Published:Updated:

''சாவித்ரி பட விஷயத்துல நடிகை ஜமுனா அப்படிச் சொல்லியிருக்கக் கூடாது!'' - செளகார் ஜானகி

ஆ.சாந்தி கணேஷ்
''சாவித்ரி பட விஷயத்துல நடிகை ஜமுனா அப்படிச் சொல்லியிருக்கக் கூடாது!'' - செளகார் ஜானகி
''சாவித்ரி பட விஷயத்துல நடிகை ஜமுனா அப்படிச் சொல்லியிருக்கக் கூடாது!'' - செளகார் ஜானகி

மிழ்த் திரையுலகில் நடிப்புச் சுடராக வலம் வந்தவர் சாவித்ரி. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் எனப் பல மொழி ரசிகர்களின் மனங்களைக் கவர்ந்தவர். பங்களாக்கள், கார்கள், நகைகள் என செல்வச் செழிப்பின் உச்சத்தில் இருந்தார். அதன்பிறகு, படத் தயாரிப்பில் இறங்கினார். அதில் சந்தித்த பொருளாதார இழப்பு, வருமான வரி பிரச்னை போன்றவற்றால் வறுமையின் பாதாளத்தையும் சந்தித்தார். இந்த நடிப்புத் தேவதையின் இறுதிக் காலம் எப்படி இருந்தது என்பது அனைவருமே அறிந்தது. இந்த நிலையில், நடிகையர் திலகம் சாவித்ரியின் வாழ்க்கையை, தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் இயக்கிவருகிறார், நாக் அஸ்வின். தமிழில் 'நடிகையர் திலகம்' என்கிற அவருடைய பட்டப்பெயரிலும், தெலுங்கில் 'மகாநதி' என்ற பெயரிலும் சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு உருவாகிவருகிறது. 

அந்தப் படத்தில், சாவித்ரி கதாபாத்திரத்தில், நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். இந்தச் சமயத்தில், சாவித்ரியுடன் நடித்த நடிகைகளில் ஒருவரான ஜமுனா, ''சாவித்ரியுடன் நெருங்கிப் பழகி நடித்தவர்களில் நான் மட்டுமே உயிருடன் இருக்கிறேன். எனக்குத்தான் அவர் தொடர்பான நிறைய தகவல்கள் தெரியும். என்னிடம் அவரைப் பற்றிக் கேட்காமல் அவர் வாழ்க்கையை எப்படிப் படமாக்கலாம்?'' என்று கேள்வி எழுப்பி, சினிமாத்துறையின் ஒட்டுமொத்த கவனத்தையும் தன் பக்கம் திருப்பியிருக்கிறார். இது சர்ச்சையை எழுப்பியுள்ளது. இதுகுறித்து கருத்து அறிய சாவித்ரி காலத்தில் நடித்தவர்களைத் தொடர்புகொண்டோம். 

ஜமுனா கருத்து பற்றி நகைச்சுவை நடிகை சச்சு பேசுகையில், ''தெலுங்குத் திரையுலகில் இன்றும் மரியாதையாக நினைக்கப்படுபவர், சாவித்ரி அம்மா. எனக்குத் தெரிந்தவரை, செளகார் ஜானகி அம்மாவுக்குத்தான் சாவித்ரி அம்மாவைப் பற்றி நிறைய தெரியும்'' என்றார். எனவே, புட்டபர்த்தியில் இருக்கும் செளகார் ஜானகியைத் தொடர்புகொண்டோம். ''என் தங்கை கிருஷ்ணகுமாரி இறந்ததிலிருந்து மனசே சரியில்லைம்மா. அதான் பாபாகிட்ட வந்துட்டேன்'' என்றவரிடம் நடிகை ஜமுனாவின் கருத்து பற்றிச் சொன்னோம். சில நிமிட அமைதிக்குப் பிறகு தொடர்ந்தார் செளகார் ஜானகி. 

''சாவித்ரிகூட நடித்தவர்களில் நானும் இன்னும் உயிரோடதாம்மா இருக்கேன். தவிர, ஒருத்தரின் வாழ்க்கை வரலாற்றையே படமாக எடுத்தாலும், அதில் இயக்குநரின் கற்பனையும் கொஞ்சம் சேரத்தான் செய்யும். சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கையைப் படமாக எடுத்தபோதும், இது மாதிரியான கருத்துகள் வரத்தானே செய்தது. சாவித்ரி விஷயத்தில், தனக்கு மட்டும்தான் அவர் பற்றி எல்லாம் தெரியும் என்று ஜமுனா சொல்லியிருந்தால், அது சரியான வார்த்தை கிடையாது. நானும் சாவித்ரியும் பல படங்களில் இணைந்து நடித்திருக்கோம்.  அவரும் நானும் 'ஆறத காய' என்ற கன்னடப்படத்தில் நடிக்கும்போதுதான் அவர் நிலைமை மிகவும் சீரியஸாகி, மருத்துவமனையில் சேர்த்தார்கள். அதன்பிறகு சாவித்ரி திரும்பி வரவே முடியாத உலகத்துக்குச் சென்றுவிட்டார். அதனால், அவருடைய கடைசிக் காலங்களில்கூட அவருடன் நான் நல்ல நட்புடன் இருந்திருக்கிறேன். அதனால்,  நிறைய விஷயங்களை மனம்விட்டுப் பேசியிருக்கோம்.

 அவுட்டோர் ஷூட் போகும்போதெல்லாம் நான் செல்ஃப் குக்கிங்தான். நான் சமைச்சதை இருவரும் சேர்ந்து சாப்பிட்டவாறு நிறைய பேசியிருக்கிறோம். பர்சனல் விஷயங்களைப் பேசும்போது, 'உன்னை மாதிரி தைரியம் எனக்கு வராது' என்று அடிக்கடி சொல்வார். சாவித்ரி வாழ்ந்தது, வீழ்ந்தது எல்லாருக்கும் தெரியும். அவர் பற்றிய படம் எடுப்பது குறித்து என் கருத்தைக் கேட்டால், எடுக்கவே வேண்டாம் என்றுதான் சொல்வேன். சாவித்ரி எதனால் வீழ்ந்தார், எப்படியெல்லாம் வீழ்ந்தார் என்று அவர் வாழ்க்கையின் சோகமான பக்கங்களை எல்லாம் சொல்ல வேண்டியிருக்கும். இறந்துவிட்ட ஒருவர் பற்றி ஏன் கிளற வேண்டும்?'' என்றார் செளகார் ஜானகி.