Published:Updated:

ஏகாதிபத்தியத்திடம் வீழ்ந்த சர்வாதிகாரம்!

சமஸ்

ஏகாதிபத்தியத்திடம் வீழ்ந்த சர்வாதிகாரம்!

சமஸ்

Published:Updated:
##~##

'நான் சர்வதேசத் தலைவன்
அரபு ஆட்சியாளர்களின் முதல்வன்
ஆப்பிரிக்காவின் அரசன்
முஸ்லிம்களின் இமாம்!''

- புதைசாக்கடைக் குழாய்க்குள் பதுங்கி இருந்தபோது புரட்சிப் படைகளால் பிடிக்கப்பட்டு, ஒரு தெரு நாயைப் போல இழுத்துச் செல்லப்பட்ட லிபிய முன்னாள் அதிபர் மம்மர் கடாஃபியின் சடலத்தைப் பார்த்தபோது, அவர் தன்னைப் பற்றி பிரகடனப்படுத்திக்கொண்ட இந்த வார்த்தைகள்தான் ஞாபகத் துக்கு வருகின்றன!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உலகம் எத்தனையோ சர்வாதிகாரிகளைக் கண்டு இருக்கிறது. எனினும், கடாஃபி விசித்திரமானவர். அவருடைய தங்கக் காதல், வித்தியாசமான தோற்றம், பெண் மெய்க்காவலர்கள், விருந்தினர்களைச் சந்திக்க அவர் பயன்படுத்தும் கொட்டகைகள், சர்ச்சைக் கருத்துகள்... லிபியாவை 42 ஆண்டுகள் ஆட்டிப்படைத்த கடாஃபி இந்தத் தலைமுறைக்கு ஒரு கோமாளி சர்வாதிகாரியாகத் தெரியலாம். ஆனால், அவர் கொண்டாடப்பட்ட நாட்களும் உண்டு.

ஏகாதிபத்தியத்திடம் வீழ்ந்த சர்வாதிகாரம்!

செப்.1, 1969-ல் ஒரு சின்ன ராணுவக் குழுவின் உதவியுடன் அரண்மனையை முற்றுகையிட்டு, ரத்தம் இல்லாப் புரட்சியின் மூலம், மன்னர் இத்ரியாஸின் கொடுமையான ஆட்சியில் இருந்து லிபியாவை விடுவித்தபோது, லிபிய மக்கள் தங்கள் மீட்பராக கடாஃபியைப் பார்த்தார்கள். உலகின் 2 சதவிகித எண்ணெய் வளத்தைப் பெற்று இருக்கும் லிபியாவில் அமெரிக்க, ஐரோப்பிய எண்ணெய் நிறுவனங்களின் ஆதிக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைத்து, தேசிய எண்ணெய்க் கழகத்தின் கீழ் லிபிய எண்ணெய் வர்த்தகத்தைக் கொண்டுவந்தபோது, முதலாளித்துவ நாடுகள் சிம்ம சொப்பனமாக கடாஃபியைப் பார்த்தார்கள். பாலஸ்தீன விடுதலைக் குழுக்களில் தொடங்கி, அயர்லாந்து விடுதலைக் குழுக்கள் வரை உலகின் பல ஆயுதக் குழுக்களுக்கும் வெளிப்படையாக அவர் ஆதரவு அளித்தபோது, போராளிகள் ஆப்பிரிக்காவின் சே குவாராவாக கடாஃபியைப் பார்த்தார்கள்.

நாட்டில் வளர்ச்சித் திட்டங்களை முன்னெடுப்பதில் கடாஃபிக்கு என்று ஒரு பார்வை இருந்தது. கல்வியையும் சுகாதாரத்தையும் அரசின் முக்கியக் கடமைகளாக அவர் பார்த்தார். ஆப்பிரிக்காவிலேயே கல்வி கற்றவர்கள் விகிதத்தில் முன்னணியில் இருக்கும் நாடாக லிபியாவை மாற்றினார். தன்னுடைய முதல் 15 ஆண்டு ஆட்சிக் காலத்துக்குள் லிபியாவில் ஆயிரம் பேருக்கு ஒரு மருத்துவர் என்கிற மருத்துவக் கட்டமைப்பை உருவாக்கினார். ஒவ்வொரு லிபியனுக்கும் சொந்த வீடு என்ற அவருடைய கனவு, மண் குடிசைகளில் வாழ்ந்த ஆயிரக்கணக்கான லிபியர்களை சகல வசதிகளுடன் கூடிய வீடு களில் அமர்த்தியது.

