
குடும்பத்துடன் ஹோலி கொண்டாடிய ரஜினிகாந்த்!
நடிகர் ரஜினிகாந்த், குடும்பத்தினருடன் ஹோலிப் பண்டிகை கொண்டாடியுள்ளார்.
வடமாநிலப் பண்டிகையான ஹோலி எனும் வண்ணங்கள் திருவிழா, நாடு முழுவதும் இன்று உற்சாகமாகக் கொண்டாடப்பட்டுவருகிறது. மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ஹரியானா முதல்வர் மனோகர் லால் எனப் பலரும் ஹோலிப் பண்டிகையைக் கொண்டாடி வருகின்றனர். காலை முதலே முக்கிய இடங்களில் கூடிய பொதுமக்கள், ஒருவருக்கொருவர் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டு ஹோலியைக் கொண்டாடிவருகின்றனர். இதேபோல ஜம்மு-காஷ்மீர் பகுதியில் உள்ள ராணுவ வீரர்களும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், வடமாநிலங்களில் உற்சாகம் பெருக்கெடுத்துள்ளது. ஹோலியை முன்னிட்டு, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி மற்றும் துணை ஜனாதிபதி வெங்கைய நாயுடு எனப் பல தலைவர்கள், மக்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்திலும் சென்னை, தேனி என ஆங்காங்கே ஹோலிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதற்கிடையே, நடிகர் ரஜினிகாந்த்தும் ஹோலிப் பண்டிகையைக் கொண்டாடியுள்ளார். குடும்பத்தினருடன் அவரது வீட்டில் ஹோலி கொண்டாடட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இந்தப் புகைப்படத்தை அவரது மகள் சவுந்தர்யா அவரது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், " 'காலா' சூப்பர் ஸ்டாரான என் அப்பாவுடன் ஹோலியைக் கொண்டாடிவருகிறேன்" என பதிவிட்டுள்ளார். இது, தற்போது இணையத்தில் வைரலாகப் பரவிவருகிறது. முன்னதாக, இன்று வெளியாகியுள்ள 'காலா' டீஸர், சில மணி நேரங்களிலேயே பல மில்லியன் லைக்குகளைp பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.