வெளியிடப்பட்ட நேரம்: 09:17 (04/03/2018)

கடைசி தொடர்பு:10:15 (04/03/2018)

`காலாவைத் தொடர்ந்து 2.0 டீசரும் லீக்கானது!’ - படக்குழு அதிர்ச்சி

ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள 2.0 படத்தின் டீசர் இணையத்தில் சட்டவிரோதமாக பதிவேற்றப்பட்டது படக்குழுவினரை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.  


சிவாஜி, எந்திரன் படங்களைத் தொடர்ந்து இயக்குநர் ஷங்கர்-ரஜினி காம்போவில் ஹாட்ரிக் அடிக்கும் முனைப்பில் தயாராகி வரும் படம் 2.0. இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. மெகா பட்ஜெட்டில் இந்தப் படம் தயாரிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, பாலிவுட்டின் அக்‌ஷய் குமார் மற்றும் எமி ஜாக்சன் உள்ளிட்டோர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்தாண்டு ஏப்ரல் மாதத்தில் படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தொழில்நுட்பப் பணிகள் முடிய கூடுதல் கால அவகாசம் தேவைப்படுவதாகக் கூறி ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டிருக்கிறது. 
இந்தநிலையில் 1.27 நிமிடங்கள் ஓடும் 2.0 படத்தின் டீசர் இணையத்தில் சட்டவிரோதமாகப் பதிவேற்றம் செய்யப்பட்டது படக்குழுவினரை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. இதையடுத்து உடனடியாக அந்த வீடியோ யூடியூபில் இருந்து நீக்கப்பட்டது. மிகப்பெரும் பொருட்செலவில் தயாரிக்கப்பட்டு வரும் இந்த படத்தின் பாடல்களும், அதிகாரப்பூர்வ ரிலீஸுக்கு முன்பாகவே வாட்ஸ் அப்பில் லீக்கானது. அதேபோல், ரஜினி நடித்துள்ள காலா படத்தின் டீசரும் இணையத்தில் லீக்காகியிருந்தது குறிப்பிடத்தக்கது.  

இணையத்தில் வெளியாகி இருக்கும் காட்சிகளும் டீசர் போல் இல்லை. டெம்ப் கிராபிக்ஸ் (முழுமைபெறாத கிராபிக்ஸ்) காட்சிகள் போலவே இருக்கிறது. புரமோஷனுக்காக இந்த காட்சிகள் காட்சிப்படுத்தப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. சன் டிவியில் இன்று மாலை ஒளிபரப்பாக இருக்கும் ஆனந்த விகடன் சினிமா விருதுகள் நிகழ்ச்சியில் இயக்குநர் ஷங்கர், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் முன்னிலையில் 2.0 கிராபிக்ஸ் மேக்கிங் காட்சிகள் வெளியிடப்பட இருக்கின்றன.