வெளியிடப்பட்ட நேரம்: 17:00 (05/02/2018)

கடைசி தொடர்பு:17:00 (05/02/2018)

சினிமா ஃபைனான்ஸியர் போத்ரா வழக்கு..! நடிகர் ரஜினிகாந்த் பதில் மனு

ஃபைனான்ஸியர் போத்ராவின் மனுவை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று நடிகர் ரஜினிகாந்த் சார்பில் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

திரைப்பட இயக்குநர் கஸ்தூரி ராஜா மீது பணம் கொடுக்கல் வாங்கல் விவகாரம் தொடர்பாக சினிமா ஃபைனான்ஸியர் போத்ரா ஏற்கெனவே எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த மனுவில், நடிகர் ரஜினிகாந்த்தின் பெயரையும் குறிப்பிட்டிருந்தார். அந்த வழக்கில் ரஜினிகாந்திடமும் எழும்பூர் நீதிமன்றம் விளக்கம் கேட்டிருந்தது. ரஜினிகாந்த் தரப்பிலிருந்து விளக்கம் அளிக்கப்பட்ட நிலையில், அந்த வழக்கு எழும்பூர் நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்தநிலையில், அதுதொடர்பான வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றத்தில் ஃபைனான்ஸியர் போத்ரா சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இதற்கு நடிகர் ரஜினிகாந்த் சார்பில் பதில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில், 'எழும்பூர் நீதிமன்றம் தள்ளுபடி செய்த இந்த வழக்கை மீண்டும் விசாரிப்பது உகந்தது அல்ல. போத்ரா, சுத்தமான கரங்களுடன் நீதிமன்றத்தை நாடவில்லை. எழும்பூர் நீதிமன்றத்தில் நான் அளித்தத் தகவலைப் போத்ரா மறைத்துள்ளார். எழும்பூர் நீதிமன்றத்தில் போத்ரா ஆஜராகாத நிலையில், அவரது மனு தள்ளுபடி செய்யப்பட்டது. எனவே, போத்ராவின் மனுவை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும்' என்று குறிப்பிட்டுள்ளார்.