியிருக்கிறது.

நியூட்டன் தலையில் விழுந்த ஓர் ஆப்பிள்தான், அறிவியல் உலகத்துக்கான வாசலைத் திறந்துவிட்டது. இன்று தகவல் தொழில்நுட்பத் துறையின் புரட்சிக்குக் காரணம், ஸ்டீவ் ஜாப்ஸின் மூளையில் முளைத்த ஓர் 'ஆப்பிள்’தான்!