வெளியிடப்பட்ட நேரம்: 00:25 (08/04/2018)

கடைசி தொடர்பு:00:25 (08/04/2018)

சிறையில் இருந்து வெளியே வந்தார் சல்மான்!

மான் வேட்டை வழக்கில் கைதான சல்மான் கானுக்கு சிறை தண்டனை விதித்த நீதிபதியே, இன்று மதியம் இவருக்கு ஜாமீனையும் வழங்கினார். இதைத் தொடர்ந்து இன்று சாயங்காலம் சிறையில் இருந்து வெளியே வந்தார் சல்மான் கான்.

இரண்டு நாட்களுக்கு முன்பு மானை வேட்டையாடிய வழக்கில் சிறைக்குச் சென்றார் சல்மான் கான். ஐந்தாண்டு சிறை மற்றும் 10,000 ரூபாய் அபதாரமும் இவருக்கு விதிக்கப்பட்டது. மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய சாயிஃப் அலி கான், தபு, சோனாலி பிந்த்ரே, நீலம் ஆகியோரை விடுதலை செய்தது ஜோத்பூர் நீதிமன்றம். கடந்து இரண்டு தினங்களாக சிறையில் இருந்த சல்மான் கான், ஜாமீன் கேட்டு மனுத் தாக்கல் செய்திருந்தார்.

இன்று மதியம் மனுவை விசாரித்த நீதிபதி, சல்மான் கானுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். சல்மான் கானின் புகைப்படம் கொண்ட அட்டைகளைக் கையில் பிடித்தபடி ஆயிரக்கணக்கானோர் நீதிமன்றுத்துக்கு வெளியே காத்துக்கொண்டிருந்தனர். ஜாமீன் வழங்கப்பட்டது என்று தெரிந்ததும் சந்தோஷத்தில் `சல்மான் ஜிந்தாபாத்' என்று கோஷம் போடத் தொடங்கினர். மேலும், மே 7-ம் தேதியன்று கோர்ட்டில் ஆஜராகும்படியும், நீதிமன்ற அனுமதியில்லாமல் வெளிநாடு செல்லக்கூடாது என்றும் உத்தரவிட்டார். 

சிறையிலிருந்து வெளியே வந்ததும் சல்மானின் நூற்றுக்கணக்கான ரசிகர்கள் பட்டாசு வெடித்து மகிழ்ச்சியைக் கொண்டாடினர். மும்பை விமான நிலையத்திலும் ஒன்று திரண்ட ரசிகர்கள், சல்மான் வந்ததும் மீண்டும் கோஷமிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.