சின்ன தொழில்கள் தனியார் வசமும் பெரிய தொழில்கள் அரசின் வசமும் இருக்க வேண்டும் என்பது அவருடைய முக்கிய மான பொருளாதார வியூகம். அது அவருக்கு வெற்றியைத் தந்தது என்றே சொல்ல வேண்டும். அதனால்தான், 2010-ல்கூட லிபியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10.6 சதவிகித வளர்ச்சியை அவரால் உருவாக்க முடிந்தது!

ஆனால், கடைசி வரை ஜனநாயகம் என்ற சொல்லுக்கு அர்த்தம் தெரிந்துகொள்ளாததால், தூக்கி எறியப்பட்டு இருக்கிறார் கடாஃபி. தன் மீதான விமர்சனங்களுக்கு அல்ல; மாற்றுக் கருத்துகளுக்கே இடம் அளிக்காதவராக அவர் இருந்தார். லிபியாவில் பொது இடங்களில் அரசைப் பற்றிப் பேசினாலே, அது கடுங்காவல் தண்டனைக்கு உரிய குற்றமாகக் கருதப்பட்டது. எதிர்க் கருத்துகளை முன்வைத்தவர்கள் குரூர மாகக் கொல்லப்பட்டார்கள்.  வெளிநாடுகளிலும் கூட லிபிய அரசுக்கு எதிராகப் பேசுபவர்களைக் கொல்வதற்கு என்றே அவர் பிரத்யேகக் கொலைக் குழுக்களை உருவாக்கி இருந்தார். போராட்டங்கள் கொடூரமாக நசுக்கப்பட்டன. ஊடகங்கள் முழுக்க முழுக்க கடாஃபியின் கட்டுப்பாட்டில் இருந்தன. லிபியாவில் ஊடகச் சுதந்திரம் எப்படி இருந்தது என்பதற்கு, 'எல்லைகள் அற்ற ஊடகவியலாளர் கள்’ அமைப்பு 2010-ல் வெளியிட்ட பட்டியலில் லிபியா 160-வது இடத்தில் இருந்தது ஒரு சான்று!

அரபு உலகத்தில் ஏற்பட்ட ஜனநாயகப் புயல் கடாஃபியின் சிம்மாசனத்தையும் நிர்மூலமாக்கி இருப்பதில் ஆச்சர்யம் இல்லை. ஆனால், லிபியப் புரட்சியின் பின்னணி, வரலாற்றில் மோசமான முன் உதாரணமாக மாறி இருக்கிறது. லிபியாவின் எண்ணெய் வளத்தைக் குறிவைத்து அமெரிக்க - ஐரோப்பிய நாடுகள் பின் நின்ற இந்தப் புரட்சி யில், முதல் முறையாக எண்ணெய் நிறுவனங்கள் நேரடியாக முக்கியப் பங்காற்றி இருக்கின்றன. பிரிட்டிஷ் நிறுவனமான 'வீடோல்’ இங்கிலாந்து அமைச்சர் ஆலன் டன்கன் மூலம்

ஏகாதிபத்தியத்திடம் வீழ்ந்த சர்வாதிகாரம்!

5,000 கோடியை லிபிய ஆயுதக் குழுக் களுக்கு அளித்து, லிபிய எண்ணெய்ச் சந்தையைக் கூறுபோட்டுக் கொண் டது ஓர் உதாரணம்.

ஜனநாயகத்துக்காக சர்வாதிகாரத்தை வீழ்த்தி ஏகாதிபத்தியத்திடம் சரண் அடைந்து இருக்கிறார்கள் லிபிய மக்கள். வேறு என்ன சொல்ல?