விஷாலைக் கண்டித்து திரையரங்க உரிமையாளர்கள் சங்க கூட்டத்தில் தீர்மானம் ..!

விஷாலைக் கண்டித்து திரையரங்க உரிமையாளர்கள் சங்கக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது தமிழ் திரையுலகில் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.

திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம்

ஜி.எஸ்.டி. வரி மற்றும் உள்ளூர் கேளிக்கை வரியால் உயர்ந்துள்ள தியேட்டர் கட்டணங்கள் மற்றும் திருட்டு வி.சி.டி மற்றும் இணையப் பதிவேற்றங்கள் போன்ற பல்வேறு பிரச்னைகளை திரையுலகம் சந்தித்து வருகிறது. இத்தகையப் பிரச்னைகளுக்கு தீர்வு காணும்படி பலமுறை அரசிடம் வலியுறுத்தியும் தீர்வு கிடைக்காததால், மார்ச் 1 ஆம் தேதி முதல் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாகவும், அன்றைய தினம் முதல் தமிழ்ப் படங்களின் படப்பிடிப்பு, வெளியீடு இல்லை எனவும் தெரிவித்தனர். இந்நிலையில் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்க அவசர கூட்டம் நடந்தது.

அச்சங்கத்தின் மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில் நடந்த இக்கூட்டத்தில், தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தின், மாநிலப் பொதுச் செயலாளர் பன்னீர் செல்வம் உள்ளிட்ட முன்னணி நிர்வாகிகளும், தமிழகம் முழுவதுமிருந்து திரையரங்க உரிமையாளர்களும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். மேலும் இந்தக் கூட்டம் நடந்துகொண்டிருக்கும் போதே, சங்க உறுப்பினர்களிடையே கருத்து வேறுபாடு காரணமாக வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது. மேலும் தீர்மானங்கள் வாசிக்கும் முன்பாக தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தில் உறுப்பினராக இல்லாத ஒருவரால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. இதில் கடுப்பான தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தின், மாநிலப் பொதுச் செயலாளர் பன்னீர் செல்வம் கூட்டத்தை விட்டு வெளியேறினார். இறுதியாக நிர்வாகிகளிடையே சமரசம் ஏற்பட்டது. 

அப்போது சங்க கூட்டத்தில், “திரையரங்குகளுக்குத் தமிழக அரசு விதித்துள்ள 8 சதவிகித கேளிக்கை வரியை முழுமையாக ரத்துசெய்யவேண்டும். திரை அரங்குகள் தொடர்பான விவகாரங்களில் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் தலையிட்டு கருத்துக்கள் கூறுவதற்குக் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. அத்துடன் வரும் மார்ச் 1-ம் தேதி முதல் ஜி.எஸ்.டி. வரி மற்றும் உள்ளூர் கேளிக்கை வரியால் உயர்ந்துள்ள தியேட்டர் கட்டணங்கள் மற்றும் திருட்டு வி.சி.டி மற்றும் இணையப்பதிவேற்றங்கள் போன்ற பல்வேறு பிரச்னைகளுக்கு எதிராகத் தயாரிப்பாளர் சங்கம் நடத்தும் வேலை நிறுத்தத்தில் தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் கலந்துகொள்ளப்போவதில்லை உள்ளிட்ட ஐந்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


இந்தக் கூட்டத்தில் நடிகர் விஷாலுக்கு எதிராகவும், தயாரிப்பாளர் சங்கம் நடத்தும் வேலை நிறுத்தத்தில் கலந்துகொள்வதில்லை எனத் தீர்மானம் போட்டதும் தமிழ் திரையுலகில் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!