வெளியிடப்பட்ட நேரம்: 18:20 (20/03/2018)

கடைசி தொடர்பு:18:20 (20/03/2018)

விஜய் படத்துக்கு மட்டும் சிறப்பு அனுமதியா? தயாரிப்பாளர் சங்கச் செயலாளர் விளக்கம்

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய் நடிக்கும் படத்துக்கு மட்டும் சிறப்பு அனுமதி அளிக்கப்படவில்லை என்று தயாரிப்பாளர் சங்கத் தலைவர் துரைராஜ் தெரிவித்துள்ளார். 

திரைப்படங்களை டிஜிட்டல் முறையில் ஒளிபரப்பும் நிறுவனங்களின் கட்டணம் அதிகமாக இருப்பதாகக் கூறி, மார்ச் 1-ம் தேதி முதல் புதுப்படங்கள் எதையும் ரிலீஸ் செய்யமால் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் போராட்டத்தில் ஈடுபட்டுவருகிறது. இந்தநிலையில், தற்போது 16-ம் தேதியிலிருந்து படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளும் நிறுத்தப்பட்டுள்ளன.

இந்தநிலையில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய் நடிக்கும் 'தளபதி 62' படத்தின் ஷூட்டிங் நடைபெற்றுவருகிறது. விஜய் படத்துக்குச் சிறப்பு அனுமதியா என்று குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து விளக்கமளித்து தயாரிப்பாளர் சங்கச் செயலாளர் எஸ்.எஸ்.துரைராஜ் ஒரு ஆடியோ பதிவை வெளியிட்டுள்ளார். அதில், `ஸ்டிரைக் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெறும்போதே, தேவைப்படும் பட்சத்தில் படத் தயாரிப்புக்கு ஒருநாள் அல்லது இரண்டு நாள்கள் பெர்மிஷன் கொடுக்கலாம் என்று முன்னரே முடிவு செய்திருந்தோம்.

அதனடிப்படையில் விஜய் நடிக்கும் படத்தின் ஷூட்டிங்கை இரண்டு நாள்கள் நடத்துவதற்கு சன் பிக்சர்ஸ் அனுமதி கேட்டு விண்ணப்பித்திருந்தது. அதேபோல சமுத்திரக்கனியும் 23, 24 ஆகிய இரு தேதிகளில் சூட்டிங் நடத்திக்கொள்ள அனுமதி கேட்டு  விண்ணப்பிருந்திருந்தார். மேற்கூறியவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதேபோல, மேலும் ஒரு சில நிறுவனங்களும் ஒரு சில நாள்கள் சூட்டிங் நடத்த அனுமதிக்கப்பட்டுள்ளது. எனவே, விஜய் படத்துக்கு மட்டும் சிறப்பு அனுமதி அளிக்கப்பட்டதுபோல தவறான கருத்துகளைப் பரப்பவேண்டாம்' என்று கேட்டுக்கொண்டுள்ளார்.