வெளியிடப்பட்ட நேரம்: 17:00 (08/04/2018)

கடைசி தொடர்பு:17:59 (08/04/2018)

சி.எஸ்.கே. கேப்டன் தோனிக்கு நடிகர் சிம்பு வைத்த கோரிக்கை! #WewantCMB

சி.எஸ்.கே. கேப்டன் தோனிக்கு நடிகர் சிம்பு வைத்த கோரிக்கை!  #WewantCMB

எந்த ஒரு பிரச்னையும் பேசினால்தான் தீரும்; மௌனப் போராட்டத்தில் எனக்கு நம்பிக்கை இல்லை என நடிகர் சிம்பு தெரிவித்துள்ளார். 

சிம்பு

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்தும், தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூடிட வலியுறுத்தியும் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் திரைத்துறையினர் சார்பில் அறவழிக் கண்டனப் போராட்டம் நடைபெற்றது. காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெற்ற அந்த போராட்டத்தில் நாசர், விஷால் உள்ளிட்ட நடிகர் சங்க நிர்வாகிகளும், இளையராஜா, ரஜினி, கமல், சத்யராஜ், விஜய், தனுஷ், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியின் முடிவில் பேசிய சத்யராஜ், ``காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தே ஆக வேண்டும். அடக்குமுறைகளுக்கு அஞ்ச மாட்டோம். ராணுவமே வந்தாலும் அஞ்ச மாட்டோம்’’ என்று ஆவேசமாகப் பேசினார். 

இந்தநிலையில், நடிகர் சங்கம் ஏற்பாடு செய்திருந்த போராட்டத்தில் கலந்துகொள்ளாதது குறித்து நடிகர் சிம்பு விளக்கமளித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சிம்பு, ``பேசினால்தான் பிரச்னை தீரும். மௌனப் போராட்டத்தில் எனக்கு நம்பிக்கை இல்லை. திரைத்துறையில் ஆயிரம் பிரச்னை இருக்கும்போது, பிற போராட்டங்களில் பங்கேற்பதில் எனக்கு அவ்வளவாக உடன்பாடில்லை. திரைத்துறை வேலைநிறுத்தத்தால் ஏராளமான தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். அந்த போராட்டத்துக்கு எனக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.
வாக்குகளுக்காகவே அரசியல் கட்சிகள் காவிரிப் பிரச்னையைக் கையில் எடுக்கிறார்கள். காவிரி நீரைத் தமிழகத்திற்குத் தரக் கூடாது என கர்நாடகாவைச் சேர்ந்த ஒரு சிலர் மட்டுமே எதிர்க்கிறார்கள். கர்நாடகா மக்கள் அனைவரின் கருத்து அதுவல்ல. காவிரி பிரச்னையை வைத்துதான் தமிழகம் மற்றும் கர்நாடகாவில் அரசியல் நடக்கிறது. 

சிம்பு

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் நடைபெறக் கூடாது என்று நான் கூறவில்லை. எங்களை ஐபிஎல் போட்டியின்போது எங்களை மைதானத்துக்குள் அனுமதித்துப் பாருங்கள் என்றுதான் நாங்கள் கேட்கிறோம். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் ஐபிஎல் களத்திற்கு வந்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. அதேபோல், சென்னை அணியின் கேப்டன், நமது தமிழ் மக்களின் மீதும், சென்னை மீது அளவுகடந்த பாசம் வைத்திருக்கிறார். காவிரி விவகாரத்தில் தோனி போராட வேண்டும் என்று நான் கூறவில்லை. அதேபோல், போட்டிகளை விளையாடாமல் புறக்கணிக்க வேண்டும் என்றும் நான் கூறவில்லை. எங்களுக்காக ஏதாவது ஒருவகையில் உங்கள் உணர்வுகளை வெளிப்படுத்துங்கள் தோனி என்றுதான் கேட்கிறேன். கையில் கருப்பு பேட்ஜ் அணிந்தோ அல்லது வேறு ஏதேனும் ஒருவகையில் தமிழ் மக்களுக்கு ஆதரவு தர வேண்டும்.

 

 

அரசியல் கட்சிகள் மட்டுமே தண்ணீர் தர முடியாது என்று பேசிவருகிறார்கள். கர்நாடகாவில் வாழும் தாய்மார்கள், தண்ணீர் தர முடியாது என்று கூறினால், நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். மாறாகத் தமிழகத்திற்குத் தண்ணீர் கொடுக்க வேண்டும் என அவர்கள் எண்ணினால், வரும் 11-ம் தேதி புதன்கிழமை மாலை 3 மணி முதல் 6 மணி வரை கர்நாடகாவில் உள்ள தமிழர் ஒருவருக்கு ஒரு கிளாஸ் தண்ணீர் கொடுங்கள் கர்நாடக மக்களே. அதன்மூலம் உங்கள் உணர்வுகளை நாங்கள் புரிந்து கொள்கிறோம். அப்படி கொடுக்கவில்லை என்றாலும், உங்கள் முடிவினை நாங்கள் தெரிந்துகொள்கிறோம்.  கர்நாடக மக்களிடம் இருக்கும் உணர்வு தமிழகத்தில் இல்லை’ என்றார்.