Published:Updated:

ஜல்லிக்கட்டுக்கு இணையாக நீட் எதிர்ப்புப் போராட்டம்! இயக்குநர் கௌதமன் பேட்டி

கே.குணசீலன்
ஜல்லிக்கட்டுக்கு இணையாக நீட் எதிர்ப்புப் போராட்டம்! இயக்குநர் கௌதமன் பேட்டி
ஜல்லிக்கட்டுக்கு இணையாக நீட் எதிர்ப்புப் போராட்டம்! இயக்குநர் கௌதமன் பேட்டி

தமிழகத்துக்கு நீட் தேர்விலிருந்து நிரந்தரமாக விலக்கு அளிக்க வேண்டும். அதற்காக, தமிழக எம்.பி-க்கள் 58 பேரும் போராட வேண்டும்  போராடவில்லை என்றால், ஜல்லிகட்டுக்கு நடந்த போராட்டம் போல நீட்டுக்கும் தமிழகத்தில் மாணவர்களைத் திரட்டி, பெரும் போராட்டத்தை நடத்துவோம் என இயக்குநர் கௌதமன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் உள்ள அனைத்து மருத்துவக் கல்லூரிகள் கூட்டமைப்பு, தமிழர் உரிமைக்கான மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் கூட்டமைப்பு சார்பில், நீட் தேர்விலிருந்து நிரந்தர விலக்கு வேண்டி, நெடும்பயணத்தை தஞ்சாவூரிலிருந்து தொடங்குகிறோம். இதில், தமிழக மக்களவை மற்றும் மாநிலங்களவை எம்.பி-க்கள் 58 பேரிடமும் நீட் தேர்வை நிரந்தரமாக ரத்துசெய்ய வலியுறுத்தி மனு கொடுக்க இருக்கிறோம். முதல் கட்டமாக தஞ்சாவூர் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் பரசுராமனிடம் மனு கொடுத்திருக்கிறோம். நாங்க ஓட்டு போட்டு இவர்களை எம்.பி-க்களாக பாராளுமன்றத்துக்கு அனுப்பினோம். இன்றைக்கு நீட் தேர்வு என்கிற எமனால் கிராமப்புறம் மற்றும் மலைவாழ் மாணவர்கள், ஏழை விவசாயிகளின் பிள்ளைகள் என யாரும் டாக்டர்கள் ஆக முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எதிர்கால தலைமுறையினர் ரோட்டில் நிற்கும் நிலையில்தான் உள்ளனர். இது, மருத்துவப் படிப்புக்கு மட்டும் இல்லை, இனி எந்தப் படிப்பாக இருந்தாலும் இந்த நிலைதான் ஏற்படப்போகிறது.


இதனால், தமிழகத்தில் உள்ள அனைத்துக் கல்லூரிகளிலும் பிற மாநில மாணவர்கள் சேர்ந்து படிப்பதோடு, நம் மண்ணையும் ஆக்கிரமிப்பு செய்யப்போறாங்க. இது, தமிழகத்தை அழிக்கும் இந்திய அதிகார வர்க்கத்தோட சதித் திட்டம். 58 எம்.பி-க்களும் சேர்ந்து பிரதமரை சந்தித்து, தமிழகத்தில் நீட் தேர்வை நிரந்தரமாக ரத்துசெய்ய வலியுறுத்துங்க. தமிழக சட்டமன்றத்தில் நீட்டுக்கு எதிராக இரண்டு முறை தீர்மானம் நிறைவேற்றபட்டு, பிரதமர் அலுவலகத்துக்கு அனுப்பப்பட்டிருக்கிறது. பிரதமர், அந்தத் தீர்மான காப்பியை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி, நீட் தேர்விலிருந்து விலக்கு அளித்து நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால், அந்தத் தீர்மானத்தை குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டார்.

இது, இந்திய இறையாண்மைக்கு எதிரான செயல். ஆந்திர எம்.பி-க்கள் ஒன்றாக இணைந்து, தங்கள் மாநில வளர்ச்சிப் பணிக்காக  12 ஆயிரம் கோடி  நிதி கேட்டு, நாடாளுமன்றத்தில் கடும் அமளி செய்து பெற்றார்கள். அதேபோல 58 எம்.பி-க்களும் நீட் தேர்விலிருந்து நிரந்தரத் தீர்வு கேட்டு போராடிப் பெற வேண்டும். அவர்கள் செய்வார்கள் என்று நம்புகிறோம். அப்படி இல்லை என்றால், தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு நடந்த போராட்டம்போல நீட் தேர்வு நடக்க இருக்கும் 10 தினங்களுக்கு முன் மாணவர்களைத் திரட்டி, பெரிய அளவில் போராட்டம் நடத்துவோம். எங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை என எச்சரித்துப் பேசினார்.